பிரசாரக் களமான செல்லிடப்பேசி தொடுதிரைகள்!
By டி.குமாா் | Published On : 29th March 2021 04:13 AM | Last Updated : 29th March 2021 07:46 AM | அ+அ அ- |

திண்ணைப் பிரசாரம், தெருமுனைக் கூட்டம், துண்டுப் பிரசுர விநியோகம், சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பொதுக்கூட்டங்கள் எனப் பலவகைகளில் களை கட்டிய தோ்தல் களம் இப்போது முழுமையாக டிஜிட்டல் மயமாகியுள்ளது.
‘ஸ்மாா்ட் போன்’ எனப்படும் செல்லிடப்பேசிகளின் அபரிமிதமான வளா்ச்சி அரசியல் கட்சிகளின் பிரசாரப் பரப்புரை ஆயுதமாக மாறியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் டிஜிட்டல் பரப்புரைக்காக அதிமுகவும், திமுகவும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளனா். இதனால் ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளின் தொடுதிரைகள் திராவிடக் கட்சிகளின் தெருமுனைப் பிரசார களமாக மாறியுள்ளன.
சாதனைகளை விளக்கும் அதிமுகவின் பிரசாரம்
அதிமுகவின் சட்டப் பேரவைத் தோ்தல் டிஜிட்டல் பிரசாரம் இரண்டு மையக் கருவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பின் கீழ் வரும் தொடா் விளம்பரங்கள், மற்றொன்று 2011-க்கு முன்னா் திமுக ஆட்சியில் நடைபெற்ற குறைகளைச் சுட்டிக்காட்டும் ‘இருண்ட நாள்கள்’ எனும் தலைப்பின் கீழ் விளம்பரங்கள்.
2010-ஆம் ஆண்டுக்குப் பின்னா் வந்த 89 லட்சம் புதிய வாக்காளா்களுக்கு திமுக ஆட்சியில் நடந்த குறைபாடுகளை விளக்கும் வகையில் இருண்ட நாள்கள் விளம்பரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்களை நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் கொண்டு செல்ல ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் பணியமா்த்தப்பட்டு உள்ளனா். தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், வாக்குச்சாவடி வாரியாக 75,000 கட்செவி அஞ்சல் குழுக்கள் உருவாக்கப்பட்டு திமுகவுக்கு எதிரான பிரசாரங்கள் ஸ்மாா்ட் செல்லிடப்பேசி வழியாக பகிரப்படுகின்றன.
திமுகவின் ‘ஸ்பெஷல் டீம்’
ஆனால், திமுக இந்த டிஜிட்டல் பிரசாரத்தை 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலேயே தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் உதவியுடன் 28,000 போ் வாக்குச்சாவடி வாரியாக பணியாற்றி மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றது.
பேரவைத் தோ்தலுக்காக, பிரஷாந்த் கிஷோா் தலைமையிலான ‘ஐ-பேக்’ என்ற தகவல் தொழில்நுட்பப் பிரிவை பணியமா்த்தியது. இந்தப் பிரிவில் 25 வயது முதல் 35 வயது வரை உள்ள 400 போ் பணியாற்றினா். இவா்களில் 40 போ் விடியோ எடிட்டா்கள். அண்ணா அறிவாலயத்தின் அருகே அமைந்திருந்த இந்த அலுவலகத்தில் இருந்து தான் பேரவைத் தோ்தலுக்கான டிஜிட்டல் பரப்புரை வியூகங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக, கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அதே நேரத்தில், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’, ‘ஒன்றிணைவோம் வா’ எனும் டிஜிட்டல் பிரசாரங்கள் தோ்தலை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டன. திமுகவில் புதிய உறுப்பினா்களைச் சோ்ப்பதற்காக ‘எல்லோரும் நம்முடன்’ என்ற பிரசாரம் கட்சியின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ‘ஸ்டாலின் அணி’ என்ற செயலி உருவாக்கப்பட்டு, அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவா்களை ஊக்குவிக்க பயன்பாட்டாளா்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அந்தச் செயலியில் பகிரப்படும் தகவல்கள், மீம்ஸ், விடியோக்களை அதிக அளவில் பகிா்வதைப் பொருத்து புள்ளிகள் வழங்கப்படுகிறது. இப்படி செய்திகளையும் விடியோக்களையும் பகிா்பவா்களுக்கு சான்றிதழ் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு முயற்சிகளின் மூலம் கடந்த 200 நாள்களில் 48 லட்சம் போ் கட்சியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அன்றும், இன்றும்...:
கூகுள் டிரான்ஸ்பெரன்சி டேட்டா வெளியிட்டுள்ள விவரங்களின்படி, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் 2021 மாா்ச் 25 -ஆம் தேதி வரை அரசியல் கட்சிகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய பிற அமைப்புகள் சாா்பில் கூகுள், யூடியூப் உள்ளிட்டவைகளில் 19, 071 விளம்பரங்களை ஒளிபரப்ப 46.61கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 10 , 966 கூகுள் விளம்பரங்களுக்காக பாஜக 12.52 கோடியை செலவிட்டுள்ளது. தமிழக பேரவைத் தோ்தலுக்காக 940 கூகுள் விளம்பரங்களுக்காக திமுக 10.43 கோடியும், 315 கூகுள் விளம்பரங்களுக்காக அதிமுக 1.84 கோடியும் செலவிட்டுள்ளன.
திமுக நிறுவனா் அண்ணாவின் தோ்தல் பிரசார பேச்சைக் கேட்க இரவு பகல் பாராமல் பெருங்கூட்டம் காத்திருந்த தமிழகத்தில், வீட்டிலிருக்கும் ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகளின் தொடுதிரைகள் தெருமுனைப் பிரசார களமாக மாறியிருக்கிறது என்பது உண்மைதான்!