தவுல் இசையில் உலக சாதனைப் படைத்து வரும் எட- அன்னவாசல் மாணவி

தமிழர் பண்பாட்டின் உயிராக விளக்கும் மரபு இசைக் கருவிகளான நாதஸ்வரம், தவுல் ஆகியவற்றை மீட்டுருவாக்கம் செய்வதே இலக்கு என்கிறார் தவுல் இசையில் கோலோச்சி வரும் அமிர்தவர்ஷினி.
தவுல் இசையில் கோலோச்சி வரும் அமிர்தவர்ஷினி
தவுல் இசையில் கோலோச்சி வரும் அமிர்தவர்ஷினி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள எட-அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச் சக்கரவர்த்தி நாதஸ்வர வித்வான் டாக்டர் ஏ.பி.மணிசங்கர். தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும், திருவாரூர் மாவட்ட அரசு இசைக் கல்லூரியில் இசைத்துறையில் முனைவர் பட்டம் பெற்று அதே கல்லூரியில் வயலின் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கோ.ஜெயந்தி. இவர்களின் மகள் எம்.எஸ்.அமிர்தவர்ஷினி(15). மன்னார்குடியில் உள்ள ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

தவுல் இசையில் கோலோச்சி வரும் அமிர்தவர்ஷினி, தமிழ்நாடு மட்டமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சென்று இசைக் கச்சேரியில் கலந்துகொண்டு தனது தனித்திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இதற்காக தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் கலை இளம் மணி விருது மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். 

அமிர்தவர்ஷினி தனது இசை ஆர்வம், பயணம், நோக்கம், சாதனை குறித்து கூறியதாவது: 

இசை என்பது மனிதனை இசையவைப்பது. அதனாலேயே அது இசை எனப்பட்டது. இசையை கற்பது என்பது ஒரு மிகப் பெரும் பேறு. இசையை எல்லோராலும் கேட்க முடியும். ஆனால், எல்லோருக்கும் கற்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்றால் அது கேள்விக்குறிதான். அந்த வகையில் இந்த இசையை கற்பதற்கும், இசைத்துறையில் பயணிப்பதற்கும் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகவே பயன்படுத்திக்கொண்டதாக உணர்கிறேன்.

எனது தாய்- தந்தை இருவருமே இசைக் கலைஞர்கள் என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து நாதஸ்வரம் என்னும் நமது சடங்கு, சம்பிரதாயங்கள் சார்ந்த ஒரு மரபு இசை கருவியுடன் வயலின் என்னும் மேற்கத்திய இசைக் கருவியை இணைத்து ஒரு ஜூகல் பந்தி நிகழ்ச்சியாக கடந்த 25 ஆண்டுகளாக மங்கல லய நாதம் என்னும் இசைக் குழுவை அமைத்து புதிய முயற்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதற்கு மக்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பதுடன் இந்த இசைக் குழுவில் நான் 3 வயது முதலே பயணித்து வருகின்றேன்.

இதன் காரணமாக, இசையின் மீதும், இசைக் கருவிகளின் மீதும் பரிச்சையமும் ஈர்ப்புமும் ஏற்பட்டது. ஒவ்வொரு இசைக் கருவியை பற்றியும் அது வாசிக்கப்படும் முறை பற்றியும் சிறு பருவம் முதல் பெற்றோரிடம் ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டேன்.

தொடக்கத்தில் எங்கள் குழுவில் இருந்த ஆதிச்சப்புரம் ஏ.பி.ராமதாசிடம் தவிலை முறையாகக் கற்றேன். பின்னர் கலைமாமணி கோவிலூர் கே.ஜி.கல்யாணசுந்தரத்திடம் தவுல் கற்கும் மாணவியாக தற்போது வரை பயின்று வருகிறேன். அதுமட்டும்மல்லாது திருராமேஸ்வரம் டி.வி.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இசைப்பயண வழிக்காட்டுதல் ஆலோசனைகளை பெற்று வருகிறேன். 

