2,000 பழந்தமிழ் பாடல் வரிகளை 106 நிமிடங்களில் கூறி சிறுவன் சாதனை!

பள்ளிப் படிப்பையே தொடங்காத 7 வயது சிறுவன், 2 ஆயிரம் பழந்தமிழ் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பாடி உலக சாதனை புரிந்துள்ளான்.
பெற்ற விருதுடன் கிஷன் ஸ்ரீ
பெற்ற விருதுடன் கிஷன் ஸ்ரீ

பள்ளிப் படிப்பையே தொடங்காத 7 வயது சிறுவன், 2 ஆயிரம் பழந்தமிழ் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பாடி உலக சாதனை புரிந்துள்ளான்.

கரோனா கால கட்டம் எத்தனையோ பேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. வேலை செய்து வந்த பலர் வேலைகளை இழந்துள்ளனர். பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளது. பொருளாதார சிக்கல்களில் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா கால கட்டத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி தமிழ் அறிவை பெருக்கியுள்ளான் சிறுவன் ஒருவன். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் மின்னல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஸ்ரீ காந்த். அரசு செவிலியராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி சுப்புலட்சுமி பணி இடம் மாறுதல் காரணமாக இந்த குடும்பத்தினர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இவர்களது 6 வயது மகன் கிஷன்ஸ்ரீ-யை 1 ஆம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டிருந்தபோது, கரோனா காலமாக பொது முடக்கத்தை அரசு அறிவித்தது. 

தொடர்ந்து பொதுமுடக்கம் நீடித்துக் கொண்டே சென்றதால் கிஷன் ஸ்ரீ பள்ளியில் சேர்க்கப்படவில்லை. தாயார் செவிலியர் என்பதால் வீட்டில் இருக்க இயலாத சூழல். கிஷன் ஸ்ரீ -க்கு 2 வயதில் தங்கையும் உள்ளதால் அவரது தந்தை ஸ்ரீ காந்த், பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துள்ளார். இந்த கரோனா பொது முடக்க விடுமுறை காலத்தை பயனுள்ளதாக கழிக்க விரும்பிய அவர், கிஷன் ஸ்ரீ க்கு தமிழில் காவடிச் சிந்து என்ற பழந்தமிழ் பாடல் வரிகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். அவற்றை எளிதில் உள் வாங்கிக் கொண்டு மனப்பாடம் செய்துள்ளான் கிஷன் ஸ்ரீ. 

கிஷன் ஸ்ரீயைப் பாராட்டுகிறார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்.
கிஷன் ஸ்ரீயைப் பாராட்டுகிறார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்.

தொடர்ந்து அவருக்கு திருக்குறள், தேவாரம், திருவாசகம் என பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க பசுமரத்தாணி போல தமிழ் வரிகள் சிறுவனின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

மொத்தமாக 1.ஆத்திச்சூடி - 109 வரிகள் 2 . கொன்றை வேந்தன் - 91, 3. வினாயகர் அகவல் - 72,  4. திருப்பாவை-240,  5. காவடிச் சிந்து - 568,  6. பாரதியார் கவிதைகள் - 88, 7. கருடப் பத்து  - 96, 8. சிவபுராணம் - 100, 9. திருப்புகழ்  -40, 10. திரு அருட்பா - 80, 11. குறும்பாடல்கள் - 250, 12. பாண்டவர்கள், கௌவுரவர்கள் - 105, 13. தமிழ் ஆண்டுகள் - 60, 14.ஆழ்வார்கள், நாயன்மார்கள் - 75, 15.ராசிகள், நட்சத்திரங்கள் - 39 வரிகள் என 2 ஆயிரம் பாடல் வரிகளை மனப்பாடம் செய்தார் கிஷன் ஸ்ரீ.  

இந்த 2 ஆயிரம் பாடல் வரிகளையும் அண்மையில்  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சயில் 106 நிமிடங்களில் மனப்பாடமாய் பாடி சாதனை படைத்துள்ளான் கிஷன் ஸ்ரீ. யூனிவர்ஸல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட் என்ற நிறுவனம் இவரது சாதனையை அங்கீகரித்து, பாராட்டி பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவப் படுத்தியது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேவையான உதவிகளையும் ஏழை மாணவர்கள் நலச்சங்கம் என்ற தொண்டு நிறுவனம் செய்திருந்தது.

சிறுவனின் சாதனை குறித்து அவரின் தந்தை ஸ்ரீகாந்த் கூறியது: 2020 இல் கரோனா பொதுமுடக்க காலத்தில் ஸ்ரீ கிஷனின் தாயார் செவிலியர் என்பதால் அவர் பணிக்குச் சென்று விடுவார், நானும் எனது மகனும் வீட்டில் தனியாக இருந்த போது, இந்த விடுமுறை காலத்தை பயனுள்ளதாக கழிக்க எண்ணி தமிழ் பாடல் வரிகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்காத அவனுக்கு எழுத வாசிக்கத் தெரியாத நிலையிலும் எளிதில் கற்றுக் கொண்டான். (கடந்த ஆண்டு 1 ஆம் வகுப்பில் இதே பள்ளியில் சேர்க்கப் பட்ட நிலையிலும் கரோனா பொது முடக்க விதிகள் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை.) எனினும் அவனது தீவிர முயற்சியால் சாதனை படைத்துள்ளான் என்றார் அவர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், சிறுவனைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் சிறுவனைப் பாராட்டி பரிசு வழங்கினார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கிஷன் ஸ்ரீயைப் பாராட்டி வருகின்றனர்.

சிறுவன் தற்போது பயின்று வரும் புதுப்பட்டி இந்து திருமுருகன் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எல். பாஸ்கர் சிறுவன் குறித்துக் கூறும் போது, பள்ளியில் சேரும் முன்பே 2 ஆயிரம் தமிழ் வரிகளை மனப்பாடம் செய்வது என்பது அத்தனை எளிதல்ல. இந்தச் சிறுவன் எங்கள் பள்ளியில் சேர்ந்தது எங்களுக்கும் பள்ளிக்கும் பெருமை அளிப்பதாக உள்ளது. கிஷன் ஸ்ரீ மென்மேலும் பல சாதனைகள் படைக்க நாங்கள் உறு துணையாக இருப்போம் என்றார் அவர்.

கிஷன் ஸ்ரீயின் சாதனையைப் பார்த்து அவரின் உறவினர் பிரபு என்ற 5 வயது சிறுவன் நளன் ஸ்ரீ, பதிணென் கீழக் கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவையில் இருந்து 100 பாடல்களை விளக்கத்துடன் 46 நிமிடங்களில் கூறி சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com