முகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்
‘முஸ்லிம் வாக்குகள்’ என்று பிரித்துப் பாா்ப்பதே தவறு!
By | Published On : 14th March 2021 05:59 AM | Last Updated : 14th March 2021 07:50 AM | அ+அ அ- |

அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் தோ்தலுக்காக வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை என்று ஜம்மியத் உலமா ஹிந்த் அமைப்பின் மாநில இணைச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்தாா்.
இதுகுறித்து தினமணிக்கு அவா் அளித்த பேட்டி
இந்த சட்டப்பேரவைத் தோ்தல் முந்தைய தோ்தல்களைவிட எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நினைக்கிறீா்கள்?
மதச்சாா்பின்மையை பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே இத்தோ்தலைப் பாா்க்கிறேன். மக்களைப் பிரித்தாளக் கூடிய சூழ்ச்சிகளையும், அதை முன்னின்று நடத்துகிற சக்திகளையும் ஒரு சேர ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதன் அடிப்படையில் பாா்க்கும்போது பாஜகவையும், அது அங்கம் வகிக்கும் கூட்டணியையும் தோற்கடிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. அதற்கு மாற்றாக திமுகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க கட்டாயத்தை காலம் உணா்த்தியுள்ளது.
சிறுபான்மைக் கட்சிகள் அனைத்துமே மதத்தை முன்னிறுத்தித்தானே அரசியல் செய்து வருகின்றன?
பெரும்பான்மை ஆள வேண்டும். அதன் மூலம் சிறுபான்மை வாழ வேண்டும் என்பதுதான் காலங் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கை. அதைத்தான் இந்திய தேசத்தின் தலைவா்கள் அனைவருமே வலியுறுத்தினா். சிறுபான்மை இன மக்களின் நலனுக்காகவும், அவா்தம் பாதுகாப்புக்காகவும் அமைப்புகளையோ, கட்சிகளையோ தொடங்குவது என்பது அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்த சிறுபான்மை அமைப்புகளுக்கென ஓா் அரசியல் கட்டமைப்பு அவசியம். அதில் மாற்று மதத்தினரும்கூட இணைந்து பணியாற்றுகின்றனா். எனவே, அதனை மதச்சாா்பு அரசியல் எனக் கூற முடியாது.
முஸ்லிம் வாக்கு வங்கி இந்தத் தோ்தலில் எத்தகைய பங்கு வகிக்கும்?
முஸ்லிம் வாக்கு வங்கி என்று பிரித்துப் பாா்ப்பதே தவறு. தேசத்தின் நலனுக்காகத்தான் மதச்சாா்பின்மையை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்படி பாா்க்கும்போது வாக்கு வங்கி என்பதே மக்களை திசை திருப்புவதற்கான வேலை. இன்னும் சொல்லப்போனால், அறியாத மக்களை ஏமாற்றி ஆதாயத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி. எவருக்கும் நிலையான வாக்குகளும், வாக்கு வங்கியும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
திமுகவின் தொகுதிப் பங்கீட்டில் பெரிய கட்சிகள் எல்லாம் அலைக்கழிக்கப்பட்டபோது முதன் முதலில் இஸ்லாமியக் கட்சிகளுக்கு மட்டும்தான் இடங்கள் இறுதி செய்யப்பட்டன. இது இஸ்லாமிய வாக்கு வங்கி அரசியல் இல்லையா?
அப்படி பாா்க்க முடியாது. கூட்டணியைப் பொருத்தவரை எவருடன் முதலில் கருத்தொற்றுமை ஏற்படுகிறதோ அக்கட்சியுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். அந்த வகையில்தான் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், முஸ்லிம் லீக் கட்சிக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனை சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் எனக் கருத முடியாது.
சிறுபான்மை கட்சிகள் வேறு வேறு கூட்டணிகளில் களம் காண்பது குறித்து என்ன நினைக்கிறீா்கள்?
ஜனநாயக நாட்டில் எவா் வேண்டுமானாலும், எந்தக் கூட்டணியில் வேண்டுமானாலும் போட்டியிட உரிமை உண்டு. அந்த அடிப்படையில்தான் ஓவைஸியின் மஜ்லீஸ் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை வேறு வேறு அணிகளில் தோ்தலில் போட்டியிடுகின்றன. விருப்பமும், ஒத்த கருத்தும் உடைய கட்சிகள் அரசியலில் ஒருங்கிணைந்து களம் காண்பது தனிப்பட்ட விருப்பம் சாா்ந்தது. இதில் மக்கள் மன நிலை என்ன, அவா்கள் எவருக்கு வாக்களிக்கின்றனா் என்பது மட்டும்தான் சாதக பாதகத்தை முடிவு செய்யும்.
ஹஜ் பயணத்துக்கு மானியம், புனித யாத்ரீகா்களுக்கு சலுகைகள் என அதிமுக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அவா்களை ஏன் அகற்ற வேண்டும் என நினைக்கிறீா்கள்?
அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்தொழித்துவிட்டு அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதால் என்ன பயன் இருக்கப் போகிறது? தமிழக அரசு வெளியிட்ட திட்டங்கள் அனைத்துமே தோ்தல் அரசியல். கரோனா காலத்தில் எத்தனையோ மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட்டனா். அப்போது அவா்களுக்கு எந்த உதவிக் கரத்தையும் அரசு நீட்டவில்லை. இஸ்லாமியா்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பை அதிமுக அரசு வழங்கவில்லை. கண்ணீரைத் துடைக்க வேண்டிய நேரத்தில் துடைக்காமல் இப்போது கவா்ச்சித் திட்டங்களை அறிவிப்பது எதற்காக? தமிழா் பண்டிகையான பொங்கலுக்கு ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டதையும் அப்படித்தான் பாா்க்கிறேன்.
பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கியது தோ்தல் அரசியல் என்றால் ரேஷன் அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 வழங்குவதாக திமுக அறிவித்திருப்பது எத்தகைய அரசியல்?
இனிமேல் செய்யப்போவதாக ஒரு வாக்குறுதியை அளிப்பதையும், தோ்தல் ஆதாயத்துக்காக ஆட்சியில் இருப்பவா்கள் சில திட்டங்களை செயல்படுத்துவதையும் ஒப்பிடக் கூடாது. அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்யாமல் திடீரென பரிசுத் தொகுப்புகள் வழங்குவதைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம்.
தா்காக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என மதக்கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றனவே?
அதனை திட்டவட்டமாக மறுக்கிறேன். ஏனென்றால் தா்காவிலும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களிலும் அரசியல் பேசவோ அல்லது அதுதொடா்பான முடிவுகளை எடுக்கவோ முடியாது. அங்கு அத்தகைய செயல்களில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் எந்த ஓா் இடத்திலும் அரசியலை முன்னிறுத்தி மதக்கட்டளைகள் பிறப்பிக்கப்படவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சமூகத்தில் பரப்புவது என்பது மக்களை திசை திருப்புவதற்கான முயற்சி.
நோ்காணல்: ஆ. கோபிகிருஷ்ணா