குடி குடியைக் கெடுக்கும்; இணையம்?

பல வீடுகளில் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதே செல்போனைக் காண்பித்துதான். நாளடைவில்  இந்த பழக்கம் வழக்கமாகி செல்போனைக் காண்பித்தால்தான் பிள்ளைகள் சாப்பிடுவார்கள் என்ற நிலைக்கு கொண்டு போய்விடுகிறது.
குடி குடியைக் கெடுக்கும்; இணையம்?

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில், குழந்தைகள் இணைய அடிமை நோய்க்கு (Internet Addiction) ஆளாவதைத் தடுக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மன நல நிபுணர்களால் சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது மட்டுமல்ல. இந்த நேரத்தில் மிக அவசியமானதும்கூட.

பொதுவாக காலையில் தூங்கி எழுந்ததும் சிறு குழந்தைகள் என்ன செய்வார்கள். ஏதாவது ஒரு ஊட்டச்சத்து மாவினை பாலில் கலந்து குடிப்பார்கள். சில வீடுகளில் டீயோ அல்லது காபியோ குடிக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால் இப்போதோ காலையில் எழுந்ததுமே செல்போன் கேட்டு அழும் பிள்ளைகள்தான் அதிகம் இருக்கிறார்கள். கொடுக்காவிட்டால் அவ்வளவுதான். என்ன நடக்கும் என்று தெரியாது. வீடே ரணகளமாகிவிடும்.

பல வீடுகளில் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதே செல்போனைக் காண்பித்துதான். நாளடைவில்  இந்த பழக்கம் வழக்கமாகி செல்போனைக் காண்பித்தால்தான் பிள்ளைகள் சாப்பிடுவார்கள் என்ற நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. ஒருவகையில் தாய்க்கு சாப்பாடு ஊட்டும் வேலை எளிமையாக இருந்தாலும் பின்னாளில் ஏற்படப்போகும் பிரச்னைகள் பற்றி அவர்களுக்கு தெரிவதுமில்லை. கவலைப்படுவதுமில்லை.

இப்படி பிறந்த சில மாதங்களிலேயே பிள்ளைகளுக்கு கைபேசியை காண்பிப்பதால் பிள்ளைகளுக்கு இரண்டு மூன்று வயதிலேயே கண்ணில் பார்வைக் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மூன்று வயதிலேயே -5 லென்சு பவர் அளவுக்கு கண்ணாடி போட வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. ஏற்கனவே ‘மயோபியா’ என்ற கிட்டப்பார்வை குறைபாட்டினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கரோனா பெருந்தொற்றினால் அவர்கள் கைபேசியை பயன்படுத்தும் நேரம் மேலும் அதிகரித்திருப்பதால் கிட்டப்பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

கைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கும் குறிப்பாக இணைய விளையாட்டுக்களில் மூழ்கி இருக்கும் பிள்ளைகள் நாளடைவில் பலவித இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். தேவையில்லாமல் கோபப்படுவதும், அதிகமாக கவலைப்படுவதும், நண்பர்கள், உறவினர்களுடன் பேசுவதை அறவே தவிர்ப்பதும் பெற்றோர்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பெற்றோரே அழைத்தால்கூட அவர்களுக்கு காதில் விழுவதில்லை. கவனம் என்பது இல்லாமல் போய்விட்டது. சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள்தான் கைபேசியில் மூழ்கிவிட்டார்களே!

குடியைவிட மோசமானதாகிவிட்டது கைபேசியில் மூழ்கிக் கிடப்பது. அதை பக்கத்தில் வைத்துவிட்டு கொஞ்ச நேரம்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. எதையாவது பார்த்துக் கொண்டே இருக்க சொல்கிறது. குடியினால் ஏற்படும் பாதிப்பு ஓரளவுக்கு அனைவருக்கும் தெரியும். ஒரே ஆறுதலான செய்தி குடியினால் துன்பப்படுவது பெரியவர்கள். ஆனால் கைபேசியினால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்களும் இளவயதினர்களும்தான். பெற்றோருக்குத் தெரியும் கைபேசியை அதிக நேரம் பயன்படுத்தினால் பிரச்சினை என்று. ஆனால் பிள்ளைகள் கையில் அது இருந்தால் பிள்ளைகளால் பெற்றோருக்கு பிரச்னை இல்லை, நிம்மதி என்ற ரீதியில்தான் பார்க்கிறார்கள். இதுதான் பிரச்னையே.

