மாமியார் எலிசபெத்தை மிஞ்சிய மருமகள் டயானா!

ராணி எலிசபெத் - டயானா இடையிலான உறவு வழக்கமான மாமியார் மருமகள் உறவாகவே இருந்தது. மாமியாரைக் கண்டு பயந்து அவரிடம் குறிப்பிட்ட ஒரு இடைவெளியை டயானா கடைப்பிடித்து வந்ததாகச் சொல்வார்கள்.
ராணி எலிசபெத்துடன் டயானா.
ராணி எலிசபெத்துடன் டயானா.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா திருமணம் நடந்தபோது அது ஏதோ தேவதைக் கதைகளில் வரும் திருமணம் போலவே நடந்தது. 1981ல் அந்த திருமணம் நடந்தபோது டயானாவுக்கு வயது வெறும் 20.

இங்கிலாந்து ராணியும், இளவரசர் சார்லசின் தாயாருமான இரண்டாம் எலிசபெத்தின் முழு ஒப்புதலுடன்தான் சார்லஸ்-டயானா திருமணம் நடைபெற்றது.

ராணி எலிசபெத் - டயானா இடையிலான உறவு வழக்கமான மாமியார் மருமகள் உறவாகவே இருந்தது. மாமியாரைக் கண்டு பயந்து அவரிடம் குறிப்பிட்ட ஒரு இடைவெளியை டயானா கடைப்பிடித்து வந்ததாகச் சொல்வார்கள். அரச குடும்ப நடைமுறைகள் டயானாவுக்கு சரிவர ஒத்துவரவில்லை என்று ராணி எலிசபெத் குறைபட்டுக் கொண்டதாகக் கூடச் சொல்வார்கள்.

டயானா ஸ்பென்சர், மெல்ல மெல்ல சின்னப் பெண் என்ற நிலையில் இருந்து உருமாறி பின்னர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். இங்கிலாந்து மக்கள் அவரை ‘மக்களின் இளவரசியாக’ கொண்டாடினார்கள். 

டயானாவின் மாமியாரான இங்கிலாந்து ராணி எலிசபெத் எங்கே போனாலும் கையில் ஒரு சிறிய கைப்பையை வைத்திருப்பார். அந்த கைப்பைக்குள் என்னதான் இருக்கும் என்று அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் டயானா எங்கே சென்றாலும் வெறும் கையை வீசியபடியேதான் செல்வார்.

இந்த ஒளிவுமறைவில்லாத போக்கு காரணமாக, மாமியார் ராணி எலிசபெத்தை விட மருமகள் டயானாதான் இங்கிலாந்து மக்களின் இதயம் கவர்ந்தவராக இருந்தார். இது ராணி எலிசபெத்துக்கு ஓரளவு பொறாமையாகக் கூட இருந்திருக்கும்.

ஆனால், இன்பமாக நீடித்திருக்க வேண்டிய இளவரசர் சார்லஸ்-டயானா திருமண வாழ்வு, கமீலா பார்க்கர் என்ற பெண்ணால் ஒரு கட்டத்தில் திடீர் முடிவுக்கு வந்தது. 

இளவரசர் சார்லசுக்கு, கமீலாவுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் டயானா நொறுங்கிப் போனார். அதன்பின் 1996ல் சார்லசுடன்  விவாகரத்து நடந்தது. அதன்பிறகு ஹெர் ராயல் ஹைனஸ் என்ற பட்டம் டயானாவிடம் இருந்து நீங்கியது. இந்தப் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள டயானா நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை.

மகன் வில்லியம் மட்டும், ‘கவலைப்படாதேம்மா! ஒருநாள் நான் இங்கிலாந்துக்கு மன்னராவேன். உனக்கு அந்தப் பட்டம் திரும்பக் கிடைக்கும்’ என்று தாயாரை சமாதானப்படுத்தினான்.

விவாகரத்துக்குப்பின் டயானா, பல்வேறு அறப்பணிகளைக் செய்தார். ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கான நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் புரவலராக அவர் இருந்தார். உலகம் முழுக்க கண்ணிவெடிகளை ஒழிக்கப் பாடுபட்டார்.

இந்த நிலையில் 1997ஆம் ஆண்டு, நடந்த எதிர்பாராத கார் விபத்து, எமனாக வந்து டயானாவை வேறு உலகத்துக்கு அவசரமாகக் கூட்டிச் சென்று விட்டது.
கமீலா பார்க்கர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். முதல் திருமணம் மூலம் அவருக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. 

கமீலாவும், டயானாவும் தோழிகளாக இருந்தவர்கள். அதுபோல, சார்லசும், கமீலாவின் முதல் கணவரும் நண்பர்கள்.

கமீலா பார்க்கரை சார்லஸ் மறுமணம் செய்ய விரும்பிய போது இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குப் பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கமீலா பார்க்கரை சார்லசைத் தவிர வேறு யாருக்கும் இங்கிலாந்தில் பிடிக்கவில்லை.
கமீலாவுடன் மகனுக்கு இருந்த காதலை முறிக்க ராணி எலிசபெத் சில ரகசிய ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூட சொல்வார்கள்.

இந்த நிலையில், கமீலா பார்க்கரை மணந்தால் மட்டுமே சமூகத்தில் தனக்கு மரியாதை நீடிக்கும் என்ற முடிவுக்கு சார்லஸ் வந்தார். 2005 ஆம் ஆண்டளவில்தான் ஒருவழியாக இந்தத் திருமணத்துக்கு ராணி எலிசபெத் ஒப்புக் கொண்டார். கமீலா பார்க்கரை அவர் சந்திக்க அனுமதித்தார்.
2005ல் சார்லஸ்-கமீலா திருமணம் நடந்தபோது ராணி எலிசபெத் அதில் பங்கேற்கவில்லை. கமீலாவுக்கான திருமண மோதிரம்கூட, பக்கிங்காம் அரச குடும்பத்தின் பாரம்பரிய தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம் அல்ல. 

ராணி எலிசபெத்–கமீலா பார்க்கர் இடையிலான மாமியார் - மருமகள் உறவு ரொம்ப நெருடலான உறவாகத்தான் இருந்தது. இருவரும் தப்பித்தவறி சந்தித்துக்கொள்ளும் வேளைகளில் அவர்களது உடல்மொழியே அதைக் காட்டிவிடும்.

இத்தனைக்கும் குதிரைப் பந்தயம் மாதிரியான சில பொழுதுபோக்குகளில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஒரே மாதிரியான ரசனை உண்டு.
சார்லஸ்-கமீலா திருமணம் நடந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆனபிறகே மாமியார் எலிசபெத்துக்கும், மருமகள் கமீலாவுக்கும் இடையே ஒரு இணக்கச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உலகத்தை ஆட்டிப்படைத்து, கூடவே இங்கிலாந்தையும் ஆட்டிவைத்த கரோனோ பெருந்தொற்று கூட இந்த இணக்கச் சூழ்நிலைக்கு ஒரு காரணம் எனக் கூறலாம்.

மாமியார் மெச்சும் மருமகளாக கமீலா இல்லாவிட்டாலும்கூட, ஏதோ ஒரு விதத்தில் இந்த உறவு நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com