ஆண்டவருக்கு அடைக்கலம் தந்த கூத்தாநல்லூர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மிகவும் பழைமை வாய்ந்த இஸ்லாமிய கோட்பாடுகள் நிறைந்த ஊராகும். 12 ஆம் நூற்றாண்டு முதல் இங்கு இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன.
கூத்தாநல்லூரில் உள்ள பழைமைவாய்ந்த பள்ளிவாசல்
கூத்தாநல்லூரில் உள்ள பழைமைவாய்ந்த பள்ளிவாசல்

அனைத்துப் புகழும் அண்ட சராசரங்களையும் அதிலுள்ள வஸ்துகளையும் படைத்து, காத்து பரிபாலித்து வரும் வல்லமைமிகு அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்.

ஸலவத்தும், ஸலாமும் மாநபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது உற்றார், உறவினர்கள், உத்தம சஹாபாக்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மிகவும் பழைமை வாய்ந்த இஸ்லாமிய கோட்பாடுகள் நிறைந்த ஊராகும். கூத்தாநல்லூரில் 12 ஆம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. அந்தக் காலக்கட்டத்தில், அரபு தேசத்திலிருந்து ஹூசைன் என்ற பெரியார் கூத்தாநல்லூர் வருகை தந்து, இஸ்லாமிய மார்க்கப் பிரசாரம் செய்துள்ளார்.

இஸ்லாமிய முன்னோர்கள், அவரது ஏகத்துவ மார்க்கப் பிரசாரத்தில் ஈர்க்கப்பட்டு, ஈமான் கொண்டு இஸ்லாத்தை தழுவியுள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கூத்தாநல்லூருக்கு, நாகூர் ஆண்டவர் என்று அழைக்கப்படும் செய்யிது காதிர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் விஜயம் செய்துள்ளார். அந்தக் காலத்தில் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அரபு நாட்டிலிருந்து பல அறிஞர்கள் வந்திருந்தார்கள். அதனடிப்படையில், செய்யிது காதிர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் கூத்தாநல்லூர் வந்துள்ளார்.

இவர் முதன்முதலில் கூத்தாநல்லூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சேனைக்கரை என்ற கூப்பாச்சிக் கோட்டைக்குத்தான் வந்துள்ளார். அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் சிலர், வெற்றிலை, அகத்திக்கீரை, வாழை உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வந்துள்ளனர். அங்கு வந்து போதனைகள் செய்துள்ளார். அப்போது, கூத்தாநல்லூருக்கு இடம் பெயர்ந்து செல்லுங்கள். இந்த ஊரை விட, அந்த ஊர் (கூத்தாநல்லூர்) வளம் மிக்க ஊராகவும், சீரும், சிறப்புடனும் மாறும் காலம் வரப்போகிறது எனக் கூறியுள்ளார்.

தொழுகை நடக்கும் இடம்
தொழுகை நடக்கும் இடம்

அதன்பிறகு, அவ்வூர் தலைவர் உள்ளிட்டவர்களுடன் கலந்துபேசி, அவர்கள் அனைவரும் கூத்தாநல்லூருக்கு வந்தனர். கூத்தாநல்லூரில் குறிப்பிட்ட முஸ்லீம் குடும்பத்தினர்தான் இருந்துள்ளனர். யாரோ, பெரிய மனிதர் வருகிறார் என்பது தெரிந்துள்ளது.

ஆரம்பத்தில் கூத்தாநல்லூரில் இருந்த ஒரே தெரு, இன்றும் இருக்கக்கூடிய பெரிய தெரு. அந்தத் தெருவின் வழியாக, ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் தனது சீடர்கள் 300 பேருடன் சென்றார். அனைவருக்கும் கூத்தாநல்லூர் மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். அனைவரது வீடுகளிலும் கஞ்சி காய்ச்சி, அகத்திக்கீரை சாறு வடித்து, முருங்கைக்கீரை கூட்டும், வாழைக்காய் வறுவலும் செய்து அவர்களின் பசியைப் போக்கியுள்ளனர். இந்த உபசரிப்பு சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்துக்குப் பிடித்துப் போயி குளிர்ச்சியடைந்து விட்டார். தெரியாத நமக்கு இவ்வளவு உபசரித்துள்ளார்களே என இவ்வூர் வளமை மிக்க ஊராக செழிக்க வேண்டும் என அந்த இடத்திலேயே இறைவனை வேண்டினார்.

பெரிய தெருவுக்கு அருகில் கீற்றுக் கொட்டகையில், ஒரு பள்ளிவாசல் இருந்துள்ளது. அந்தப் பள்ளி வாசலில், சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அமர்ந்து, சீடர்களுக்கும், கூத்தாநல்லூர் மக்களுக்கும் போதனைகள் செய்துள்ளார். அதனடிப்படையில், 40 நாட்கள் கூத்தாநல்லூரிலேயே தங்கியிருந்தார். இஸ்லாம் பற்றி விரிவாகப் போதித்தார். மேலும், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், நல்லிணக்கப் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, திருவாரூர், அரியூர், சிக்கல் வழியாக நாகூர் சென்றடைந்துள்ளார்.

தற்போது, பெரிய பள்ளி வாசலின் ஒரு பகுதியாக மதரஸா பைஜுல் பாக்கியாத் அரபிக் கல்லூரி உள்ளது. அந்த இடத்தின் பின்புறம்தான், சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தங்கியிருந்துள்ளார். இப்போதும் அந்த இடம், அலங்கரிக்கப்பட்டு, தொழுகைக்காக வைக்கப்பட்டுள்ளது. பில்லி, சூனியம் உள்ளிட்ட கோளாறுகளால் உடல் நிலை சரியில்லாதவர்கள் நாகூர், ஏர்வாடி செல்லும் முன்பு, கூத்தாநல்லூர் வந்து செல்கின்றனர். மன்னார்குடியிலிருந்து 13 கீ.மீ. தூரத்தில் உள்ளது கூத்தாநல்லூர். இந்த ஊருக்கு சின்ன சிங்கப்பூர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com