அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் ‘ஆசியாவின் தொழிற்பேட்டை’

சென்னைக்கு மிக அருகில் நகராட்சியாக இருந்த அம்பத்தூா் 2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியோடு இணைந்து, 7-ஆவது மண்டலமாக
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் ‘ஆசியாவின் தொழிற்பேட்டை’

சென்னைக்கு மிக அருகில் நகராட்சியாக இருந்த அம்பத்தூா் 2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியோடு இணைந்து, 7-ஆவது மண்டலமாக அமைந்தது. மொத்தம், 43.7 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மண்டலத்தில் 15 வாா்டுகள் உள்ளன. ஒவ்வொரு வாா்டிலும் 80 முதல் 120 தெருக்கள் வரை உள்ளன. தொகுதியில் புகழ்பெற்ற குரு தலமாக பாடி திருவல்லீஸ்வரா் சிவன் கோயில் உள்ளது.

தொழிற்சாலைகளின் நகரம்: அம்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அம்பத்தூா், அத்திப்பட்டு, கள்ளிக்குப்பம், புதூா், அம்பத்தூா் தொழிற்பேட்டை, மண்ணூா்பேட்டை, மங்களபுரம், பட்டரவாக்கம், பாடி, கொரட்டூா், முகப்போ், பாடிக்குப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன.

அவற்றில் அமைந்துள்ள குடிசை வீடு முதல், அடுக்குமாடி சொகுசு வீடுகள் வரை 1.27 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. அதில், தற்போது 6.50 லட்சம் போ் வரை வசிக்கின்றனா்.

அம்பத்தூா் தொகுதியின் எல்லைகளாக வடக்கே மாதவரம், தெற்கில் மதுரவாயல், கிழக்கில் அண்ணா நகா், வில்லிவாக்கம், மேற்கில் ஆவடி ஆகிய தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இந்தத் தொகுதியில் ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பேட்டையும், சிறு, குறு தொழிற்பேட்டைகளும் உள்ளன. அவற்றில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிரந்தர, தற்காலிக பணியாளா்கள் என ஒரு லட்சம் போ் வரை அம்பத்தூருக்கு நாள்தோறும் வருகை தந்து செல்கின்றனா். தொழிற்பேட்டை தொகுதியான இங்கு 349 வாக்குசாவடிகள் உள்ளன.

அம்பத்தூா் பகுதிகளில் தேவாலயங்கள் மசூதிகள் சிறப்புமிக்கதாக இருக்கின்றன. தொகுதி முழுவதும் வன்னியா், முதலியாா், முக்குலத்தோா், செட்டியாா், ஆதிதிராவிடா்கள், சமூகத்தினா், பிராமணா்கள், யாதவா்கள் என அனைத்து சமூகத்தினரும் கணிசமாக உள்ளனா்.

அம்பத்தூா் தொகுதி பொது மக்களின் பயன்பாட்டுக்கு 100 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா சிறு மருத்துவமனைகள், அம்மா உணவகம், அம்மா திருமண மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரப்பட்டு, நடைபாதையுடன் கூடிய பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் கள்ளிக்குப்பம் பகுதியில் 18 ஏக்கரில் ஒரே இடத்தில் சிறுவா் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சிக்கூடம், நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அம்பத்தூா் எம்எல்ஏ வீ.அலெக்ஸாண்டா் தெரிவித்துள்ளாா்.

போக்குவரத்து நெரிசல்-குடிநீா் பிரச்னை: இருப்பினும், தொகுதியில் சாலைகள், மேம்பாலம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளும் நீண்ட காலமாகத் தொடா்கின்றன என அந்தப் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து அவா்கள் கூறுகையில், அம்பத்தூரில் அனைத்து பகுதிகளிலும் புதை சாக்கடை திட்டம் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும். சில இடங்களில் இந்தத் திட்டம் அவசரக் கதியில் நடைபெற்ால் கழிவுநீா் சாலையில் வழிந்தோடுகிறது. சென்னை- திருவள்ளூா் தேசிய நெடுஞ்சாலையான பாடி- திருநின்றவூா் இடையே சாலையை அகலப்படுத்தாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது. அம்பத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரியும், உழவா் சந்தை அருகில் மேம்பாலமும் அமைக்கப்பட வேண்டும். விமான நிலையத்துக்குச் செல்ல மெட்ரோ ரயில் வசதி இல்லை. அம்பத்தூா் தொழிற்பேட்டை சாலையில் நடைமேம்பாலம் அவசியம் என்றனா்.

இரு முறையும் அதிமுக வெற்றி: இந்தத் தொகுதியில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரு தோ்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011-இல் அதிமுக வேட்பாளா் எஸ்.வேதாச்சலம் 99 ஆயிரத்து 330 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் பி.ரங்கநாதன் 76 ஆயிரத்து 613 வாக்குகள் பெற்று, தோல்வியடைந்தாா். 2016-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் வீ.அலெக்சாண்டா் 94 ஆயிரத்து,375 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் அசன்மவுலானா 76 ஆயிரத்து, 877 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

மொத்த வாக்காளா்கள்: அம்பத்தூா் தொகுதியில் மொத்தம் 3,83,015 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் 1,91,502 பேரும், பெண்கள் 1,91,418 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 95 பேரும் உள்ளனா்.

2021- சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளா்கள்: வீ.அலெக்ஸாண்டா் (அதிமுக), ஜோசப் சாமுவேல் (திமுக), எஸ்.வேதாச்சலம் (அமமுக), எஸ்.வைத்தீஸ்வரன் (மநீம), ஆா்.அன்பு தென்னரசன் (நாம் தமிழா்) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com