'புகுந்த வீடும், பிறந்த வீடும் வேறு வேறல்ல' - மகப்பேறு மருத்துவர்களான முன்மாதிரி மாமியார்-மருமகள்!

பெண்களுக்கு பிறந்த வீடுதான் சொர்க்கம் என்பது வழக்கம். ஆனால், நான் எதிர்மறை. அவரை அம்மா என்றே அழைத்து வருவதால் இதுவும் (மாமியார் வீடு) எனக்கு பிறந்தவீடு தான் என்கிறார் மருத்துவர் லட்சுமிபிரபா. 
ராமேஸ்வரி - லட்சுமிபிரபா
ராமேஸ்வரி - லட்சுமிபிரபா

நமது நாட்டின் மிகப்பெரிய பலமே குடும்பக் கட்டமைப்புதான். அந்த குடும்பக் கட்டமைப்புகளுக்கு அடிப்படையாக இருப்பது உறவுகள். ஒவ்வோர் உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை. உறவுகளுக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை, நமது பண்பாடும், பாரம்பரியமும் வழங்கி உள்ளது. நமது, வாழ்வில் உறவுகளைத் தவிர்த்து எந்த ஒரு நிகழ்ச்சியும் எந்த வீடுகளிலும் நடைபெறுவதில்லை. 

கணவன்-மனைவி, அப்பா-மகன்-மகள், மாமன், மைத்துனன், கொழுந்தியாள், சித்தப்பா, சித்தி, தாத்தா-பாட்டி, பெரியப்பா-பெரியம்மா, அத்தை-மாமா, அண்ணன்-அண்ணி, அக்கா-அத்தான், தம்பி, தங்கை என எத்தனை, எத்தனை உறவுகள் நம்மைச் சுற்றி அத்தனையும் தவம். அதிலும், மாமியார்-மருமகள் உறவு குறிப்பிடத்தக்கது. 

டாக்டர்  ராமேஸ்வரி நல்லுசாமி
டாக்டர்  ராமேஸ்வரி நல்லுசாமி

காலங்காலமாகவே மாமியார்-மருமகள் உறவு என்பது சிக்கல் மிகுந்ததாக உள்ளது. தானே விரும்பி அழைத்து வரும் பெண்ணை தன் வாழ்நாள் எதிரியாக நினைக்கும் அளவிற்கு மோசமாகும் நிலையும் உள்ளது. மகனின் மீதான உரிமை, தன்னுடைய சாம்ராஜ்யத்தில் நுழைந்த புதிய உறவு, தன்னை விட படிப்பு, வருமானம், வேலை ஏதோவொன்றில் உயர்ந்த பெண், தனக்கான மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடுமோ என்ற பயம் உள்ளிட்ட காரணங்கள்தான் பெரும்பாலும் மாமியார்-மருமகள் பந்தத்தை சிதைக்கின்றன.

இத்தகைய சூழலில் அன்றும், இன்றும், என்றும் மாமியார்-மருமகள் உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் திருச்சியைச் சேர்ந்த 2 பெண் மருத்துவர்கள். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ந. நல்லுசாமியின் மனைவிதான் அந்த மாமியார் (ராமேஸ்வரி நல்லுசாமி). திருச்சியில் சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் சிறந்த மருத்துவர் என்ற பெயர் பெற்றவர். இவரது மருமகள்தான் லட்சுமி பிரபா. இவரும், மகப்பேறு மருத்துவர். இதய அறுவை சிகிச்சை நிபுணரான செந்தில்குமார் நல்லுசாமியை, 22 வயதில் திருமணம் முடித்து, பிறந்தவீட்டை விட்டு புகுந்த வீடு வந்தவர். தனது தாய் வீட்டில் இருந்த ஆண்டுகளைவிட மாமியார் வீட்டில் இருந்த ஆண்டுகள்தான் அதிகம் என்பதைவிட ஆனந்தம் என்பதே சரியாக இருக்கும் என்கிறார் லட்சுமி பிரபா. 

