அறிவியல் துறையில் அமெரிக்காவில் சாதிக்கும் வேலூர் சிறுவன்!

அறிவியல் துறையில் ஆர்வத்துடன் விளங்கும் வேலூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன், பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அமெரிக்காவில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.
தான் எழுதிய புத்தகத்துடன் சாதனை மாணவர் சிரிஷ்சுபாஷ்.
தான் எழுதிய புத்தகத்துடன் சாதனை மாணவர் சிரிஷ்சுபாஷ்.

வேலூர்: அறிவியல் துறையில் ஆர்வத்துடன் விளங்கும் வேலூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன், பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அமெரிக்காவில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.

'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ நிறுவனங்கள் இப்புத்தகத்தை அங்கீகரித்து மாணவனுக்கு பதக்கங்கள் வழங்கி கெளரவித்துள்ளன.

பருவநிலை மாற்றம் குறித்த புரிதல் இன்றைய காலத்திலும் பலருக்கு இருப்பதில்லை எனலாம். நன்கு படித்தவர்கள்கூட அதில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாக கணித்திட இயலாது. ஆனால், பருவநிலை மாற்றத்தை குழந்தைகள் வரை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், விளையாட்டு தீம் வடிவில் புத்தகம் ஒன்றை எழுதி அதனை அமெரிக்காவில் வெளியிட்டு அசத்தியுள்ளார் வேலூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர் வேலூர் அருகே அரியூர் காந்திசாலையைச் சேர்ந்த சுபாஷ். இவரது மனைவி தேவி. இந்த தம்பதியின் மகன் சிரிஷ்சுபாஷ்(10), அமெரிக்காவில் உள்ள மரியெட்டா சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு அகாடெமிக்ஸ் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். சிறுவயது முதலே அறிவியல் மீது தனியாத ஆர்வம் கொண்டுள்ள சிரிஷ், அவரது ஆசிரியர் ஏஜ்ஜலா ஹெர்பலால் அறிவியல் சார்ந்த விஷயங்களைப் படித்திட ஊக்குவிக்கப்பட்டார். 

நாசாவில் சிரிஷ்சுபாஷ்
நாசாவில் சிரிஷ்சுபாஷ்

தொடர்ந்து இணையம் வழியாக அதற்கான அறிவுத்தேடலை கொண்ட சிரிஷ், தனது 6 வயதில் பருவநிலை மாற்றம் குறித்த 'பிஃபோர் தி ஃப்ளட்' (Before the Flood) எனும் ஆவணப் படத்தைப் பார்த்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஏற்பட்ட பருவநிலை மாற்றம் குறித்த சிந்தனையை அடுத்து 2018 ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் விழாவில், அனைவரும் முறையாக ஆற்றலை சேமிக்க வேண்டும், தேவையின்றி மின்சாதனைகளை பயன்படுத்தக் கூடாது, அவற்றை தேவை இல்லாதபோது அணைத்து வைக்க வேண்டும்' என்பது குறித்து சிறு உரை நிகழ்த்தினார். மேலும், பருவநிலை மாற்றம் குறித்து மாநில அளவில் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார்.

இதன்தொடர்ச்சியாக, பருவநிலை மாற்றம், அதன் விளைவுகள் குறித்து பலருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிரிஷ், கார்பன் ப்ளாக் பஸில் (Carbon Block Puzzle) என்ற ஆங்கில புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். எட்டு வயதில் எழுதத் தொடங்கிய இந்த புத்தகத்தை 10 வயதில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

மொத்தம் 94 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் 11 தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மூலம் பருவநிலை மாற்றம், அவற்றுக்கான காரணம், அவற்றுக்கான தீர்வு குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படும் இப்புத்தகத்தை உலகம் முழுவதும் மக்கள் வாங்கிப் படிக்கின்றனர்.

குடும்பத்துடன் சிரிஷ்சுபாஷ்.
குடும்பத்துடன் சிரிஷ்சுபாஷ்.

10 வயது சிறுவன் எழுதி வெளியீட்டுள்ள இந்த புத்தகத்தை அங்கீகரிக்கும் விதமாக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனங்கள் மாணவன் சிரிஷ்சுபாஷ்க்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கெளரவித்துள்ளன.

இதுகுறித்து மாணவன் சிரிஷ்சுபாஷ் கூறியது: இந்தப் புத்தகம் பருவநிலை மாற்றம், அதன் விளைவுகள், அதனை எப்படித் தடுப்பது என்பது குறித்ததாகும். இப்புத்தகத்தை டெட்ரிஸ் எனும் விளையாட்டுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன். இவ்வாறாக புத்தகம் எழுதுவதால் பருவநிலை மாற்றம் குறித்து குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினர் வரையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்னை. இந்தியாவில் இது தீவிரமாகவே உள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் பூமியின் தட்பவெப்ப நிலை பாதிக்கப்படுகிறது. இதனால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து அதன் மூலம் சுற்றுச்சூழல் மிகப்பெரியளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு ஒரே தீர்வு 2050 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதே ஆகும். இதனை இப்புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் பெரும்பாலான கடலோரப் பகுதிகள் கடல்மட்ட உயர்வால் வெகு விரைவிலேயே நீரில் மூழ்கும் இடர்பாடு உள்ளது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலமாக அதீத செயல்திறனுடன் சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுகின்றன. கிட்டத்தட்ட 50 சதவீத செயல்திறனுடன் தாவரங்கள் இதனைச் செய்து முடிக்கின்றன. இந்தச் செயல்திறன் குறைவாகத் தெரியலாம். தற்போது நாம் பயன்படுத்தும் சூரிய ஒளித்தட்டுகள், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றக்கூடிய தொழில் நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் தாவரங்களின் இந்தச் செயல்திறன் அதிகம். எனவே, தாவரங்களின் ஒளிச்சேர்க்கையின் மூலமாக சூரிய ஒளியினை மின்சாரமாக மாற்றும் திட்டத்தினைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

வருங்காலத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக விரும்பும் சிரிஷ்சுபாஷ், உலகில் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் தீவிர முயற்சிகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக அண்டவியல் தொடர்பான ஆராய்ச்சி படிப்புகளை படித்து கிராண்ட் யூனிஃபைட் தியரி குறித்து ஆய்வு செய்யவும் விரும்புகிறார். இவர் நூலகத் தேவைக்காக செசாட் என்ற பெயரில் ரோபோவும் தயாரித்துள்ளார். தவிர, SciKid Sirish என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனலும் தொடங்கி அதில் அறிவியல் தொடர்பான விடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவரது நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.) கண்டு வியந்த பள்ளி நிர்வாகம், சிறுவனுக்கு நான்காம் வகுப்பிலிருந்து நேரடியாக ஆறாம் வகுப்புக்கு சேர்க்கை அளித்துள்ளது. இயல்பாக ஒருவரின் ஐ.கியூ. அளவு சராசரியாக 110 இருக்கும், ஆனால் சிரிஷுக்கு 152 ஆக இருந்தது என்கிறார் மாணவரின் தந்தை சுபாஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com