மஸ்கோத் அல்வா என்றாலே முதலூர்தான்!

மஸ்கோத் அல்வா என்றாலே இலங்கைதான். எனினும் தமிழகத்தில் மஸ்கோத் என்றால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர்தான் ஞாபகத்துக்கு வரும். 
தயாராகும் மஸ்கோத் அல்வா
தயாராகும் மஸ்கோத் அல்வா

சாத்தான்குளம்: மஸ்கோத் அல்வா என்றாலே இலங்கைதான். எனினும் தமிழகத்தில் மஸ்கோத் என்றால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர்தான் ஞாபகத்துக்கு வரும். 

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளம் வட்டம் முதலூரைச் சேர்ந்த ஜோசப் என்பவர் இலங்கையில் இருந்தபோது  இவருக்கான நுணுக்கத்துடன் மஸ்கோத் எனும் அல்வாவை தயாரித்து விற்பனை செய்து வந்தார். நாளடைவில்  அவரது சொந்த ஊரான முதலூருக்கு வந்து சிறிய அளவில் மஸ்கோத் தயாரித்து விற்பனை  செய்தார். அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் நாடி வந்து வாங்கிச் சென்றனர். அதிக அளவு மக்களிடம் வரவேற்பைப் பெறவே பல இடங்களுக்கு சென்றடையும் வகையில் மஸ்கோத் தயாரிப்பை விரிவுபடுத்தி நடத்தினார். 

முதலில் சின்ன அறையில் மஸ்கோத் தயாரிப்பை உருவாக்கிய அவர், தற்போது நல்ல வளர்ச்சி பெற்று, இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர்கள் உதவியுடன் மஸ்கோத் தயாரித்து வருகிறார்.  ஜோசப்பிற்கு பிறகு அவரது மகன் ஜெயசீலன், பேரன்கள் சைமன், ஜாண்சன் ஆகியோர் தனித்தனியாக ஏஜெஜெ, எஸ்.ஜே.  என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும்  அல்வா நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, மும்பை, தில்லி மற்றும் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கோதுமையில் தயாரிக்கப்படும் மஸ்கோத் அல்வாவைப் போன்று தற்போது பேரிச்சை அல்வா, முந்திரி அல்வா, நெல் அல்வா என பலதரங்களில் அல்வா தயாரித்து விற்பனையில் உள்ளது. பலரக அல்வா இருந்தாலும்  மஸ்கோத்துக்குதான் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 

சைமன், ஜாண்சன்
சைமன், ஜாண்சன்

இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தொலை தூரங்களில் தொழில் புரிந்தாலும் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் மஸ்கோத் அல்வாவை வாங்க மறப்பது இல்லை. மேலும், வட பகுதியைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிக்கு வந்தாலும் நெல்லை அல்வாவைப் போன்று மஸ்கோத் அல்வாவை விரும்பி வாங்கிச் செல்வதும் அதிகரித்துள்ளது.

வேறு பலர் மஸ்கோத் அல்வா தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தாலும்,   முதலூரில் தயாரிக்கப்படும் மஸ்கோத் போல் மக்களிடம் வரவேற்பு இல்லை. 

இதுகுறித்து எஸ்.ஜே. மஸ்கோத் தயாரித்து வரும் ஜோசப்பின் பேரன் ஜான்சன் கூறுகையில், முதலூரில் எங்களது தாத்தா ஜோசப், அவரது எளிய நடையில் மஸ்கோத் அல்வா தயாரித்து விற்பனை செய்தார். மஸ்கோத் அல்வாவின் சுவையின் காரணமாக மக்கள் விரும்பி வாங்குகின்றனர். மஸ்கோத் தயாரிக்க கோதுமை, தேங்காய் பால் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு  மக்களுக்கு எந்தவித கெடுதலும் வராமல் நல்ல தரமிக்க பொருள்களை கொண்டு மஸ்கோத் அல்வா தயாரித்து விற்பனை சென்று வருகிறோம். மஸ்கோத் பிறப்பிடம்  முதலூர் தான்.  இதனை நாங்கள் உறுதிபடக் கூறுகிறோம். மஸ்கோத் தயாரித்து 100 கிராம், கால் கிலோ, அரை கிலோ என   பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு தருகிறோம். இங்கிருந்து பல பகுதிகளுக்கு  ஆர்டரின் பேரில் அனுப்பியும் வருகிறோம் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com