தமிழ் மன்னர்களின் அரணும் போர்முறையும்

வரலாற்று போற்றும் தமிழ் வீர மன்னர்கள் வீரத்தில் சிகரம் தொட்டவர்கள் என்பதை நம் சங்க இலக்கியம் வழியில் நாம் அறிகிறோம்.
தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழனின் சிலை
தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழனின் சிலை

சுற்றும் உலகில் உள்ள இயற்கை நிறைந்த சூழலுக்கு ஏற்றே ஒவ்வொரு நிலத்தில் வாழும் உயிரினங்களின் செயல்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, உண்ணும் உணவுக்காக உயிரினங்களுக்குள் உயிரினங்கள் வேட்டையாடி பழகின. இவ்வுயிரினங்களிலேயே மனிதன் தனித்த வளர்ச்சியை எய்தினான். மனிதனைப் பொருத்தவரை வேட்டையாடுதலில் தொடங்கிய பயணம் கால்நடை வளர்ப்பு, பயிர்கள் வளர்ப்பின் மூலம் புத்துயிர் பெற்று, உற்பத்திக் கருவிகளை உருவாக்கி, நிலையானதொரு வாழ்வைத் தொடங்கினான். பின்பு அவனுக்கென்று இருப்பிடம், பின்னாளில் அந்த இருப்பிடம் கோட்டையாய் மாறியது, பின்பு தன் இருப்பிடம் மற்றும் கோட்டையைக் காப்பாற்ற பல அரண்களும் பொறிகளும் பொறிக்கப்பட்டன.

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுரைக்கும் நூல்

                                                                  (குறள் 743)  
பொருள்: பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடையதே கோட்டை என்று நூல்கள் கூறும்.

பண்டைக் காலத்தில் சில வரையறைகளோடு போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக போருக்குச் செல்வோர், குறிப்பிட்ட பூக்களைச் சூடுதல் மரபாக இருந்துள்ளது. ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட பூவைச் சூடி போர்புரிவது மரபு. பூக்களைச் சூடி போரிடும் மரபைக் கொண்டிருந்தனர். அதனால் போருக்குச் செல்லும் முன்பு பூச்சூட வருமாறு வீரர்களுக்கு அழைப்பு விடுத்தனர். கழாத்தலையாரின் புறப்பாடல் ஒன்றில்,

மூதிலாள ருள்ளும் காதலின்
தனக்கு முகந் தேந்திய பசுயென் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோ ளின்றென் றையும்
மழவாய் தண்ணுமை யழிசினன் குரலே 

                                                                          (புறம்.289)
என்று வெட்சிப் போர் புரிய வேண்டி (ஆநிரை கவர்தல்) போர் பறையை அறிவிக்க, மறவர் பலரும் திரண்டனர். அப்போது மன்னன் அவர்களோடு விருந்துண்ணுகின்றான். அங்கு மறவர்கள் அனைவருக்கும் ‘கள்’ வழங்கப்படுகிறது. பாசறைக் கண்ணே! இனி நிகழ்தற்குரிய போர்க்குரிய பூவை பெறுமாறு சான்றோர் ஒருவர் கூறுகின்றார்.

கிரேக்கம், ரோமாபுரி ஆகிய இடங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்த வணிகர், தொழிலாளர் முதலானோரை 'யவனர்' என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அந்த யவனர்கள் தமிழ் மன்னர்களிடம் கோட்டை காப்பாளர்களாகவும், குதிரை வீரர்களாகவும் கோட்டையைக் காக்கும் பல்வேறுவிதமான அழிவுப் பொறிகளை ஆக்கி நிறுவி கோட்டைகளைப் பாதுகாத்துள்ளனர். 

