கலை, கைவினையில் அசத்தும் தூத்துக்குடி மாணவி

ஆர்ட் அன்ட் கிராஃப்ட்டில் அழகழகான படங்களையும், உருவங்களையும் செய்து அசத்தி வருகிறார் தூத்துக்குடி மாணவி மகாஷ் ஸ்ரீ. 
தனது ஓவியங்களுடன் மாணவி மகாஷ் ஸ்ரீ.
தனது ஓவியங்களுடன் மாணவி மகாஷ் ஸ்ரீ.

'பெற்றோரும், ஆரம்பப் பள்ளி ஆசிரியரும்தான் ஒரு குழந்தையின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பதில் முக்கியமானவர்கள்' என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் கருத்துக்கு உதாரணமாய் திகழ்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி மகாஷ் ஸ்ரீ.

கலை மற்றும் கைவினையில்(ஆர்ட் அன்ட் கிராஃப்ட்) அழகழகான படங்களையும், உருவங்களையும் செய்து அசத்தி வரும் மாணவி தூத்துக்குடியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். அவரது பெற்றோர் பிரபாகரன்-வனஜா.

தனது ஓவியங்கள் குறித்து மாணவி மகாஷ் ஸ்ரீ கூறியதாவது:

சிறிய நடுத்தரக் குடும்பம் எங்களுடையது. நான் படித்த ஆரம்பப் பள்ளியில் கேத்ரின் என்று ஒரு ஆசிரியை இருந்தார். அவர், எல்லா குழந்தைகளுக்கும் படங்களை வரையவும், சிறு சிறு கலைப்பொருள்களை செய்யவும் அழகாகக் கற்றுக் கொடுத்தார். அவரால்தான் எனக்கு இதில் ஈடுபாடு வந்தது. வீட்டிலும் வந்து காகிதங்களிலும், சுவற்றிலும் பென்சிலால் வரைந்து வண்ணம் தீட்டிப் பார்ப்பேன். எனது பெற்றோரும் என்னை அதற்கு அனுமதித்து ஊக்குவித்தனர்.

எங்கள் ஆசிரியை சொல்லிக்கொடுத்த உருவங்களைச் செய்துபார்த்த நான், அதுபோலவே வேறு வேறு உருவங்களைச் செய்தேன். பிறகு வளர வளர யூ-டியூப் பார்த்து மேலும் பல வகைகளில் செய்யக் கற்றுக்கொண்டேன். என் அப்பாவும் நான் கேட்கும் பொருள்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பார். அம்மாவும் நான் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கும்போது எனக்கு வீட்டு வேலைகள் எதுவும் தரமாட்டார். பெற்றோரின் ஊக்கமே என்னை இதில் மேம்படுத்திக்கொள்ள உதவியது. 

அட்டைப் பெட்டிகள், களிமண், பசை, வண்ணம் தீட்டுவதற்கான பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் களிமண், பசை ஆகியவற்றை மிக மிகக் குறைவான விலையில் நானே தயார் செய்துகொள்கிறேன்.

அழகிய படைப்பாற்றலுடன் ஒரு சிலையைச் செய்வதற்கு முழு மூச்சாக செய்தால் அரை நாளிலேயே முடித்து விடலாம். காய்வதற்குத்தான் இரண்டு நாள்கள் ஆகும். நான் செய்யும் கலைப் பொருட்களே எங்கள் வீடு முழுவதையும் அலங்கரிக்கின்றன. எங்கள் வீட்டின் பூஜை அறையிலும் விதவிதமாக நான் செய்த சாமி சிலைகளே நிறைந்துள்ளன. 

நாம் எந்த உருவத்தைச் செய்ய வேண்டும் என்று கற்பனை செய்கிறோமோ, அதை ஒரு காகிதத்தில் வரைந்து கொள்ள வேண்டும். காட்போர்டில் அதை டிரேஸ் எடுத்துப் பிறகு, அதை வெட்டி உங்களுக்கு எந்த வகை சிலை வேண்டுமோ அதற்கேற்ப காட்போர்டுகளை அடுக்கடுக்காக வைத்து செய்யலாம் அல்லது ஒரு காட்போர்டில் டிரேஸ் எடுக்கப்பட்ட படத்தின் மீது களிமண் வைத்து உருவத்தைச் செய்து காய்ந்தபின் வண்ணம் தீட்டலாம்.

நான் இதுவரை செய்தவைகளில் சாமி சிலைகளே அதிகம். அவற்றில் உடைகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட அலங்காரங்களை நுணுக்கமாக செய்ய வேண்டும். வண்ணம் தீட்டுவதும் அதுபோலவே முக்கியமானது என்றார் மாணவி மகாஷ் ஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com