எங்களது இசைக்குழுவில், வயலின், வீணை, புல்லாங்குழல், நாகஸ்வரம், மிருதங்கம் போன்ற அனைத்து இசைக்கருவிகளையும் பெண்கள் இசைப்பதை பார்த்து இருக்கின்றேன். ஆனால், தவுல் கருவியை மட்டும் ஒருமுறை கூட பெண்கள் இசைத்து பார்த்தது இல்லை. அப்பொழுது எனக்குள் எழுந்த கேள்வி தான். பெண்கள் ஏன் தவுல் வாசிப்பதில்லை என பெற்றோரிடம் கேட்டேன். அதற்கு, அவர்கள் கூறிய பதில் ஆச்சரியப்பட வைத்தது.

பெரும்பாலும் சடங்கு, சம்பிரதாயங்கள் மற்றும் கோவில் உத்ஸவங்களில் தவுல் இசைக் கருவியின் பயன்பாடு என்பது இருந்து வருகிறது. அது மட்டுமின்றி, தவுல் கருவியின் அமைப்பே தோற்றத்தில் பெரிதாகவும், மிகுந்த எடை உள்ளதாகவும் அதை வாசிக்கும் முறையும் மிகவும் கடினமானதாகவும் அதனை வசிப்பவர்கள் தோளில் மாட்டி தொங்க விட்டக்கொண்டு ஒளி-ஒலி வசதியின்றி நின்றபடியே மணிக்கணக்கில் ஓங்கி வாசிக்கும் முறை ஆதிக்காலத்திலிருந்த பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் இதனால் தவிலை, பெண்கள் வாசிக்க முன் வருவதில்லை எனத் தெரிவித்தனர்.

இதன் வழியாக எனக்குள் எழுந்த கேள்விக்குத்தான், இதுநாள் வரை விடை கிடைக்காமல் இருப்பதுடன் அந்த விடையை நாமே கண்டறிந்து, அதனை அனைவரும் அறியும் வகையில் இலகுவாக்க வேண்டும் என உறுதி எடுக்க வைத்தது. என்னை ஒரு தவுல் இசைக் கலைஞியாக உருவெடுக்க வைத்தது.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தவுல் இசைக் கருவி வெறும் சடங்கு, சம்பிரதாயங்களில் மட்டும் இசைக்கப்படுவது என்பதுடன் நின்றுவிடாமல் மேடை அமைக்கப்பட்டு நிகழ்த்தப்படும் கச்சேரிகளிலும் பிரதான இடம் பெறும் வாத்தியக் கருவியாக தவுல் இடம் பிடித்துள்ளது.

மேலும், தவுல் மற்றும் நாதஸ்வரம் ஆகியவை ராஜ வாத்தியம், அசுரவாத்தியம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது நுட்பமான ஒளிப்பதிவு ஒத்துழைப்புடன் வாசிக்கப்படும் கருவியாக மாற்றமடைந்துள்ளது. அது மட்டும் அல்லாது, மற்ற இசைக் கலைஞர்களை போன்று.மேடையில் அமர்ந்து வாசிக்கும் முறை பின்பற்றப்பட்டு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. எனவே தவுல் இசைக் கருவியை கையில் எடுக்கவும், வாசிக்கவும் பெண்கள் முன் வரவேண்டும். 

ஒரு இசை நிகழ்ச்சியில், தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது அவர் என்னை வாழ்த்துகையில் எந்த ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் அதைப் பெண்கள் கையில் எடுக்கும்போது அதன் மீதான பார்வை ஆழப்படுத்தப்படும் என்றார்.

எனது 6 வயது முதல் தவுல் கருவியை இசைத்து வருகிறேன். இதை பார்ப்பவர்கள் என்னால் இந்த துறையில் நிலைத்து நிற்க முடியுமா?பெண்களுக்கு தவுல் இசை கற்பது அவசியமா? போன்ற எதிர்மறை கேள்விகள் தான் என்னிடம் அதிகம் கேட்டப்பட்டது.

ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதுதான், என் மன ஓட்டத்தில் வந்து சென்றது. அவரது வாழ்த்தின்படி இத்துறையில் சாதனை செய்ய வேண்டும். இந்த இசைக் கருவியின் மீது இருக்கும் பொதுப் பார்வையை மாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம்.

அமெரிக்காவில் சிக்காகோ நகரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிற்கு, நமது பராம்பரிய இசைக் கருவியான தவுலை கையாளும் பெண் என்ற அடையாளப்படுத்தப்பட்டு அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டேன். என் தாய் -தந்தையுடன் அந்த மாநாட்டிற்கு சென்று கலந்துகொண்டேன்.

