வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் குமரி நேந்திரங்காய் சிப்ஸ்

பிற மாவட்டங்களில் எல்லாம் உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் பிரபலமாக இருக்க, குமரி மாவட்டத்துக்கே உரித்தான தனித்தன்மையோடு தயாரிக்கப்படுவது நேந்திரங்காய் சிப்ஸ்.
வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் குமரி நேந்திரங்காய் சிப்ஸ்

கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே நினைவுக்கு வருவது, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், முக்கடல் சங்கமம், பகவதியம்மன் ஆலயம், பத்மநாபபுரம் அரண்மனை, மூட்டம் பீச்  போன்ற சுற்றுலா தலங்கள்தான். இவற்றோடு உணவு என்றால் நாவில் நீர் உற வைப்பது நேந்திரங்காய் மற்றும் நேந்திரம் பழ சிப்ஸ். பிற மாவட்டங்களில் எல்லாம் உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் செய்வார்கள், ஆனால் குமரி மாவட்டத்துக்கே உரித்தான தனித்தன்மையோடு தயாரிக்கப்படுவது நேந்திரங்காய் சிப்ஸ்.

குமரி மாவட்டத்தில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் விருந்தில் வாழை இலை போட்டு உப்பு வைத்தவுடன் அடுத்து வைப்பது உப்பேரி எனப்படும் நேந்திரம் சிப்ஸ்தான். அந்த அளவுக்கு இந்த சிப்ஸ் அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

மற்ற மாவட்டங்களைவிட குமரி நேந்திரங்காய் சிப்ஸ்க்கு மவுசு அதிகம் ஏனென்றால், இதில் கிடைக்கும் சுவை பிற மாவட்டங்களில் விளையும் நேந்திரங்காய்க்கு இல்லை. அதற்குக் காரணம் நாஞ்சில் நாட்டின் மண் வளம் மற்றும் நீரின் தன்மைதான். பிற மாவட்டங்களில் விளையும் நேந்திரங்காய்களில் காயை வெட்டியவுடன் காயின் நடுவில் சிறு துளை இருக்கும், எனவே சிப்ஸ் போடுவதற்காக காயை வெட்டி எண்ணெய்யில் போட்டால் சிப்ஸ் 3,4 துண்டுகளாக உடைந்து விடும். ஆனால் குமரி மாவட்ட காய்கள் திரட்சியாக இருப்பதால் சிப்ஸ் உடைவதில்லை. மேலும் சுவையும் கூடுதலாக இருப்பதால் மக்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரள மாநிலத்துக்கும்  நேந்திரங்காய் சிப்ஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளுக்கு நேந்திரகாய் சிப்ஸ் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நம் நாட்டுக்கு அதிக அளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது. 

குமரி மாவட்டத்தில், அதிகமாகப் பயிரிடப்படுவது வாழையாகும். மாவட்டம் முழுவதும் சுமார் 25,000 ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 10,000 ஹெக்டேர் பரப்பில் நேந்திரன் வாழை பயிரிடப்படுகிறது. இதற்கு காரணம் நேந்திரன் வாழை மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் அதிகபட்ச லாபம்தான். நேந்திரன் வாழை சாகுபடி குறித்து முன்னோடி விவசாயி துவரங்காடு செண்பகசேகரன்பிள்ளை கூறும்போது, குமரி மாவட்டத்தின் பாரம்பரிய விவசாயம் என்றால் அது நெல் விவசாயம்தான். 45 ஆண்டுகளுக்கு முன்பு நேந்திரன் வாழை கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பின்னர் மேற்கு மாவட்டத்திலிருந்து பிழைப்புக்காக நாஞ்சில்நாட்டுக்கு குடி பெயர்ந்தவர்கள், குமரியின் கிழக்குப் பகுதியிலும் நேந்திரன்வாழையை பயிரிடத் தொடங்கினார்கள். தொடக்கத்தில் நெல் விவசாயிகள் மத்தியில் இந்த வாழை பயிருக்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காதது, விளைச்சல் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நேந்திரன் வாழை விவசாயம் பெருகத் தொடங்கியது.

இன்றைய காலகட்டத்தில் அழகியபாண்டியபுரம், கடுக்கரை, காட்டுப்புதூர், குறத்தியறை, அருமநல்லூர், வீரவநல்லூர், திட்டுவிளை, சிறமடம், துவரங்காடு, தெள்ளாந்தி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேந்திரன் வாழை பரவலாக பயிரிடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக நாஞ்சில்நாடு என்று அழைக்கப்படும் குமரி கிழக்கு மாவட்ட பகுதியில் , நிலவும், தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் செழுமை, தண்ணீர் வசதி உள்ளிட்டவை நேந்திரன்வாழை பயிருக்கு ஏற்றதாக உள்ளது. மேலும் மற்ற வாழைகளை விட நேந்திரன் வாழைக்கு அதிக விலை கிடைப்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் இப்பயிரை சாகுபடி செய்கின்றனர்.  மேலும் இந்த வாழை ஆண்டு முழுவதும் விளையும் பயிர் என்பதாலும் விவசாயிகள் அதிக பரப்பளவில் நேந்திரன் வாழையை சாகுபடி செய்கின்றனர் என்றார்.

நேந்திரங்காய் சிப்ஸ் குமரி மாவட்டத்தில் எல்லா கடைகளிலும் கிடைக்கும் என்றாலும் கூட நாகர்கோவில் மணிமேடை அருகேயுள்ள ராமலெட்சுமி சுவீட் ஸ்டால் இந்த சிப்ஸ்க்கு புகழ் பெற்ற கடையாக விளங்குகிறது. இந்த கடையில் மட்டும் தினமும் சராசரியாக 1,000 கிலோ சிப்ஸ் விற்பனையாகிறது.  இது குறித்து கடையின் உரிமையாளர்களில் ஒருவரான குமார் கூறும்போது, எங்கள் கடையில் சிப்ஸ் அதிக அளவில் விற்பதற்கு காரணம் நாங்கள் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் நேந்திரங்காய்கள் தரமானதாக இருப்பதும், சுத்தமான கடலை எண்ணெயில் சிப்ஸ் தயாரிப்பதும் காரணமாகும். சிப்ஸ் தயாரிக்கும் போது, நேந்திரங்காய்களில் வரும் பொடியை நாங்கள் சிப்ஸில் சேர்ப்பதில்லை, மேலும் சிப்ஸை 2 சட்டிகளில் நன்கு வேக வைத்து எடுக்கிறோம், வேறு எந்த கலப்படப் பொருளும் சேர்ப்பதில்லை என்றார் அவர்.

இந்த சிப்ஸில் கலோரிகள் அதிகமாக இருப்பது இயற்கையானது.  ஒரு கப் வாழைப்பழ சிப்ஸில் கலோரி எண்ணிக்கை 374. இதில், சுமார் 1.5 கிராம் புரதம், பைபர் 5 கிராம், கார்ப்ஸ் 40 கிராம், சர்க்கரை 25 கிராம், கொழுப்பு 24 கிராம் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com