சென்னையின் புகழ்பெற்ற மாட்டிறைச்சி உணவுகள்!

சென்னை என்றதுமே பலருக்கு நினைவில் வருவது அதன் சிறப்பு மிக்க இடங்களும், பழமையும் நவீனமும் உடைய கட்டடங்களும் தான். அதற்கு அடுத்தபடியாக நிழலாடுவது சென்னையின் உணவு. 
சென்னையின் புகழ்பெற்ற மாட்டிறைச்சி உணவுகள்!

சென்னை என்றதுமே பலருக்கு நினைவில் வருவது அதன் சிறப்பு மிக்க இடங்களும், பழமையும் நவீனமும் உடைய கட்டடங்களும் தான். அதற்கு அடுத்தபடியாக நிழலாடுவது சென்னையின் உணவு. 

சென்னையில் ஓவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு உணவு மிகவும் பிரமலமானது. அந்தவகையில் மாட்டு இறைச்சிக்கும், மாட்டிறைச்சி உணவு வகைகளுக்கும் சென்னை தாஷமக்கான் இடம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. 

வடசென்னையில் புளியந்தோப்புக்கும் ஓட்டேரி பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது தாஷமக்கான் பகுதி. தாதாபீர் தர்கா என்று பலராலும் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மாட்டிறைச்சி பிரதானத் தொழிலாக மாறியதற்கு அவரே முக்கிய காரணம். 

தாஷமக்கான் பகுதியின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக தாதாபீர் மகான் இருந்ததால், இப்பகுதி தாதாபீர் தர்கா என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

புரசைவாக்கத்திலிருந்து இடது புறம் திரும்பி பெரம்பூர் செல்லும் சாலையில் தாஷமக்கான் பகுதி அமைந்துள்ளது. இங்கு உள்ள தெருக்களில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளே அதிகம், அசைவ உணவுகள் மட்டும் தான் உள்ளது எனலாம். 

கோழி, ஆடு இறைச்சிகளும் விற்கப்படுகிறது என்றாலும், மாட்டு இறைச்சி இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாட்டிறைச்சிக்காகவும், மாட்டிறைச்சி உணவுக்காகவும் இங்கு படையெடுத்து வரும் மக்கள் அதிகம்.

ஆடுதொட்டி, மாடுதொட்டி இப்பகுதிக்கு அருகில் உள்ளதால் இங்கு தரமான புதிய கறிகள் கிடைக்கும். மக்களின் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளதால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உணவகங்களுக்கு மொத்த கொள்முதலாகவும் இங்கிருந்து இறைச்சிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

மாட்டிறைச்சி (பீப்) என்றாலே பிரியாணி மட்டும்தான் என்று அறிந்தவர்கள் இந்த இடத்திற்கு வந்தால் வியப்படைவது உறுதி. ஏனென்றால் மாட்டிறைச்சி கொண்டு சமைக்கப்படும் விதவிதமான பல சுவையான உணவுகளை இங்கு பார்க்க முடியும். ஷீக் கெபாப், வீல், பால் கறி, தவாக்கறி, பீப் வடை என அனைத்தும் மாட்டிறைச்சி கொண்டே செய்கின்றனர்.

ஷீக் கெபாப் – மசாலாவை கறியுடன் கலந்து ஊறவைத்து பிறகு அதனை கம்பிகளில் எடுத்து பிடிமானம் கொடுத்து நெருப்பில் சுட்டு சுடசுடத் தருவது.

வீல் – எலும்பு இல்லாத கறியை மசாலாவுடன் 6 முதல் 7 மணி நேரம் ஊறவைப்பார்கள். இதனால் கறி பாதியளவு மிருதுவடைகிறது. அதன் பிறகு நெருப்பில் சுட்டுத் தருவதால் கறி மிகவும் மிருதுவடைந்துவிடுகிறது. 

பால் கறி – பால் கறி என்பது தொடைப்பகுதி கறி தான். மாட்டின் தொடைப்பகுதியை சன்னமாக அறுத்து எடுத்துக்கொண்டு எண்ணெய் இல்லாமல் நெருப்பில் சுட்டுக்கொடுப்பது. எண்ணெய் இல்லாமல் இருப்பதால் பல ஐடி நிறுவன ஊழியர்களின் பிரியமான உணவாக இது உள்ளது.

தவாக்கறி – தோசைக்கல்லில் (தவா) பொடிப்பொடியாக வெட்டப்பட்ட கறித்துண்டுகள் மிதமான நெருப்பில் வெந்துகொண்டே இருக்கும். இதனால் கறி கடினத்தன்மையை இழந்து மிருதுவாகிறது. வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அதனை சப்பாத்தி அல்லது இடியாப்பத்துடன் சேர்த்து தருவார்கள். 

பீப் வடை – கறியை மிருதுவாக்கி பருப்பு வடை மாதிரி எண்ணெயில் பொறித்து வைத்துக்கொள்வார்கள். வாடிக்கையாளர்கள் கேட்கும்போது சூடு செய்து கொடுப்பார்கள். 

மாட்டுக் கறி குழம்பு, மாட்டுக்கறி பிரியாணி இவற்றைத் தவிர மேற்சொன்ன உணவு வகைகளுக்காக இங்கு வருபவர்களே அதிகம். மாட்டுக் கறி என்றால் உண்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பது பொய் என்பதை இங்கு செய்யப்படும் மாட்டிறைச்சி உணவுகள் உறுதி செய்யும்.

சென்னை தாஷமக்கான் மாட்டிறைச்சி உணவுகள்!

காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளுக்கும் மாட்டிறைச்சியைக் கொண்டு வகைவகையான உணவுகள் செய்யப்படுகின்றன. உணவு வேளைகளின்போதெல்லாம் எப்போதுமே நாம் மக்கள் கூட்டத்தைப் பார்க்கலாம். இரவில் வேலை முடிந்து  வீடுகளுக்குச் செல்பவர்கள் இந்தப்பக்கம் வந்து எதையாவது பொட்டலமாக வாங்கிசெல்வது வாடிக்கை.
இங்கு வசிப்பவர்கள் தங்களது வீடுகளிலேயே பெரும்பாலும் மாட்டிறைச்சி சமைத்துக்கொள்கின்றனர். வீடுகளில் இறைச்சி சமைக்க முடியாத பலர் இங்கு வந்து உண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புதுப்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அமைந்தகரை போன்ற சென்னையின் பிற பகுதிகளிலும் மாட்டிறைச்சி கிடைத்தாலும், அவை தாஷமக்கான் பகுதி மாட்டுக் கறிக்கு ஈடில்லை என்பதை அப்பகுதி வணிகர்களே ஒப்புக்கொள்கிறார்கள். 

சென்னையில் நிறைவான அசைவ விருந்து சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் தாஷமக்கான் மாட்டிறைச்சியைத் தேடி வந்தால் நிறைவுடன் செல்வது உறுதி…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com