நான், இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தற்கும், பல சிரமங்களையும், தடைகளையும் கடந்து பயணித்து வருவதற்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இதனைக் கருதி அங்கு சென்றேன். அமெரிக்காவில் நான் தவுல் வாசித்தது எனக்கு மட்டும் பெருமை அல்ல. தமிழர் பண்பாட்டிற்கும், நமது மரபு இசைக் கருவிக்கும் அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவும், சான்றாகவும் கருதினேன்.

அந்த உலகத் தமிழ் மாநாட்டில் பல தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், இசைக் கலைஞர்கள், பல்வேறு துறைகளின் ஜாம்பாவான்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்கள் கூறிய ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். 

நாதஸ்வரம், தவுல் இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்கள் பெரும்பாலும் தங்களின் வாழ்வாதாரத்தை முன்னிலைப்படுத்தி, பொருளாதாரத்தை ஈட்டுவதற்காகவே வாசிப்பார்கள். அவர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள் என்பது அறிதானதாகவே இருக்கும். நீ இந்த இசைக் கருவியை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், உயர் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் இந்த இசைக்கருவிக்கு உன்னால் நீ நினைக்கும் அடையாளத்தை கொடுக்க முடியும் என்றனர்.

தேசிய அளவிலான இசைப் போட்டி கடந்த ஆண்டு நடைபெற்றது. முதலில் மாவட்ட அளவிலும், தொடர்ந்து மாநில அளவிலும் சேலத்தில் போட்டி தேர்வுகள் நடைபெற்றது. இதில், நான் முதலிடம் பெற்றதையடுத்து தேசிய அளவிலான போட்டிக்கு தமிழ்நாட்டின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற போட்டியில் மூன்றாமிடம் பெற்றேன்.

சிறப்பிடம் பெற்று சென்னை திரும்பிய நிலையில், தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெறச்சென்றேன். அவர், எனது இசைப்பயணம், போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளதைப் பாராட்டியதுடன் எனக்கு பணப் பரிசு வழங்கி வாழ்த்தினார். இது என்னுடைய கலைப்பயணத்திற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் அளிப்பதாக அமைந்தது.

நான் படித்த அசோகா சிசுவிஹார் உயர்நிலைப்பள்ளி, தற்போது படித்து வரும் ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் தாளாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் எனது இசைப் பணத்திற்கு ஆதரவாக இருந்து வருவதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

இதேபோல் திருவையாறு இசை விழா, தமிழ் இசை விழா, கல்வி நிலையங்கள், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் எனது இசை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு அளித்தனர். போட்டிகள், கட்டுரைகள் வெளியிட்டு முன்னுரிமை அளித்தது என் வளர்ச்சி ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன்றைய காலக்கட்டத்தில் புதுமையை நோக்கி பயணிக்கிறோம் என்ற அடையாளத்துடன் இல்ல சுபநிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் இசைத் தட்டுகளின் மூலம் நாதஸ்வரம், தவுல் போன்ற இசைகளை ஒலிக்க விடுவதால் இந்த இசைக் கருவிகளை மறக்கும் சூழ்நிலை உள்ளது. இதன்மூலம் நமது பாரம்பரிய இசைக் கருவி என்ற அடையாளத்தையும் முகவரியையும் இழந்து வருகிறோம்.

தமிழர் பண்பாட்டின் உயிராக விளக்கும் மரபு இசைக் கருவிகளான நாதஸ்வரம், தவுல் ஆகியவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறேன்.

இன்றைய இளைய தலைமுறையினர் பாட்டு, வயலின், வீணை, கீபோர்டு போன்ற இசைக்கருவிகளின் மீது காட்டும் மோகத்தை, நமது மரபு இசைக் கருவிகளான நாதஸ்வரம், தவுல், பறை, தப்பு போன்றவற்றை கற்க முன் வர வேண்டும். குறிப்பாக, பெண்கள் இதில் ஆர்வம் காட்டினால்தான், இந்த இசைக் கருவிகளின் மீதான பார்வை ஆழப்படுத்தப்படும் என்றார் வளர்த்து வரும் தவுல் இசைக் கலைஞி எட-அன்னவாசல் எம்.எஸ்.அமிர்தவர்ஷினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com