கரோனா காலத்தில் தவுல் கற்று கச்சேரியில் கலக்கும் சிறுமி (விடியோ)

கரோனா நெருக்கடி காலத்தையும் பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்ள முடியும் என சாதித்திருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரைச் சேர்ந்த என். நிஷாந்தினி. 
தவுல் வாசிக்கும் நிஷாந்தினி.
தவுல் வாசிக்கும் நிஷாந்தினி.

மனிதர்கள் இப்படியும் முடங்கிக் கிடக்க முடியுமா என கற்பனை கூட செய்துப் பார்த்திராத காலமாக கடந்த இரு ஆண்டுகள் அமைந்துவிட்டது. ஆம், கரோனா வைரஸ், உலகையே முடக்கிப் போட்டது.

இந்த நெருக்கடி காலத்தையும் பயனுள்ள வகையில் மாற்றிக் கொள்ள முடியும் என சாதித்திருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரைச் சேர்ந்த என். நிஷாந்தினி. 

வாராப்பூர் கே. நாராயணசாமி- சித்ரா கிருஷ்ணவேணி தம்பதியின் மகளான நிஷாந்தினி, இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கிறார்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும், தனக்கு இசை மீதிருந்த ஆர்வத்தால், அதே பகுதியில் தவுல் கலைஞரான ஜி. நாகராஜனிடம் தவுல் கற்றுக்கொள்ள சேர்ந்தார். ஒரே ஊர் என்பதும், கிராமப்பகுதி என்பதும் இவரது கலைப் பயிற்சிக்கு எந்தத் தடையும் இல்லாது போனது.

ஆறு மாதத்தில் தவுல் இசைக் கலைஞராக மாறினார் நிஷாந்தினி. ஆர்வமும் விடாமுயற்சியும் நிஷாந்தினியை லட்சியத்தில் மிக விரைவாக வெற்றி பெற வைத்திருக்கிறது.

பொது முடக்கக் காலத் தளர்வுகள் படிப்படியாக வர வர, கச்சேரிகளில் மேடையேறத் தொடங்கி, இதுவரை 21 கச்சேரிகளில் கலந்துகொண்டு தவுல் வாசித்திருக்கிறார் நிஷாந்தினி.

தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, திருவையாறிலுள்ள இசைக் கல்லூரியில் சேர்ந்து, முறையாக தவுலிசை பயின்று, மூத்த தவுலிசைக் கலைஞர்களான அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், மன்னார்குடி எம்.ஆர். வாசுதேவன் ஆகியோரைப் போல வருவதுதான் தனது ஆசை என்கிறார் நிஷாந்தினி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com