கணவர் மற்றும் பேரனுடன் ராமேஸ்வரி நல்லுசாமி
கணவர் மற்றும் பேரனுடன் ராமேஸ்வரி நல்லுசாமி

தனது மாமியார் குறித்து லட்சுமி பிரபா பகிர்ந்து கொண்டதாவது:

நான், எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்தபோது திருமண பேச்சு எழுந்தது. திருமணம் முடிந்துதான் பயிற்சி மருத்துவராக ஆனேன். அப்போது தொடங்கி இப்போது வரை எனது முதுகெலும்பாகவும், என் குடும்பத்தின் அச்சாணியாகவும் விளங்குகிறார் எனது மாமியார் (ராமேஸ்வரி நல்லுசாமி). நான், மாமியார், அத்தை என நினைத்ததும் இல்லை. அழைத்ததும் இல்லை. அம்மா என்றுதான் இன்றுவரை அன்போடு அழைத்து வருகிறேன். எம்பிபிஎஸ் முடித்தவுடன் எந்தத் துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் எனது விருப்பத்துக்கே முன்னுரிமை அளித்தார். எனக்கு முன்னுதாரணமே அவர்தான் என்பதால், அவர் பிரசித்தி பெற்று விளங்கும் மகப்பேறு மருத்துவர் துறையை தேர்வு செய்து மேற்படிப்பு முடித்து இன்று நானும் மகப்பேறு மருத்துவராக வளர்ந்து நிற்கிறேன்.

ராமேஸ்வரி - லட்சுமிபிரபா
ராமேஸ்வரி - லட்சுமிபிரபா

எனது கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி, எனது இரு பிரசவத்தையும் பார்த்தது எனது அம்மாதான் (மாமியார்). முதல் மகன் சித்தார்த் யஷ்வந்த். இரண்டாவது மகன் அகிலேஷ் விஷ்வா. எனது, கணவர் செந்தில்குமார் நல்லுசாமி, அவரது தம்பி அருண்குமார் நல்லுசாமி ஆகியோரையும் இதய அறுவை சிகிச்சை நிபுணராக வளர்த்தெடுத்துள்ளார். அதோடு மட்டுமன்றி எனது மகன் சித்தார்த்தையும் மருத்துவராக்கியுள்ளார். இரண்டாவது மகன் அகிலேஷ், தற்போது நீட் தேர்வு எழுதி மருத்துவராகும் விளம்பில் நிற்கிறார். இத்தனைக்கும் அடித்தளமாகவும், ஆணிவேராகவும் இருந்தவர் எனது அம்மா (மாமியார்).

74 வயதிலும் பம்பரமாக சுழன்று, மருத்துவமனையில் அத்தனை கர்ப்பிணிகளையும், நேயாளிகளையும் அன்புடன் கவனித்து ஓய்வே இன்றி பணியாற்றி வருகிறார். அவர்தான் எனது ரோல்மாடல். செய்யும் பணியில் முழுமையும், திருப்தியும் வேண்டும் என்பது அவரது விருப்பம். அதுதான், அவரை ஒவ்வொரு நாளும் உற்சாகமாய் வைத்துள்ளது. எனக்கும், எனது கணவருக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் எழுந்தால் மகன் என்பதற்காக எனது கணவருக்கு ஆதரவாக நிற்பதில்லை. எப்போதும், எனக்கு ஆதரவாகவே நின்றுள்ளார். நான், வைத்துள்ள புடவைகளில் பெரும்பகுதி அவர் எடுத்து கொடுத்ததுதான். எந்த விசேஷமாக இருந்தாலும் எனக்கான புடவை தேர்வு என்பது அவரது பணிதான். ஒருபோதும் எனது சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. சுதந்திரம் இருப்பதற்காக ஒருபோதும் அவர் தடத்தை விட்டு விலகிச் சென்றதில்லை. வீட்டிலும் (கூட்டுக் குடும்பம்) அவருடன்தான் இருக்கிறேன். மருத்துவமனையிலும் அவருடன்தான் இருக்கிறேன். வாழ்க்கைக்கும், சேவைக்கும் (மருத்துவம்) வழிகாட்டியாக இருக்கிறார்.

பெரும்பாலான பெண்களுக்கு பிறந்த வீடுதான் சொர்க்கம் என்பது வழக்கம். ஆனால், நான் எதிர்மறை. எனக்கு, புகுந்த வீடும், பிறந்த வீடும் வேறல்ல. அம்மா என்றே அழைத்து வருவதால் இதுவும் (மாமியார் வீடு) எனக்கு பிறந்த வீடுதான். எல்லோருக்கும், இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது. அந்த வகையில் நான் கொடுத்து வைத்துள்ளேன் என்கிறார் லட்சுமி பிரபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com