கட்டைக்கால் நடனத்தில் அசத்தும் ராமநாதபுரம் சிறுமி!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஹாரினி தற்காப்புக் கலைகளில் அசத்தினாலும், ஐந்தரை அடி கட்டைக்கால் கட்டி ஆடும் பாரம்பரிய நடனமே அவரை மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க வைக்கிறது.
சிறுமி ஹாரினி
சிறுமி ஹாரினி

கைகளில் சிலம்பக் கம்புகளை எடுத்துவிட்டால் பார்ப்போர் பார்த்து அசந்துபோகும் அளவுக்கு சுற்றுகிறாள் 16 வயது சிறுமி. சிலம்பக் கம்புகள் மட்டுமல்ல.. அச்சிறுமியின் கையில் கிடைக்கும் சுருள்வாள், தீப்பந்தம், வேல்கம்பு என எல்லாவற்றையும் தற்காப்புக்கான கலையின் சாதனங்களாக்கி அசத்தி வருகிறாள் ராமநாதபுரம் பட்டினங்காத்தான் ஆதம்நகர் பகுதியைச் சேர்ந்த ஹாரினி. 

சிறுமி ஹாரினி தற்காப்புக்கலைகளில் அசத்தினாலும், ஐந்தரை அடி கட்டைக்கால் கட்டி ஆடும் பாரம்பரிய நடனமே அவரை மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கவைக்கிறது. அட, இந்தச் சிறுமியா இப்படி அந்தரத்தில் நின்று ஆடுகிறாள் என அனைவரது பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் மக்களவை உறுப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் கல்விரத்ன விருதும் ஹாரினிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் ஹாரினி உள்ளூர் சுதந்திர, குடியரசுத் திருவிழாக்கள் முதல் புது தில்லியில் நடந்த தேசிய குழந்தைகள் விழா வரையில் பங்கேற்று பாரம்பரிய கலையான கட்டைக்கால் ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதுவரையில் கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைக்காக 70-க்கும் மேற்பட்ட பாராட்டுச் சான்றுகள், 10 க்கும் மேற்பட்ட கேடயங்கள், பதக்கங்கள் என பெற்றுள்ள ஹாரினி பேசியதாவது:

அப்பா சுப்பிரமணியன். காவல்துறையில் பணிபுரிகிறார். அம்மா முருகேஸ்வரி. குடும்பத் தலைவி. சகோதரர் புவன்சங்கர். கல்லூரி மாணவர். சகோதரர் சிலம்பம் கற்றுவந்த நிலையில், 7 ஆம் வகுப்பு படித்தபோது நாமும் ஏன் சிலம்பம் கற்கக்கூடாது என நினைத்தேன். அப்பா காவல்துறையில் இருப்பதால் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஊக்கப்படுத்தினார்.

சிலம்பம் மாஸ்டர் லோகு சுப்பிரமணியனிடம் சிலம்பம் கற்றபோதுதான், அவர் எனக்குள் இருந்த பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கட்டைக்கால் ஆட்டம், இரட்டைக் கம்பு சிலம்பம், போர்க்கலை சிலம்பம் என பல பாரம்பரியக் கலைகளையும் எனக்குக் கற்றுத் தந்தார். கட்டைக்கால் ஆட்டம் எனில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் என்னைக் குறிப்பிடும் அளவுக்கு தற்போது அக்கலையில் நான் சிறந்து விளங்கி வருவதற்கு மாஸ்டரும், எனது தந்தையும் குடும்பத்தினருமே காரணம் என்கிறார் ஹாரினி.

பாரம்பரியக் கலைகளில் மட்டுமல்லாது படிப்பிலும்கூட ஹாரினி சிறந்து விளங்குவதாக அவரது ஆசிரியர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் சிறந்த வழக்குரைஞராக வருவதே தனது லட்சியம் என்கிறார் ஹாரினி. லட்சியத்தை அடைந்தாலும், இளந்தலைமுறைகளுக்குப் பாரம்பரியக் கலைகளை கற்றுத் தருவதை மறக்கமாட்டேன். தொடர்ந்து சிலம்பம், கட்டைக்கால் ஆட்டம் எனப்  பாரம்பரியத்தைக் காக்கும் பணியில் ஈடுபடுவேன் என்று கூறுகிறார் ஹாரினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com