மூன்று தலைமுறைகளாக...மன்னார்குடி கடலை மிட்டாய்!

கடலைமிட்டாய் என்றாலே கோவில்பட்டிதான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால், கோவில்பட்டியைப் போன்றே மன்னார்குடியும் கடலைமிட்டாய்க்கு பெயர்போனதுதான். 
மூன்று தலைமுறைகளாக...மன்னார்குடி கடலை மிட்டாய்!

கடலைமிட்டாய் என்றாலே கோவில்பட்டிதான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால், கோவில்பட்டியைப் போன்றே மன்னார்குடியும் கடலைமிட்டாய்க்கு பெயர்போனதுதான். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1953ஆம் ஆண்டு முதல் கடலைமிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் கோவில்பட்டியை பூர்விகமாகக் கொண்டவர்கள். கோவில்பட்டி கடலைமிட்டாயைப் போன்று அதே தரத்துடன் சுவையுடன் மூன்று தலைமுறைகளாக கடலைமிட்டாய் வியாபாரம் இங்கும் தொடர்கிறது. 

மன்னார்குடியில் ஆர்.டி.எஸ். சிங்கம் மார்க் கடலை மிட்டாய் நிறுவனத்தை கூட்டாக நடத்தி வரும் சகோதரர்கள் தி.சந்திரசேகர், தி.பாண்டியராஜன், தி. நடராஜன் ஆகியோர் கூறியது:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி குமாரபுரத்தைச் சேர்ந்த ராமசிங்கம் மகன் ஆர். தியாகராஜன்தான் எங்களது தந்தை. எங்களது பெற்றோர், கடந்த 1953-ஆம் ஆண்டு மன்னார்குடி பாக்கு பட்டறைத் தெருவில் சிறிய அளவில் கடலை மிட்டாய் தொழிலை ஆரம்பித்தனர். கூடவே, எந்திரம் மூலம் பொட்டுக்கடலை தயாரித்து அருகிலுள்ள கடைகளுக்கு விநியோகம் செய்தனர்.

வியாபாரம் வளரத் தொடங்கியதும், இடப் பற்றாக்குறையால், மன்னப்பன் தெருவில் இடம் வாங்கி, அங்கு தயாரிப்பு மற்றும் விற்பனையை தொடங்கினர். இதற்காக மதுரை, கோவில்பட்டியில் இருந்து வேலையாள்களை வரவழைத்து கடலை மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதும், வேலைப்பளு அதிகரித்தது. தினமும் காலையில் 6 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் முடிக்க இரவு 11 மணி ஆகிவிடும். அதிகாலை 5 மணிக்கு சைக்கிளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் சரக்குகளை எடுத்துச் சென்று, மன்னார்குடியிலிருந்து 20 கி.மீ. சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்து வந்தனர்.

2000- ஆம் ஆண்டுக்குப் பிறகு கடலை மிட்டாய் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பொற்காலமாக இருந்தது. கடலை மிட்டாய் தயாரிப்புக்கு புது புது இயந்திரங்கள் வந்தன. இக்காலக்கட்டத்தில் நிலக்கடலையில் கல் நீக்க, வறுக்க, மேல் தோலை நீக்க, கடலை மிட்டாய்களை பேக்கிங் செய்ய என பலவகை இயந்திரங்கள் வாங்கப்பட்டு அதே தரத்துடன் சுகாதாரமாகவும் தயார் செய்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

தற்போது சிங்கப்பூர், மலேசியா, சிசல்ஸ் தீவுகளில் எங்களது தயாரிப்புகளுக்கு விநியோகஸ்தர்கள் உள்ளனர். உற்பத்திக்கான மூலப்பொருளான நிலக்கடலையை திண்டுக்கல் மற்றும் மணப்பாறை பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட  ரகத்தை மட்டுமே தேர்வு செய்கிறோம். வெல்லம் சேலம் பகுதியில் சந்தையில் வாங்காமல், தயாரிப்பாளர்களை நேரில் அணுகி தரமான வெல்லத்தை கொள்முதல் செய்கிறோம். இயற்கையான வெல்லத்தில், வறுத்த நிலக்கடலையை சேர்க்கும்போது கிடைக்கும் சுவையும் மணமும் என்றென்றும் மாறாமல் இருப்பதால் எங்களது வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளோம்.

கடந்த 2010 ஆம் ஆண்டு, நிறுவனத்தை விரிவுபடுத்தும்போது, பூமிக்கு அடியில் 24 அடி நீளம்,15 அடி அகலம், 7 அடி உயரத்தில் 65 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழை நீர் சேகரிப்புத் தொட்டியை நவீன முறையில் அமைத்து, அதில் சுத்தமான முறையில் சேகரிக்கப்படும் மழை நீரை கடலை மிட்டாய் தயாரிப்புக்கு பயன்படுத்துகிறோம். வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

எங்களது பெற்றோர் மறைவுக்குப் பிறகு, மூன்றாவது தலைமுறையாக, எங்களது மகன்கள் 6 பேர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இத்தொழிலில் உத்வேகத்துடன் ஈடுபட்டு வருகிறோம்.

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடிக்கக் கூடிய வகையில் சத்தான தின்பண்டமாக எங்களது கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி உருண்டை இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

பாரம்பரியமிக்க இத்தொழிலை மூன்றாவது தலைமுறையிலும் சிறப்பான முறையில் நடத்த தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கும், எங்களது நிறுவனத்தின் மீது  நம்பிக்கை வைத்துள்ள விநியோஸ்தர்களும் தரத்துடன் தயாரிக்க உதவும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com