ஏழ்மைக்கு இடையிலும் கூடைப்பந்து விளையாட்டில் கலக்கும் மாணவி

ஏழ்மை, தந்தையின் இறப்புக்கு இடையிலும் தனது கடுமையான உழைப்பின் மூலம் இலக்கை எட்டி வருகிறார் தஞ்சாவூர் மாணவி ரக்ஷயா.
கூடைப்பந்து போட்டியில் கலக்கிவரும் மாணவி ரக்ஷயா.
கூடைப்பந்து போட்டியில் கலக்கிவரும் மாணவி ரக்ஷயா.


ஏழ்மை, தந்தையின் இறப்பு என எவ்வளவோ சிரமத்திற்கு இடையிலும் தனது கடுமையான உழைப்பின் மூலம் இலக்கை எட்டி வருகிறார் தஞ்சாவூர் மாணவி ரக்ஷயா.

தஞ்சாவூரிலுள்ள புதுக்கோட்டை சாலை ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் இவர், தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 15 வயதான இவர் கூடைப்பந்து போட்டியில் தேசிய அளவில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ரக்ஷயா இதுகுறித்து கூறியதாவது: 

அப்பா கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அம்மா ராஜேஸ்வரிதான் பால் வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். 

Caption
Caption

எங்களது வீட்டில் முதல் முதலாக இந்தக் கூடைப்பந்து விளையாட்டில் எனது அக்கா பவித்ரா விளையாடி வந்தார். அவர் பள்ளி அளவில் தமிழ்நாடு அணியில் பங்கேற்று தேசியப் போட்டியில் விளையாடினார். அவர் விளையாடியதைப் பார்த்து எனக்கும் கூடைப்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது விளையாடத் தொடங்கினேன். அதிலிருந்து என் சிந்தனை முழுவதும் இந்த விளையாட்டின் மீதே இருந்து வருகிறது.

இதற்காக நாள்தோறும் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து, காலை 5.45 மணிக்கு மைதானத்துக்குச் சென்றுவிடுவேன். காலை 6 மணிக்கு தொடங்கி 8.30 மணி வரை விளையாடுவேன். அதன் பிறகு ஓய்வுக்காக வீட்டுக்குச் செல்லமாட்டேன். நேராகப் பள்ளிக்குச் சென்றுவிடுவேன். மாலை 4.30 மணிக்கு வரை பள்ளிப் படிப்பு. பின்னர், மாலையில் நேராக மைதானத்துக்குச் செல்வேன். மாலை 4.45 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை விளையாடுவேன். அதன் பிறகு டியூசனுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீட்டுக்குச் சென்றடைவேன்.

வீட்டுக்குச் சென்ற பிறகும் வீட்டுப் பாடம், அன்றைய பாடங்களைப் படிப்பது என இரவு 11.30 மணி வரை தொடரும். அதன்பிறகே படுக்கச் செல்வேன். இரவு வெகுநேரம் கழித்துப் படுத்தாலும், அதிகாலையிலேயே எழுந்துவிடுவேன். இது, பழக்கமாகிவிட்டது. கடுமையான உழைப்பின் மூலம் தேசிய இளையோர் அணியில் இடம்பெற வேண்டும் என்ற லட்சியமே இதற்குக் காரணம். அதனால், நேரம், காலமெல்லாம் பார்க்க மாட்டேன். விளையாட்டில் முழுக் கவனம் செலுத்தினாலும், பாடம் படிப்பதிலும் ஆர்வத்தைக் குறைத்ததில்லை. மதிப்பெண்கள் 60 குறையாமல் பார்த்துக் கொள்வேன். 


இதேபோல, கைபேசி, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைப் பயன்படுத்தினாலும், அளவுடன் நிறுத்திக்கொள்வேன். முழுமையாகப் பார்த்து அடிமையாவதில்லை. அதனால்தான் விளையாட்டில் கவனம் செலுத்தி சாதனை நிகழ்த்த முடிகிறது. இதேபோல, படிப்பிலும் கவனம் செலுத்த இயலுகிறது.

இந்தக் கடின உழைப்புதான் ஒடிசாவில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற 14 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசியப் போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்று விளையாடி தங்கப் பதக்கத்தை வெல்ல முடிந்தது. இந்த வெற்றி என்னை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல ஊக்கமாக அமைந்துள்ளது.

மேலும், தேசிய இளையோர் அணியில் விளையாடி வெற்றி பெற்ற எனது மூத்த வீராங்கனை மோனிகா ஜெய்சீலி, 18 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய இளையோர் அணியில் இடம்பெற்றுள்ள ஏஞ்சல் ஜீவிதா உள்ளிட்டோரின் சாதனைகளையும் பார்க்கும்போது, எனக்கும் அதுபோல முயற்சி செய்ய வேண்டும் ஆசையும், உத்வேகமும் ஏற்பட்டது.

இதே வேகத்துடன் கடினமாக உழைத்து தேசிய இளையோர் அணியில் பங்கேற்று, தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புப் பெற்று குடும்பத்தைக் காப்பாற்றுவதே வாழ்க்கையில் முக்கியமான லட்சியம். 

என் அம்மா, குடும்பத்தினர், பள்ளி நிர்வாகம், பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியாளர் கே. கண்ணன், மாமன்னன் ராஜராஜசோழன் கூடைப்பந்து ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளையினர் ஆகியோர் அளித்து வரும் தொடர் ஆதரவு மூலம் இந்த லட்சியத்தை எட்டுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ரக்ஷயா.

இவரது பயிற்சியாளர் கண்ணன் கூறுகையில், என்னிடம் 40 மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். ரக்ஷயாவின் திறமை, வேகம், உயரத்தைப் பார்த்தபோது, அவர் சாதிப்பார் என்ற நம்பிக்கை அளித்தது. அவருக்குப் பயிற்சி கொடுத்து வருகிறேன். அவரும் கடினமாக உழைத்து வருவதால், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியில் இடம்பெற முடிந்தது. அடுத்து 16 வயதுக்கு உள்பட்டோருக்கான இளையோர் அணியில் இடம்பெறுவதற்காக கடினமாக உழைத்து வருகிறார். நிச்சயமாக இடம்பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com