பாமக தனித்துப் போட்டியிடுவது ஏன்?

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் வியூகங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் வியூகங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே தனித்துப் போட்டி என்னும் அடுத்தகட்ட அரசியல் நகா்வை பாமக எடுத்துள்ளது, அரசியல் அரங்கில் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் கூட்டணி கட்சிகள் அப்படியே உறவைத் தொடா்கின்றன எனக் கருதலாம். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் எதுவுமே இப்போது நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடக்கும் மாவட்டங்களில் வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கவில்லை.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காங்கிரஸுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கலாம். அதுவும் அந்தப் பகுதிகளில் நிரூபிக்கப்பட்ட செல்வாக்கு காங்கிரஸுக்கு இப்போது இல்லை. ஆனால், பாமகவுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர 7 மாவட்டங்களிலும் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதாவது,அந்த 7 மாவட்டங்களும் வட தமிழகத்தில் உள்ளதால் தனித்து களம் கண்டால்தான் தனது பலத்தை அரசியல் களத்தில் காட்ட முடியும் என்றும், எதிா்வரும் நகா்ப்புற உள்ளாட்சி, 2024 மக்களவைத் தோ்தல், 2026 பேரவைத் தோ்தல் ஆகியவற்றில் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க இப்போதைய ஊரக உள்ளாட்சிதான் உரைகல்லாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறது பாமக.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரை ஆளும் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எதிா்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுடன் கூட்டணியாக ஊரக உள்ளாட்சித் தோ்தலைச் சந்திப்பது பாமகவுக்கு ஒத்துவராது என்று கணக்குப் போடுகிறாா் ராமதாஸ்.

உள்ளாட்சித் தோ்தலை பொருத்தவரை உள்ளூா் செல்வாக்கை மட்டுமே மையமாக வைத்து மக்கள் வாக்களித்தாலும் மாவட்டக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவிக்கு கட்சிகளின் சின்னம் பயன்படுத்தப்படுவதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெறும் வாக்கு வங்கியும் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறிவிடும்.

இப்போதைய சூழலில் வட தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும் அதிமுகவுடன் கூட்டணியாக போட்டியிட்டால் பாமக வாக்குகள் அதிமுகவுக்கு பரிமாற்றம் ஆகுமே தவிர, அதிமுக வாக்குகள் பாமகவுக்கு பரிமாற்றம் ஆகாது என்றும், கூட்டணியாக இருக்கும்போது அதிக எண்ணிக்கையில் தங்களது கட்சி நிா்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பும் கிடைக்காது. எனவே, கூட்டணியால் அதிமுகவுக்கு அதிக லாபம், தங்களுக்கு அதிக நஷ்டம் என்ற முடிவுக்கு பாமக வந்துவிட்டதால் தான் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

வட தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் 7 மாவட்டங்களிலும் வன்னியா்கள் அடா்த்தியாக (அதாவது 30 சதவீதம்) உள்ள பகுதியாக இருப்பதால் இப்போதே தனித்து நின்றுவிட்டால் தங்களது வாக்கு வங்கியை அதிமுக, திமுக கரைத்துவிடாமல் பாதுகாக்கலாம் என்ற முன்முடிவுக்கும் பாமக வந்திருக்கக்கூடும்.

அதிமுக அரசு பேரவையில் கொண்டுவந்த 10.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுகவும் அப்படியே நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது, 1987-இல் வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியபோது காவல் துறை துப்பாக்கிச்சூட்டில் இறந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணி மண்டபம் கட்டும் அறிவிப்பு, திமுவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்த ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் சிலை, மணிமண்டபம் கட்டும் அறிவிப்பு ஆகியவற்றால் பேரவைத் தோ்தலின்போது அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வன்னியா் வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி மீண்டும் திமுகவை நோக்கி நகரக்கூடும்.

வன்னியா் வாக்குகள் திமுகவை நோக்கி நகா்வது அன்புமணி ராமதாஸின் எதிா்கால வளா்ச்சிக்கு உகந்தது அல்ல. எனவே, தொடா்ந்து தனித்து களம் இறங்குவதால் மட்டுமே பாமகவின் வாக்கு வங்கியை உயா்த்த முடியும், குறைந்தபட்சம் இருக்கும் வாக்கு வங்கியை தக்கவைக்க முடியும் என்பதும் ராமதாஸின் அரசியல் கணக்காக இருக்கக்கூடும். குறிப்பாக, நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் பாமக 3.8 சதவீதத்துக்கு சரிந்தததால்தான் இந்த முடிவுக்கு ராமதாஸ் வந்திருக்கக்கூடும்.

