சிலம்பச் சுட்டி டாக்டர் சுகித்தா!

பாரம்பரியமான சிலம்பக் கலையை கற்று சர்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு தங்கங்களையும், இளம் டாக்டர் பட்டத்தையும் 13 வயதிலேயே பெற்று அசத்தியுள்ளார் மோ.பி. சுகித்தா.
சிலம்பக் கலையில் அசத்தும் சுக்கிதா
சிலம்பக் கலையில் அசத்தும் சுக்கிதா


சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு. இரண்டாயிரத்துக்கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாசாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாகக் கூறப்படுகிறது. சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானதாகவும் கருதப்படுகிறது. 

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தைக் குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்திலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன.

சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் கோல் என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், 'வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், தண்டு என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

இத்தகைய சிறப்புமிக்கதும், 5,000 ஆண்டுகள் பழமையானதுமான வீர விளையாட்டுக் கலையை கற்று சர்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பல்வேறு தங்கங்களையும், இளம் டாக்டர் பட்டத்தையும் 13 வயதிலேயே பெற்று அசத்தியுள்ளார் மோ.பி. சுகித்தா.

திருச்சி மேலப்புதூர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவியான இவர், சிறு வயதில் கோயில் திருவிழாக்களில் சிலம்பம் சுற்றுவதைப் பார்த்து தானும் சிலம்பம் சுற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை அம்மா பிரகதாவிடம் வெளிப்படுத்தியுள்ளார். தனது மகளின் விருப்பத்தை அறிந்த தந்தை ஆர். மோகன், உடனடியாக சிலம்பம் கற்றுத்தரும் பயிற்சியாளர் எம். ஜெயக்குமார் மூலம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மலேசியாவில் உள்ள சிலம்பப் பயிற்றுநர் மோகனப் பிரியா மூலம் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.

மதுரையில் சுழற்சி முறையில் 6 மணி நேரம் சிலம்பம் சுற்றுப் போட்டியில் முதல் முதலில் தங்கப் பதக்கம் பெற்று தனது முதல் வெற்றிக் கனியை பறித்த சுகித்தா, கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியிலும் தங்கம் வென்று இரண்டாவது வெற்றியை ருசித்தார். திருச்சியில் நடைபெற்ற இடைவிடாது 3 மணி நேரம் சிலம்பம் சுற்றுப் போட்டியில் உலக சாதனை நிகழ்த்தினார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் தங்கம், மதுரை மற்றும் சேலத்தில் நடைபெற்ற தேசியப் போட்டியில் தங்கம், மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கம், சென்னையில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் தங்கம், தில்லி காமன்வெல்த் மைதானத்தில் நடபெற்ற போட்டியில் தங்கம் என பல்வேறு இடங்களில் நடைபெற்றப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று குவித்து வருகிறார். 

இதற்கெல்லாம் மகுடம் சூடுவதைப் போன்று சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், 'சிங்கை சிலம்ப தங்க மங்கை' என்ற பட்டத்தையும் சுகித்தாவுக்கு சூடி அழகு சேர்த்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக் கழகம், முன்னோடி பெண்மணி-2020 விருது வழங்கியுள்ளது.

கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 'சிலம்ப சாதனை நாயகி' என்ற பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் சிலம்ப சாதனைக்காக இளம் கெளவரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 'மலேசியா புக் ஆப் ரெக்கார்டு' சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

அடுக்கடுக்காக இத்தகைய சாதனைகளை புரிந்த சுகித்தாவிடம் பேசுகையில், அப்பத்தா கிராமத்துக் கோயில் விழாவில்தான் சிலம்பாட்டத்தை முதலில் வேடிக்கை பார்த்தேன். அப்போது நினைக்கவில்லை உலகமெல்லாம் சுற்றுவேன் என்று. கற்றுக்கொண்ட 5 மாதத்திலேயே மதுரையில் சர்வதேச அளவிலான போட்டி வாய்ப்பு கிடைத்தது. சுழற்சி முறையில் தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்ற வேண்டும். ஒரு மணி நேர இடைவெளிவிட்டு அடுத்தடுத்து 6 மணி நேரம் சுற்றி தங்கம் வென்றேன். அதுதான் எனது முதல் வெற்றி.

முதன்முதலில் பயிற்சிக்கு செல்லும்போது, என்னுடைய மாஸ்டர் பொறுமையாக கற்றுத் தந்தார். எப்படி சலாம் அடிப்பது, சிலம்பக் கம்பை முதலில் எப்படி பிடிப்பது, கம்பை கையில் எடுக்கும் முறை, கம்பை பிடித்தபடியே ஏற்றம், இறக்கமாக நடந்து செல்வது என அனைத்தையும் அச்சு பிசாகாமல் சொல்லித் தந்தார். கம்பைப் பிடித்தவுடனே எனக்குள்ளே உத்வேகம் பிறந்தது. சிலம்பத்தை சுற்ற, சுற்ற நமக்கே பல கோணங்களில் லாவகம் வந்துவிடுகிறது. இப்போது, நானே 40-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வருகிறேன். என்னைப் போலவே பலரையும் சாதனையாளராக்கி அழகு பார்க்க வேண்டும் என்கிறார் சுகித்தா.

படங்கள்: எஸ். அருண்.                                                    
       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com