சுஜித் சம்பவம் அமெரிக்காவிலும் நிகழ்ந்துள்ளது.. ஆனால் அதுவே..

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன.
ஜெஸிகா மெக்லுர்
ஜெஸிகா மெக்லுர்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய போது, சுஜித் சம்பவம் பற்றியும் இது தொடர்பான பல்வேறு விஷயங்களையும் மக்கள் தொடர்ந்து பேசி, அலசினர். அன்று அது மிகவும் கொந்தளிப்பாகப் பேசப்பட்டாலும், இன்னும் அந்த அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

ஆனால்,

அமெரிக்காவில் நிலைமையே வேறு.

அமெரிக்காவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் குழந்தை உயிரோடு மீட்கப்பட்டது. அது இன்றோ நேற்றோ அல்ல 1987ம் ஆண்டு.. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு. 

1987ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, 18 மாதக் குழந்தையான ஜெஸிகா மெக்லுர், தனது உறவினர் வீட்டின் பின்புறம் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். சுமார் 2 நாள்களுக்கும் மேல் அதாவது 58 மணி நேரம் நடைபெற்ற மீட்புப் பணிக்குப் பிறகு ஜெஸிகா உயிரோடு மீட்கப்பட்டார்.

ஜெஸிகா சிக்கிக் கொண்ட பள்ளத்துக்கு அருகே மற்றொரு பள்ளம் தோண்டப்பட்டு, ஜெஸிகா பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கியிருந்து பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார்.

இந்த ஒரு சம்பவம் அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆழ்துளைக் கிணறுகள் திறந்திருந்தால் அதில் குழந்தைகள் விழுந்து பலியாக வாய்ப்பிருப்பது அன்றைய தினம் அனைத்து மக்களுக்கும் புரிந்தது. அவ்வளவுதான். அவர்களுக்கு இந்த ஒரு அனுபவமே போதும். அதில் இருந்தே பாடம் கற்றுக் கொண்டார்கள். உடனடியாக பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை எல்லாம் இரும்பு மூடி போட்டு மூடிவிட்டார்கள்.  ஜெஸிகா சம்பவம்தான் அவர்களுக்கு முதலும் கடைசியுமான சம்பவம்.

அந்த ஒரு சம்பவமே அவர்களை ஆட்டிப்படைத்துவிட்டது. அனைவருமே திருந்திவிட்டார்கள். 

அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஜெசிகாவுக்கு தற்போது 35 வயதாகிறது. அவருக்கு திருமணமாகி, ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

அமெரிக்கர்களைப் போல வாழ அசைப்படும் நாம் அவர்களைப் போல ஏன் இப்படி மாறுவதில்லை. அமெரிக்கர்களைப் போல ஆடை அலங்காரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.. ஆங்கிலத்தில்  பேச ஆசைப்படுகிறோம்.. இருந்தும் கூட இதுபோன்ற சம்பவங்களால் பாடம் கற்றுக் கொள்ள மறக்கிறோம். அது மட்டுமா? சில நாள்களில் மறந்தே விடுகிறோம்... அதுபோலவே சில நாட்களில் சுஜித்தையும் ஆழ்துளைக் கிணறுகளையும்  மறந்து விட்டோம். மீண்டும் அடுத்து ஆண்டுதான் நினைவுக்கு வரும். வராமலும் கூட போகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com