மாமியார் தின கொண்டாட்டம்... எப்போதிருந்து?

மாமியாரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாட? உங்களுக்கு அவரைப் பிடிக்கிறதோ, இல்லையோ, கொண்டாடுங்கள்.
மாமியார் தின கொண்டாட்டம்... எப்போதிருந்து?

மாமியார் தினமா, அப்படியொரு நாளா, அதையெல்லாமா கொண்டாடுவார்கள்? யாருங்க முடிவு செய்தது, யாருங்க இதையெல்லாம் கொண்டாடுவது? ஏதோ மாமியாரையெல்லாம் கொண்டாடவே கூடாது என்பதைப் போலதான் பலரும் கேட்கிறார்கள். நமக்கு ஒருவேளை புதிதாக இருக்கலாம். ஆனால், உலகின் எங்கோ ஒரு மூலையில் மாமியார் தினத்தைக் கொண்டாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். இப்போது அல்ல, கடந்த 86 ஆண்டுகளாக!

அன்னையர் நாள், தந்தையர் நாள் என்பதைப் போல மாமியார் நாளும் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது, 1934 ஆம் ஆண்டில். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள அமரில்லோ நகரில் உள்ளூரில் வெளியாகும் செய்தித்தாளான அமெரில்லோ குளோப் நியூஸின் ஆசிரியர் ஜீன் ஹோவ் (சட்டெனத் தோன்றுவதைப் போலவே இவர் பெண்மணி அல்ல, ஆண்தான்) என்பவரின் முன்முயற்சியால் முதன்முதலில் மாமியார் தினம் கொண்டாடப்பட்டது.

அன்னையர் நாளைப் போலவே திட்டமிடப்பட்டு, முதன்முதலில் மார்ச் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், அதன் பிறகு, அப்போதைய சூழ்நிலைகளைப் பொருத்து வெவ்வேறு நாள்களில் கொண்டாடப்பட்டு வந்தது. பிற்காலத்தில் மாமியார் தின விழாக் குழுவொன்று அமைத்து ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமியார்களுக்குப் பரிசுகள் எல்லாம்கூட அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் அவை அல்லது உலகளாவிய முகமைகள் அல்லது அமைப்புகள் அறிவிப்பதற்கு மாறாக, 1970-களில் அமெரிக்கப் பூங்கொத்து வணிகர்கள் அமைப்புதான் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை மாமியார் தினமாகக் கொண்டாடுவதென அறிவித்தனர். அப்போதிருந்து இந்த நாளில் மாமியார் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

2002, ஜனவரி 23-ல் மாமியார் தினம் விடுமுறை நாளாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற நாள்களைப் போல பரவலாகக் கொண்டாடப்படாமல், மிகச் சில நாடுகளில்தான்  கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்னையர் நாளைப் போலவோ, தந்தையர் நாளைப் போலவோ அல்லது இன்னபிற நாள்களைப் போலவோ மாமியார் தினம் மட்டும் உலகளாவிய புகழை அல்லது பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றே கூறலாம். என்னவோ தெரியவில்லை, காலங்காலமாக மாமியார் என்பவர் மற்றொரு தாயைப் போல என்றாலும் அன்னையருக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஏனோ மாமியார்களுக்கு வழங்கப்படுவதில்லை.

ஆனால், உள்ளபடியே மாமியார்கள் எல்லாரும் கொடுமைக்காரர்களா, நல்ல மாமியார்களே இருக்க மாட்டார்களா, அதுவும் உலகம் முழுவதும்... நினைத்துப் பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது.

எல்லா உறவுகளுக்கும் இருக்கும் எல்லா மதிப்பும் மரியாதையும் மாமியார்களுக்கும் இருக்கிறது, மருமகள்களுக்கு மட்டுமல்ல, மருமகன்களுக்கும். ஆனால், அது இன்னமும்கூட சரியாகப் புரிந்துகொள்ளப்படாததுதான் பிரச்சினை, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாமியார்களாலும் மருமக்கள்களாலும்!

தான் வளர்த்து ஆளாக்கிய மகனை அல்லது மகளை உங்கள் மீது அன்பு செலுத்துபவராக, காதல் கொள்பவராக, உங்களுடைய வாழ்நாள்  முழுதும் உங்களைப் பேணிக் காப்பவராக, எதிர்காலத்துக்கு உரித்தான  ஒருவராக உங்களிடம் ஒப்படைக்கும் பெருந்தன்மையான பெண் அல்லவா, மாமியார்? அவரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாடுவது?

