மதுரையும் ஆவி பறக்கும் இட்லியும்

காலை டிபன் சைவம் என்றாலே, இட்லி தான் முதலில் நினைவுக்கு வரும். சட்னியும், சாம்பாரும் தான், தன் சகாப்தம் என வாழ்ந்து கொண்டிருக்கும் இட்லியின் வரலாறு பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே துவங்குகிறது.
மதுரையும் ஆவி பறக்கும் இட்லியும்

காலை டிபன் சைவம் என்றாலே, இட்லி தான் முதலில் நினைவுக்கு வரும். சட்னியும், சாம்பாரும் தான், தன் சகாப்தம் என வாழ்ந்து கொண்டிருக்கும் இட்லியின் வரலாறு பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே துவங்குகிறது. திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற விசேஷங்கள்,  கிராமங்களில் ஆடி, அமாவாசை, கார்த்திகை, தீபாவளி, தைப்பொங்கல், கோயில் திருவிழாக்களின் விழாக்கள் ஆகியவற்றில் இட்லியின் பங்கு முக்கியமானது.

உலகத்தில் மக்கள் சாப்பிடும் மிகச்சிறந்த காலை உணவு எது என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்கையில் அவர்கள் தென் இந்தியாவில் மக்கள் சாப்பிடும் இட்லி தான் மிகச்சிறந்த காலை உணவு என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இட்லி மதுரையில் வேறெங்கும் கிடைக்காத மெதுமெதுப்புடன் கிடைக்கிறது.

தூங்கா நகரம், மல்லி, மீனாட்சி கோயில், திருமலை நாயக்கர் மஹால் என பல்வேறு பெருமைகளை உள்ளடக்கி மதுரைக்கு மற்றொரு பெருமை, எந்த நேரத்திலும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கின்ற மல்லிகை பூப்போன்ற இட்லிதான். தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், வீட்டின் முன்பும் காலை, மாலை, இரவு கிடைக்கும் 'சுடச்சுட' இட்லிக்கு மவுசு அதிகம். இட்லிக்கு கொடுக்கப்படும் சாம்பார், தேங்காய் சட்னி, வெங்காய, தக்காளிச் சட்னி, மல்லி, புதினா சட்னி ஆகியவற்றை வைத்து சாப்பிட்டால், அதற்கு ஈடு இணையே கிடையாது.

மதுரை மாநகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறக்கக் கூடாது என காவல்துறை தடைவிதித்துள்ளதால், பெரும்பாலான இரவு இட்லி கடைகள் திறக்கப்படுவதில்லை. இருப்பினும் மாட்டுத்தாவணி காய்கனி சந்தை, பூச்சந்தை ஆகியவை இரவு நேரங்களில் செயல்படுவதால், அப்பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக குறைந்த இட்லி கடைகளே செயல்படுகின்றன. இதேபோன்று, கீழ மாசி வீதியில் மளிகைப் பொருள்கள் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருவதை இறக்கி, மதுரை மாவட்டம் முழுவதும் விநியோக்கின்ற பணிகள் நடைபெறுகின்றன. அப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாள்தோறும் பணியாற்றுவதால், அவர்களுக்கென ஒரு சில இட்லி கடைகள் திறக்கப்படுகின்றன.

மாநகர் முழுவதும் பகல் மற்றும் மாலை நேரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இட்லி கடைகள் செயல்படுகின்றன. கடந்த காலங்களில் இட்லிக்கு ஐந்து வகை சட்னிகள்கள் வழங்கப்பட்ட நிலை மாறி, தற்போது இட்லியில் நூற்றுக்கணக்கான வகைகள் கிடைக்கின்றன. இட்லியுடன் அசைவ வகைகள் மதுரையில் மிகவும் வரவேற்பைப் பெற்றவை.

அசைவப் பிரியர்களின் முக்கியமானது அயிரை மீன் குழம்பு-இட்லி. இந்த ருசிக்கு இணை உலகில் வேறு இல்லை என்பதே அசைவ பிரியர்களின் வாதம். 

தலைக்கறி - இட்லி, குடல் குழம்பு - இட்லி இணை மதுரையின் முக்கிய பகுதிகளில் பிரதான இரவு உணவாக உள்ளது. இதற்கனெ ரசிகர் பட்டாளங்கள் அதிகம். பிறகு ருசி அலாதி என்றால் கூட்டம் கூடத்தானே செய்யும். நாட்டுக் கோழி குழம்பு, மட்டன் குழம்பு, நண்டு குழம்பு என இட்லிக்காக தயாரிக்கப்படும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

அதுமட்டுமின்றி சைவத்திலும் பொடி இட்லி, ரவா இட்லி, ப்ரைடு இட்லி, ரச இட்லி, மினி இட்லி, சில்லி இட்லி, என சொல்லிக்கொண்டே போகலாம்.

இட்லி பற்றி கதை, கதையாக கூறிக் கொண்டே இருக்கலாம். இட்லி சுவைக்கு மட்டுமல்ல, பல லட்சம் குடும்பங்களை வாழ வைத்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. கணவரை இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள், குறைந்த கல்வி கொண்ட பெண்கள், சொந்தக் காலில் நிற்க உதவும் தொழில்களில் முதலிடம் இட்லிக்குத் தான். இட்லி இல்லாத ஓட்டல் இல்லை. செலவும் குறைவு; தயாரிக்கும் முறையும் எளிது. அனைவராலும் பயமின்ற வாங்கக்கூடிய உணவு.

கரோனா பரவலால் பல லட்சம் பேர் வேலையிழந்த போது, இதில் பலருக்கும் கைகொடுத்தது இட்லி விற்பனை தான். மதுரை மாநகரில் சாலையோரக் கடைகள், வீட்டு வாசல் முன் என புதிது புதிதாக கடைகள் வைத்து விற்பனை செய்பவர்கள் யார் என்றால், கரோனா பொதுமுடக்கத்தில் வேலை இழந்த பட்டதாரிகள், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும். இட்லியின் வரலாறு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com