ஏற்கனவே, பங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துமனையில் நாட்டின் முதலாவது 'சட்' கிளினிக் (SHUT -Service for Healthy use of technology ) தொடங்கப்பட்டுள்ளது. மதுவின் அடிமைத்தனத்திலிருந்து தீர்வு காண்பதற்காக மறுவாழ்வு நிலையங்கள் செயல்படுவதைப் போன்று இணைய அடிமையிலிருந்து மீள்வதற்கான ஆலோசனை -மறுவாழ்வு நிலையம்தான் இந்த சட் கிளினிக். இந்த சூழலில்தான் இணைய அடிமையிலிருந்து குழந்தைளை மீட்க ஆலோசனை வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது. கேரள அரசும் இதை நெறிப்படுத்தியிருப்பதுடன் இணைய விளையாட்டு மீட்பு மையங்களையும் துவக்க இருக்கிறது.

தமிழக கல்வித் துறையும் மாணவர்களுக்கு இணையம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பிள்ளைகள் என்ன பார்க்கிறார்கள்? என்ன விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் இணையத்தை பயன்படுத்திவிட்டு கைபேசியை வைத்துவிட பிள்ளைகளை பழக்கப்படுத்த வேண்டும். சீனாவில் வாரத்திற்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பிள்ளைகள் இணைய விளையாட்டுக்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதைப் போன்று நாமும் நம் பிள்ளைகள் எவ்வளவு நேரம் விளையாடுகிறார்கள் என்பதைக் கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும்.

‘கைபேசியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எல்லாமே என் பிள்ளையின் கைங்கர்யம்தான். என்ன பிரச்சினை என்றாலும் நொடியில் சரி செய்து விடுவான். கைபேசி பற்றி அக்குவேறு ஆணிவேறா தெரிந்து வைத்திருக்கிறான் என் பிள்ளை’ என்று பெருமைப்படும் பெற்றோரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

பெற்றோர் முதலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு முன்னால் தேவையில்லாமல் அலைபேசியை பார்க்கக்கூடாது. கைபேசியை படுக்கை அறைக்கு கொண்டு செல்லக்கூடாது. வீட்டில் உள்ள அனைவருமே இரவு படுக்குமுன் அலைபேசியை வரவேற்பு அறையில் வைத்துவிட வேண்டும். வாரம் ஒருநாள் – குறிப்பாக ஞாயிறன்று மாலை 6 முதல் 9 மணி வரை கைபேசியை வீட்டில் உள்ளோர் யாருமே பயன்படுத்தக்கூடாது. இதை ஒரு இயக்கமாகவே நாம் செயல்படுத்தலாம். எத்துணையோ செய்திகளை ‘வைரலாக்கும்’ நாம் இது போன்ற செய்திகளையும் பலரிடம் பகிரலாம்.

நினைவுத் திறன் இல்லாமல் தற்போதைய தலைமுறை உருவாகி வருகிறது. அது மனித சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து. இந்த நிலைமையை மாற்ற வேண்டிய பொறுப்பு அரசு தொடங்க இருக்கும் இணைய அடிமை மீட்பு மறுவாழ்வு நிலையங்களை சார்ந்தது என்று நாம் ஒதுங்கி விடக்கூடாது. இந்த மீட்பு பணியில் நம் அனைவருக்குமே பொறுப்பு இருக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

[கட்டுரையாளர் - அரசு கண் மருத்துவ உதவியாளர், மதுரை]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com