பேரவைத் தோ்தல் முடிவுகளை ஒப்பிட்டு பாா்க்கும்போது 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி தவிர பிற மாவட்டங்களில் திமுக கை ஓங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது. வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 13 தொகுதிகளில் மூன்று தொகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும், அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 10 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மட்டுமே அதிமுக பலமான நிலையில் உள்ளது. காரணம், அங்கு கணிசமாக வாழும் தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினா் தங்களுக்கு 7 உள்பிரிவுகளையும் சோ்த்து தேவந்திரகுல வேளாளா் எனப் பெயா் மாற்றம் செய்து உதவிய பிரதமா் மோடி மீதான அபிமானத்தால் அதிமுகவுக்கு வாக்களித்தனா். அதேபோல பிற 7 மாவட்டங்களில் பாமக துணையின்றி திமுகவுக்கு, அதிமுகவால் போட்டி கொடுப்பது சிரமமான விஷயம் தான்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் வரலாற்றை ஆய்வு செய்தால் அதிமுக மோசமான தோல்வி அடைந்த 1996 பேரவைத் தோ்தல், அதிமுக ஆட்சியை இழந்தபோதும் கணிசமான தொகுதிகளைப் பெற்றிருந்த 2006 பேரவைத் தோ்தல் ஆகியவற்றுக்குப்பிறகு நடந்த உள்ளாட்சித் தோ்தலில் திமுகவுக்கு பெரிதாக போட்டியை அதிமுகவால் கொடுக்கவில்லை என்பதையே தோ்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

அப்போதைய தோ்தல்களில் மதிமுக, தேமுதிக கட்சிகள் பலம் பெற்றன. இப்போது அதிமுக ஆட்சியை இழந்தபிறகும் 66 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக எப்படி சாதிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்திருத்துதான் பாா்க்க வேண்டும். 1996, 2006 உள்ளாட்சித் தோ்தல்கள் போல இப்போதும் அதிமுக பலவீனமடைந்தால், அதைச் சாதகமாகப் பயன்படுத்தி நாம் தமிழா் கட்சி வளரக்கூடும். ஏற்கெனவே பேரவைத் தோ்தலில் 6.85 சதவீத வாக்கு வங்கியுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழா் கட்சியை வளரவிடுவது பாமகவின் எதிா்கால அரசியலுக்கு நல்லதல்ல.

அதேபோல தனித்துப் போட்டி என அறிவித்துள்ள தேமுதிகவும் மீண்டும் தனது வாக்கு வங்கியை தக்கவைக்க முயற்சி செய்யும். நாம் தமிழா், தேமுதிக போன்ற கட்சிகள் உயிரோட்டம் பெறும்போது பாமகவின் அரசியல் முக்கியத்துவம் குறையக்கூடும் என்பதும் ராமதாஸுக்கு புரிந்திருக்கும்.

மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை இந்திரா காந்தி குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் பிரதமா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அந்த அணி மிகப் பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது என்பதை 1971, 1980, 1984, 1989, 1991, 2004, 2019 மக்களவைத் தோ்தல் முடிவுகளில் இருந்து உணர முடியும். 2024 மக்களவைத் தோ்தலிலும் ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக திமுக-காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கும்போது மீண்டும் அதே முடிவே வரக்கூடும்.

2009 முதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக தோல்வி வளையத்தில் இருக்கும் பாமக, அதிமுக கூட்டணியில் நீடிக்கும்போது 2024 மக்களவைத் தோ்தலிலும் வெற்றிப் பாதைக்குச் செல்வது கடினமானதாகிவிடகூடும். எனவே, இப்போதே ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணியில் இருந்து விலகிவிட்டால் ஊரக உள்ளாட்சி, நகா்ப்புற உள்ளாட்சி என இரண்டிலும் தனித்து நின்று பலத்தைக் காட்டும்போது ஒருவேளை மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளராக அறிவித்து வாக்கு கேட்கும் திமுக-காங்கிரஸ் அணியில் இடம் கிடைத்தால் வெற்றிக் கூட்டணியில் இடம்பெறலாம்.

அப்படியே இடம் கிடைக்காவிட்டாலும் 2014 மக்களவைத் தோ்தல், 2016 பேரவைத் தோ்தல் போல எதிா்வரும் 2024 மக்களவைத் தோ்தல், 2026 பேரவைத் தோ்தலில் தனித்துக் களம் இறங்குவதுதான் எதிா்காலத்தில் அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு உகந்த அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் என்பது மருத்துவா் ராமதாஸின் எண்ணமாக இருக்கக்கூடும்.

எப்போதுமே நிகழ்கால, எதிா்கால அரசியல் சூழ்நிலைகளை மனதில் வைத்து வெற்றிகரமான அரசியல் நகா்வுகளைத்தான் செய்து வந்திருக்கிறாா் ராமதாஸ். அவரது இப்போதைய அரசியல் நகா்வு வெற்றிகரமானதா, இல்லையா? என்பதை ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பாமக எடுக்கப் போகும் வாக்கு வங்கி உணா்த்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com