இவ்வளவு காலமாக மகனையோ, மகளையோ பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு திருமண உறவுக்குப் பிறகு மருமகனை, மருமகளையும் சேர்த்து, அவர்களுடைய நலனிலும் அக்கறையும் ஆர்வமும் கொள்ளத் தொடங்கிவிடுகிறார்.

மருமகளின் வருகையுடன் இல்லத்தில் இன்னோர் இடத்தையும் உருவாக்கிக் கொடுக்கிறார், தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வைப் பார்த்து மகிழ்கிறார் மாமியார். எத்தனையோ குடும்பங்களின் அச்சாணியாகத் திகழ்பவர்கள் மாமியார்கள்.

நம் வாழ்வில் மாமியார்களுக்குச் சிறப்பான தனித்ததோர் இடமிருக்கிறது, சிலநேரம் கடிந்துகொண்டாலும்கூட நம் குழந்தைகள் நல்லவர்களாக சமூகத்தில் வளர்ந்து உயர்வதில் அவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது.

நினைத்துப் பாருங்கள், இரண்டு குடும்பங்கள் இணைவதில் இரு தரப்பு மாமியார்களுக்கும்தான் பெரும் பங்கிருக்கிறது. மாமியார்களுடன் இருக்கும் குடும்பங்களில் பெரும் பாதுகாப்பு இருக்கிறது. பொறுப்பின்  சுமையும்கூட குறைகிறது.

இளைஞனும் யுவதியும் மணம்புரிந்து சமுதாயத்தின் உறுப்பினர்களாக,  வளர்ந்த மனிதர்களாக மாறுவதில் இருவருடைய அன்னையர்களுக்குதான், அதாவது மாமியார்களுக்குதான் பெரும் பங்கிருக்கிறது. தாய் என்றாலும் மாமியார் என்றாலும் இருவருமே தங்கள் குழந்தைகளை வளர்த்தெடுத்து ஆளாக்கியவர்கள்தானே. புதிதாக உருவாகும் ஒரு குடும்பத்தில் இருவருக்குமேதானே பங்கிருக்கிறது.

அதிகபட்சம் என்ன, ஒவ்வொரு தாயும் (நாளைய மாமியார்) தன் மகள் அல்லது மகன் நன்றாக இருக்க வேண்டும், நல்ல துணை அமைய வேண்டும், வாழ்வு சிறக்க வேண்டும், வம்சம் விருத்தியடைய வேண்டும் என்பதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்?

ஆனால், ஏனோ மாமியார்கள் எப்போதும் மோசமாகவே சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள். திரைப்படங்களும் சின்னத் திரைத் தொடர்களும் இணைந்து இவர்களை பெரும் வில்லிகளாக்கிவிடுகின்றன. மாமியார்களின் பெருந்தன்மைகளைவிட கொடுமைகளைப் பற்றிதான் ஏராளமான கதைகளும்கூட.

மாமியாரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாட? உங்களுக்கு அவரைப் பிடிக்கிறதோ, இல்லையோ, கொண்டாடுங்கள். வாழ்த்துச் சொல்லுங்கள், இப்படியும் ஒரு நாள் இருக்கிறது, உலகத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடுங்கள். மகிழ்ச்சியடைவார்கள்.

இந்த சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சித்திரத்தில், மாமியாரை மருமகள்கள் அல்லது மருமகன்கள் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டாலே அதிசயப்படுவார்கள், ஆச்சர்யப்படுவார்கள், நேரில் பார்க்கும்போது, வாழ்த்தும்போது... எப்படி எதிர்வினையாற்றுவார்கள்? நினைத்துப் பார்க்க முடியவில்லை அல்லவா?  கொண்டாடிப் பாருங்கள்.  

மாமியார் தினம் சரி, மாமனார்கள் தினமும் இருக்கிறதா? இருக்கிறது, ஜூலை 30! இனிவரும் காலத்தில் மாமனார்களையும்கூட கொண்டாடத்தானே வேண்டும் [என்ன கொடுமை சரவணா, மச்சான், மச்சினி நாள்கள் எல்லாம் எதுவும் இல்லையாமே!].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com