ஆட்டிசம் பாதித்தாலும் அபாரத் திறமையை வெளிப்படுத்தும் 9 வயது சிறுவன்

ஆட்டிசம் பாதித்த நிலையிலும் அதீத நினைவுத் திறனால் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்துகிறான் திருப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சர்வேஷ். 
தாய் வசுமதியுடன் சிறுவன் சாய்சர்வேஷ்
தாய் வசுமதியுடன் சிறுவன் சாய்சர்வேஷ்

ஆட்டிசம் பாதித்த நிலையிலும் அதீத நினைவுத் திறனால் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்துகிறான் திருப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சர்வேஷ். 

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி வசுமதி. இந்தத் தம்பதியருக்கு திருமணமாகி சுமார் 5 ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லை. அதன்பின்னர் பிறந்த தங்களுடைய மகனுக்கு சாய் சர்வேஷ் என்று பெயர் சூட்டினர். இந்தக் குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல துறுதுறுப்பாகவே இருந்துள்ளது. ஆனால், ஒன்றரை வயதைக் கடந்த நிலையில் சர்வேஷின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. இதன்பிறகு மருத்துவரிடம் சென்று விசாரித்தபோது சர்வேஷ், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் சற்றும் மனம் தளராக சீனிவாசன்-வசுமதி தம்பதியினர் சர்வேஷூக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தனர். அதிலும் குறிப்பாக தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். அதிலும் ஆயுர்வேதிக், அக்குபஞ்சர் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. 

சிறுவன் சாய் சர்வேஷ்
சிறுவன் சாய் சர்வேஷ்

இதுகுறித்து சர்வேஷின் தாய் வசுமதி கூறியதாவது:

எனது மகன் சர்வேஷூம் மற்ற குழந்தைகளைப் போலவே சிறு வயதில் துருதுருப்பாகவே இருந்தான். ஆனால் ஒன்றரை வயதில் அவனது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்து கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தபோதுதான், அவன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

எனினும் நானும், எனது கணவரும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம். இந்த நிலையில், மற்ற குழந்தைகளைப் போலவே பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்தோம். ஆனால் தனியார் பள்ளிகளில் இந்தக் குறைபாடு காரணமாக எனது மகனை சேர்க்கவில்லை. இதன் பிறகு ஒரு வழியாக அரசுப் பள்ளியில் சேர்த்தோம். அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் எனது மகனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சக மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எனது மகன் படிப்பைத் தொடரமுடியவில்லை.

எனினும் சர்வேஷூக்கு கடந்த சில ஆண்டுகளாகவே ஞாபக சக்தி அதிகமாக இருந்ததைக் கண்டறிந்தோம். அதாவது வரும் மாதத்தில் 3 ஆம் தேதி ஏதாவது  சமைத்துக் கொடுப்பதாக அவனிடம் தெரிவித்திருந்தால் அதை அவன் ஞாபகத்தில் வைத்து, பின்னர் அதே மாதத்தில் 3 ஆம் தேதி என்னிடம் வந்து நாள்காட்டியைக் காண்பித்து ஞாபகப்படுத்துவான்.

அதையடுத்து, எனது கணவர் ஒருநாள் சர்வேஷிடம், ஒரு மாதம் தேதியைக் குறிப்பிட்டு அது என்ன கிழமை என்று கேட்டார். அதற்கு அவன் சற்றும் தாமதிக்காமல் சரியான பதிலைக் கூறியது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் சர்வேஷுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க முடிவெடுத்தோம். 

ஆக்குபேஷன் தெரபி மைய மருத்துவர் பி.பார்த்திபன், அவரது மனைவி காயத்ரி, தாயார் வசுமதி ஆகியோருடன் சாய்சர்வேஷ்.
ஆக்குபேஷன் தெரபி மைய மருத்துவர் பி.பார்த்திபன், அவரது மனைவி காயத்ரி, தாயார் வசுமதி ஆகியோருடன் சாய்சர்வேஷ்.

திருப்பூர் மருதாசலபுரம் 60 அடி சாலையில் உள்ள 'ரஹன்யா ரீகேப் சென்டர்' என்ற மையத்தின் மருத்துவர் ஆர்.பார்த்திபன், அவரது மனைவி பி.காயத்ரி ஆகியோரிடம் இதைப் பற்றி தெரிவித்தோம். இதன் பிறகு அனைவரும் சேர்த்து பயிற்சி அளித்து வந்தோம்.

அதன்படி, சிறுவன் சர்வேஷ் கடந்த 2000 ஆண்டு முதல் 2110 ஆம் ஆண்டு வரையில் எந்த ஆண்டில் எந்த மாதத்தில் எந்த தேதியில் என்ன கிழமை வருகிறது என்று கேட்டால் சரியாகப் பதில் அளிக்கிறார். அதேபோல, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குறிப்பிட்ட மாதத்தில் திங்கள்கிழமை எத்தனை முறை வருகிறது என்று கேட்டாலும் சரியாகப் பதில் அளிக்கிறான். ஆனால் இந்த அபார அறிவுத்திறமை எவ்வாறு சாத்தியமானது என்பது எங்களுக்கு தற்போது வரையில் தெரியவில்லை.

ஆட்டிசம் போன்ற நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் தனித்திறமை இருக்கிறது. எனவே, இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளையும் அரசு, தனியார் பள்ளிகளில் சேர்த்து சக மாணவர்களுடன் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பி.எட்(சிறப்புக் கல்வி) படித்த ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்க வேண்டும். இதுபோன்ற மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பும எடுக்க வேண்டும் என்றார்.

சாய் சர்வேஷிடம் கேட்ட கேள்விகள்

சர்வேஷிடம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி என்ன கிழமை வருகிறது என்று கேட்டபோது சற்றும் தாமதிக்காமல் வியாழக்கிழமை என்றும், 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி என்ன கிழமை என்று கேட்டபோது, வியாழக்கிழமை என்று தெரிவித்துள்ளான். அதேபோல, 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எத்தனை திங்கள்கிழமை வருகிறது என்று கேட்டபோது 5 முறை என்று சரியாகப் பதிலளித்துள்ளான். 

ஆட்டிசம்

ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய நரம்புக் குறைபாடு, தகவல்களைப் பயன்படுத்தி மூளை புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது, பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் வெளிப்படுத்த முடியாததாகும். 

ஆட்டிசம் நோயை சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். இந்தக் குறைபாட்டைச் சீக்கிரமாகக் கண்டறிவதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். இவ்வகைக் குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

இந்த நோய் குறித்து பாதிக்கப்படும் சிறுவர்களின் பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் போதி அளவு விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த நோயின் மீதான விழிப்புணர்வு குறைவுதான். ஆட்டிசம் பாதிப்புள்ள ஒரு சிலர் பேச முடியாமலும், சைகை மூலமாக மட்டுமே தொடர்புகொள்ளும் நிலையிலும் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com