'இலவசமாக தற்காப்புக்கலை பயிற்சி அளிப்பதே லட்சியம்' - சிறுமி ஹரிணி

வாழப்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹரிணி, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலைகளில் பல்வேறு சாதனை படைத்து வருகிறார். 
கராத்தே, சிலம்பம் தற்காப்புக்கலையில் பெற்ற பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களுடன் சாதனைச் சிறுமி ஹரிணி.
கராத்தே, சிலம்பம் தற்காப்புக்கலையில் பெற்ற பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களுடன் சாதனைச் சிறுமி ஹரிணி.

தற்போதைய குழந்தைகளில் பெரும்பாலானோர் ஆரம்பப் பள்ளிப் பருவத்திலேயே தனது தனித்திறமையை வெளிப்படுத்தவும், விரும்பும் கலைகளை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அத்துடன் தீவிரமாக பயிற்சி செய்து இலக்கை அடைந்து சாதனை புரிந்து அனைத்து வயதினருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். 

இந்தவரிசையில் வாழப்பாடியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹரிணி, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலைகளில் சாதனை படைத்துள்ளார். 

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த தனியார் பால் பண்ணை தொழிலாளி அய்யப்பன்–உமாமகேஸ்வரி தம்பதியரின் இளைய மகள் ஹரிணி (16). வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் தனியார் பள்ளியில் முதல் வகுப்பில் படித்து கொண்டிருந்த 5 வயது சிறுமியான ஹரிணிக்கு, இப்பள்ளியில்  நடைபெற்று வந்த கராத்தே, சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியைக் கண்டதும், தானும் பிரத்யேக சீருடை அணிந்து கொண்டு, இக்கலைகளை கற்றுக்கொள்ள வேண்டுமென எண்ணம் தோன்றியுள்ளது.  

தனது விருப்பத்தை தெரிவித்த சிறுமி ஹிரிணியை அலட்சியப்படுத்தாமல் இவரது பெற்றோர், தனது மகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். 


கராத்தே பயிற்சியாளர்கள் சேலம் குப்புராஜா, வாழப்பாடி சதீஷ்குமார் ஆகியோரிடம் கராத்தே கருப்புப்பட்டை பெற்ற சிறுமி ஹரிணி.

வாழப்பாடியில்  சிறுவர் சிறுமியருக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளித்து வரும்சிறப்பு பயிற்சிப் பெற்ற பயிற்சியாளர் சதீஷ்குமார் என்பவரின் பயிற்சி முகாமில் ஹரிணியை சேர்த்தனர். 5 வயது சின்னஞ்சிறு குழந்தையான ஹரிணி, தன்னார்வத்தோடு அதிகாலையிலேயே எழுந்து, நாள் தவறாமல் பயிற்சிக்கு சென்று கராத்தே தற்காப்புக்கலை பயிற்சி பெற்றார். சிறப்பாக பயிற்சிப் பெற்ற இச்சிறுமி, பல்வேறு இடங்களில் நடைபெற்ற தகுதித் தேர்வுகளில் பங்கேற்று, தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி கராத்தே பயிற்சி பெறுவோருக்கு வழங்கப்படும், மஞ்சள், காவி, நீலம், பச்சை ஆகிய நான்கு பட்டைகளையும் 10 வயதுக்குள்ளேயே பெற்றார். இதனைத் தொடர்ந்து, 4 படிநிலைகளை கடந்து, 4 பழுப்பு நிறப் (ப்ரவுன் பெல்ட்) பட்டைகளையும் பெற்றார்.  

தான் மட்டும் பயிற்சி பெற்றால் போதாது. இக்கலையை தன்னைப்போன்ற சிறுவர், சிறுமியரும் பயிற்சி பெறவேண்டுமென எண்ணிய சிறுமி ஹரிணி,  கராத்தே கலையின் 8  கருப்புப் பட்டைகளையும் பெறுவதற்காக தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். 2020 ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, மொத்தமுள்ள 8  படிநிலைகளில், இரண்டு  படிநிலைகளுக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று  2வது கருப்புப்பட்டையை ( பிளாக் பெல்ட்) பெற்று சாதனை படைத்துள்ளார்.

கராத்தே கலையோடு, நமது மண்ணின் மரபு சார்ந்த கலையான சிலம்பத்திலும் பயிற்சி பெற்று வந்த இச்சிறுமி, 2019 திருச்சியில் 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டு' நிறுவனம் நடத்திய உலக சாதனை சிலம்பம் போட்டியில் பங்கேற்று தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம், தடி வரிசைகளைக் காட்டி உலக சாதனை படைத்து, இந்த புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இவருக்கு, சர்வதேச கராத்தே பயிற்றுநர் சேலம் பி.குப்புராஜா மற்றும் பல்வேறு தற்காப்புக்கலை அமைப்புகள் பாராட்டி பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கியுள்ளன.

'தொடர்ந்து 11 ஆண்டுகளாக கராத்தே, சிலம்பம் ஆகிய தற்காப்புக்கலை பயிற்சி பெற்று வருகிறேன். வறிய நிலையிலும் எனது பெற்றோர், நான் பயிற்சி பெறுவதற்கு கட்டணம் செலுத்துவதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கும் வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். பயிற்றுநர் சதீஷ்குமார் கொடுத்து வரும் உந்துதலால், எஞ்சியுள்ள 6 படிநிலைகளையும் கடந்து எட்டாவது (பிளாக் பெல்ட் )கருப்புப் பட்டையும் பெற்று, என்னைப் போன்ற சிறுவர் சிறுமியருக்கு நான் தற்காப்புக்கலை பயிற்சி அளிப்பேன்.

அரசு மற்றும் தனியார் பணிக்கு செல்லாமல், முதுநிலை வணிக மேலாண்மை படித்து சொந்தமாக தொழில் தொடங்கி, நல்ல முறையில் வணிகம் செய்து  பெண் தொழிலதிபராக உயர வேண்டும்.

ஆர்வமுள்ள சிறுவர் சிறுமியருக்கு, கட்டணமின்றி தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம் என்றார் சாதனைச் சிறுமி ஹிரிணி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com