பண மதிப்பிழப்பு செய்து 5 ஆண்டுகள்: இப்போது எப்படி இருக்கிறது நாடு?

நவம்பர் 8ஆம் தேதி இன்று. 2016ஆம் ஆண்டு இதே நாளில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பண மதிப்பிழப்பு நடந்து சரியாக 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
பண மதிப்பிழப்பு செய்து 5 ஆண்டுகள்: இப்போது எப்படி இருக்கிறது நாடு?
பண மதிப்பிழப்பு செய்து 5 ஆண்டுகள்: இப்போது எப்படி இருக்கிறது நாடு?


புது தில்லி: நவம்பர் 8ஆம் தேதி இன்று. 2016ஆம் ஆண்டு இதே நாளில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பண மதிப்பிழப்பு நடந்து சரியாக 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றது குறித்தும் இன்று பல தரப்பிலும் அலசப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடந்து 5 ஆண்டுகளுக்குப் பின் நாடு எப்படி இருக்கிறது என்று ஒரு பார்வை..

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும், பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு பண மதிப்பிழப்பு செய்யப்பட்டாலும், தற்போது, நாட்டில் பணப் புழக்கம் மெல்ல அதிகரித்துதான் உள்ளது. அதே வேளையில், எண்ம (டிஜிட்டல்)பணப் பரிவர்த்தனையும் மக்களிடையே அதிகப் பயன்பாட்டில் உள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காரணமாக பொருளாதார விகிதங்கள் பெரிய அளவில் மாறுபட்டன. கடந்த நிதியாண்டில், கரோனா அச்சம் காரணமாக, மக்கள் பலரும் அவசரத் தேவைகளுக்காக பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருந்தனர். இதுவும் ஒரு வகையில் பணப்புழக்கம் அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதே வேளையில், எண்ம பரிவர்த்தனைகளும், கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளின் பயன்பாடு, இணைய வங்கிச் சேவை, பணப்பரிமாற்ற செயலிகள் போன்றவற்றையும் ஏராளமான மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதும் அதிகரித்துள்ளது.

என்னதான் இவ்வளவையும் சொன்னாலும், மறுபக்கம், அதே விஷயம்தான். மக்களிடையே பணப் புழக்கம் குறைந்த வேகத்தில் அதிகரித்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்க, பணப்புழக்கத்தைக் குறைக்க என்ற முழக்கங்களோடு, 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எண்ம பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கவே செய்தன. ஆனால், பணப்புழக்கம்? ஒரேயடியாக உயரவில்லை என்றாலும் கூட, மிக மெதுவாக அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.17.74 லட்சம் கோடி. இது 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 29.17 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி நிலவரப்படி ரூ.26.88 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.2,28,963 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாறாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு புதிய 10, 20, 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்தன.

தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 ரூ.500, ரூ.2000 ஆகியவை புழக்கத்தில் உள்ளன.

இணைய வழியில் பணத்தைப் பரிமாற்றம் செய்ய பல வழிகள் வந்துவிட்டன. 

அதில், 
1. வங்கிகள் வழங்கும் டெபிட்/கிரெடிட் அட்டைகள்
2. யுஎஸ்எஸ்டி
3. யுபிஐ
4. செல்லிடப்பேசி செயலிகள்
5. வங்கிகள் வழங்கும் ப்ரீபெய்ட் அட்டைகள்
6. இணையதள வங்கிச் சேவை
7. செல்லிடப்பேசி வங்கிச் சேவை
8. மைக்ரோ ஏடிஎம்கள்
9. பாயிண்ட் ஆஃப் சேல் போன்றவை அவற்றில் சில.

இவ்வளவு வசதிகள் இருந்தும் சிலர் இந்த இணையவழி அல்லது எண்ம பணப் பரிவர்த்தனைகள் மீது அதிருப்தி அடைகிறார்கள்.

அதற்குக் காரணம், 

1. முறைகேடு 
2. மோசடி
3. பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம்
4. திருட்டு அச்சம்
5. அதிகம் செலவிடுவோம் என்ற அச்சம்
போன்றவைதான் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றைக் களைந்தால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேலும்  அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கையில் பணமிருக்கும் போது திருட்டு பயம் மட்டும்தான் இருந்தது. ஆனால் தற்போது வங்கியிலிருக்கும் பணம் பல வகைகளில் திருடப்படுவது குறித்து காவல்துறை தரப்பிலும், சைபர் காவல்துறை தரப்பிலும் முன்னெச்சரிக்கைத் தகவல்கள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன. குறிப்பாக வங்கி அட்டைகள் மூலமாக.

காவல்துறையினர் கொடுக்கும் எச்சரிக்கைத் தகவல்களைக் கவனத்தில் கொண்டு மக்கள் விழிப்புடன் இருந்தால் இதுபோன்ற மோசடிகளை நிச்சயம் தவிர்க்க, தடுக்க முடியும்.

பொதுவாக மோசடிகள் நடைபெறும் வழிகள்..
1. மின்னஞ்சலில் இணைய முகவரியை அனுப்புதல்
2. செல்லிடப்பேசிகளில் குறுந்தகவல்கள்
3. இதர செயலிகளில் குறுஞ்செய்திகள் 
4. மோசடியான இணையப் பக்கங்களுக்கு திருப்புதல்
5. இணையவழியில் 

என மோசடிகள் பல வகைகளில் நடக்கின்றன. ஆனால், ஓடிபி எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச் சொல் மிகவும் முக்கியம். அதனை யாரிடமும் பகிரக் கூடாது என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

சரி இந்த மோசடிகளிலிருந்து தப்ப என்ன செய்யலாம்?

புதிய மோசடி வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
அங்கீகாரம் பெற்ற தளங்கள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுங்கள்.
கடவுச்சொல், மின்னஞ்சல் தகவல்களை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வப்போது கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
கணினிகளில் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பதிவேற்றி பயன்படுத்துங்கள்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, பணம் வைத்திருந்தாலும், எண்ம வழிகளில் பணப்பரிவர்த்தனை செய்தாலும் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதில் கவனம் தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com