உலகப் பசி குறியீட்டுப் பட்டியலில் 101 ஆவது இடத்தில் இந்தியா!

கரோனா மற்றும் அதன் கட்டுப்பாடுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக பட்டினி நாடுகள் குறித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக பட்டினி குறியீடு என்றால் என்ன?

உலகளவிலும் பிராந்திய அளவிலும் தேசிய அளவிலும் பட்டினி குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு உலக பட்டினி குறியீடு உதவுகிறது.

பட்டினி எந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு உலக பட்டினி குறியீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. பட்டினி எங்கு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டு அங்கு அதைக் குறைக்க முயற்சி மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பட்டியல் உதவுகிறது.

உலகளவில் பட்டினியை நிர்ணயிக்கும் நான்கு காரணிகள்

நான்கு முக்கியக் காரணிகளை அடிப்படையாக கொண்டு உலக பட்டினி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு: மக்கள் தொகையில் எத்தனை பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளார்கள் என்பதை அடிப்படையாக வைத்து புள்ளிகள் வழங்கப்படுகிறது. இந்த புள்ளிகளின் அடிப்படையில் உலக நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

குழந்தைகளின் எடை குறைவு: ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளில், தங்களது உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் உயரம் குறைவு: ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளில், தங்களின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி (உயரம்) இல்லாதவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புள்ளிகள் வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் இறப்பு விகிதம்: ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டும் புள்ளிகள் வழங்கப்படுகிறது. போதுமான ஊட்டச்சத்து இல்லாமை, ஆரோக்கியமில்லாத சுற்றுச்சூழல் ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

2021ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி பட்டியல்

135 நாடுகளில் உள்ள தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 116 நாடுகளிலிருந்து மட்டுமே தரவுகள் முழுமையாகக் கிடைத்தன. இதன் காரணமாக, 116 நாடுகள் கொண்ட பட்டியலே தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, 107 நாடுகளின் தரவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டு மதிப்பிடப்பட்டன. 

இந்தாண்டு 19 நாடுகளின் தரவுகள் கிடைக்காத நிலையில், அந்த நாடுகளுக்கு தனிப்பட்ட புள்ளிகள் வழங்கப்படவில்லை. பட்டினியின் நிலை நான்கு நிலைகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், குறைவான நிலை, மிதமான நிலை, மோசமான நிலை, அச்சமூட்டும் நிலை என நான்கு நிலைகளில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அயர்லாந்து அமைப்பும் வெல்ட் ஹங்கர் ஹில்ப் என்ற ஜெர்மனி அமைப்பும் சேர்ந்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. 

பட்டினி குறைவாக உள்ள நாடுகள் எவை?

உலக பட்டினி குறியீட்டில் 5க்கும் குறைவான புள்ளிகளை பெற்று, பட்டினி குறைவாக உள்ள நாடுகளில் சீனா, கியூபா ஆகிய கம்யூனிஸ்ட் நாடுகள் முன்னணி வகிக்கின்றன. பெலாரஸ், பிரேசில், குவைத் ஆகிய நாடுகளும் ஐந்துக்கும் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது.

உலக பட்டினி குறியீட்டில் 6.2 புள்ளிகளை பெற்று ரஷியா 25ஆவது இடத்திலும் 6.8 புள்ளிகளை பெற்று சவுதி அரேபியா 29ஆவது இடத்திலும் உள்ளது. 16 புள்ளிகளை பெற்ற இலங்கை 65ஆவது இடத்திலும் 19.1 புள்ளிகளை பெற்ற வங்கதேசம் 76ஆவது இடத்திலும் உள்ளது.  

27.5 புள்ளிகள் பெற்ற இந்தியா, 101ஆவது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு வெளியான பட்டியலில் இந்தியா 94 ஆவது இடத்தை பிடித்திருந்தது. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பட்டினி அதிகமாக இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.

குறிப்பாக, ஏழ்மை அதிகமாக உள்ள அங்கோலா, சூடான், ருவாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது. 

உலக பட்டினி ஆய்வறிக்கை உணர்த்துவது என்ன?

இந்தாண்டுக்கான ஆய்வறிக்கையின் மூலம் பட்டினிக்கு எதிரான போர் தடம் மாறி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் பட்டினியின் நிலை குறைக்கப்படும் என்பது இலக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் குறிப்பாக 47 நாடுகள் இந்த இலக்கிலிருந்து தோல்வி அடைந்துள்ளது. 

பல முனைகளிலிருந்து உணவுப் பாதுகாப்பு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. நாடுகளுக்கிடையேயான மோதல், உலகளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தீவிர வானிலையின் போக்கு, கரோனா காரணமாக உருவாகியுள்ள பொருளாதார மற்றும் சுகாதாரம் தொடர்பான சவால்கள் ஆகியவை மக்களை பட்டினியை நோக்கித் தள்ளியுள்ளது.

பல ஆண்டுகளாக, உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வளர்கிறது. உலகளவில் மக்களிடையே பட்டினி அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதில் மற்ற முனைகளில் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளாததால் இது நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சஹாரா பாலைவனத்தின் தென் பகுதியில் உள்ள ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் பட்டினி நிலை அதிகமாக உள்ளது. இவ்விரண்டு பகுதிகளிலும் பட்டினி நிலை தீவிரமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தாண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் 12 நாடுகளில் பட்டினியின் நிலை தீவிரமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான தரவுகளையும் 2016 முதல் 2020 வரையிலான தரவுகளையும் கணக்கில் எடுத்து கொண்டதில், பட்டினி நிலை சோமாலியாவில் மிக அச்சமூட்டும் விதமாக உள்ளது. அதேபோல், 9 நாடுகளில் பட்டினி அச்சமூட்டும் விதமாக உள்ளது. 37 நாடுகளில் தீவிரமாக உள்ளது.

பிராந்தியங்கள், நாடுகள், மாவட்டங்கள், சமூகங்கள் ஆகியவைக்கிடையே சமத்துவமின்மை பரவலாகக் காணப்படுகிறது. இதை கண்காணிக்கவில்லை எனில், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய முடியாது. யாரையும் பட்டினியில் விட்டு விடக்கூடாது என்பதே நிலையான வளர்ச்சி இலக்காகும்.

உலகளாவிய பட்டினியை களைவது எப்படி?

நாடுகளுக்கிடையேயான மோதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உணவு அமைப்புகளை மீட்டெடுத்து மேம்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பற்றிய முழுமையான புரிதலின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை வலுப்படுத்த வேண்டும். பட்டினியை களையும் முயற்சிகளை உள்ளூர் அளவில் நடத்தப்பட வேண்டும். 

அனைவருக்கும் ஏற்றாற்போல் தேவை அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அமைப்புகளிலிருந்து உள்ளூர் அமைப்புகள் வரை இதில் ஈடுபட வேண்டும். பல ஆண்டு திட்டமிடல் மற்றும் நிதியளிப்பதின் மூலம் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக நாடுகளுக்கிடையேயான மோதலை களைய வேண்டும். சர்வதேச சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதற்கு அந்தந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும்.

உணவு முறைகளின் அடிப்படையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com