யவனர்கள் பாண்டிய மன்னனின் அரண்மனையில் காவல் மிக்க கோட்டை வாசலைக் கொலைவாள் ஏந்திக் காவல் காத்து நின்றதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

"கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்"

                                                        (சிலம்பு, ஊர்காண் காதை: 65-66)                    
தென்னிந்தியாவில் ரோமர் இராணுவப் பொறிகள், வணிகர்கள், வீரர்கள் மட்டுமல்லாமல், எண்ணற்ற உரோமப் பொறியாளர்களும், கைவினைஞர்களும் தமிழ்நாட்டில் நிலைத்த குடியினராய் யவன சேரி என்று அழைவுக்கத்தக்க வாழ்ந்திருந்தனர். உரோமப் பொறியாளர்கள், தமிழ் அரசர்களுக்காகக், கோட்டை மதில்களைத் தகர்த்து அழிக்க வல்ல, உலோகப் பூணிட்ட பெருந்துாலங்களையும், மதில் வாயிற்கண் பொறித்து வைக்கப்படும் பல்வேறு தற்காப்புப் பொறிப்படைகளையும் செய்து தந்தனர். கோட்டை மதில்கள் பல்வேறு பொறிப்படைகள் பொருத்தப்பெற்றுப் பகைவர் எளிதில் நுழையாதாவாறு அக்கால கோட்டைகள் கட்டப்பட்டுள்ளது. 

மிளையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்.

                                                                        (சிலப்பதிகாரம்:210)
மதுரையில் மன்னரின் இருப்பிடம் சூழ இருந்த மதில் வாயிற்கண் பொருத்தப் பெற்றிருந்த பொறிப்படைகளின் பட்டியல் இப்பாடலின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

1) வளைந்து தானே எய்யும் எந்திரவில்
2) கரிய விரல்களை உடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி
3) கற்களை உமிழும் கவண் பொறி
4) கொதிக்கும் எண்ணெயை வாரி இறைக்கும் பொறி
5) உருக்கிய செம்பை உமிழும் பொறி
6) உருக்கிய எஃகை உமிழும் பொறி
7) கல்லுமிழ் கவனுக்கு வேண்டும் கற்களைக் கொடுத்து உதவும் பொறிக் கூடை
8) துண்டில் வடிவில் பண்ணப்பட்டு, மிதிலைப் பற்றுவாரைக் கோத்து வலிக்கும் தாண்டிற் பொறி
9) கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி
10)ஆண்டலைப் புள் வடிவில் இருந்து வருவார் தலையைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி
11) கிடங்கில் ஏறின் மறித்துத் தள்ளும் இருப்புக் கவை
12) கழுக்கோல்
13) அம்புக்கட்டு
14) அம்புகளை எய்யும் ஏவறைகள்
15) ஐயவித்துலாம்
16) மதிலைப் பற்றுவார் கைகளைக் குத்திப் பொதுக்கும் ஊசிகள்
17) கிச்சிவிப் பறவைபோல், பாய்ந்து சென்று பகைவர் கண்களைக் கொத்தி மீளும் பொறி,
18) மதில் மீது ஏறினார் உடலைக் கொம்பால் குத்திக் கிழிக்கும் பன்றி வடிவில் நிற்கும் பொறி,
19) மூங்கில் வடிவில் நின்று அடித்து நொறுக்கும் பொறி
20) கதவுக்கு அரணாக, உள்வாயிற் வடியில் நிலத்தில் நால விடப்படும் மரங்களாம் எழு, சீப்பு
21) கதவுக்குக் குறுக்கே பாய்ச்சப்படும் கணைய மரம்,
2) ஏவுகணைகள்,
23) குந்தம்,
24) வேல்,

சீவக சிந்தாமணி, சில நூறு ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட நூலாயினும், அவற்றின் சில பாக்கள் இங்கு  எடுத்துக்காட்டும் தகுதியுடையவாம். அதில் கூறப்பட்டிருக்கும் படைப் பொறிகளாவன:

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்

                                                                  - (சீவக சிந்தாமணி ; 102 - 104)
நூற்றுவரைக் கொல்வி; பகை வீரர்களைத் தூக்கி எறியும் பொறி, காணத் தெரியும் பேய்ப்பொறி, யானைப்பொறி, பாம்புப்பொறி, கூற்றுநிகர் கழுகுப் பொறி, சங்கிலிப் பொறி, குந்தம், புலிப்பொறி, விற்பொறிகள், கொடிய குதிரைப்பொறி, பகைவரைத் தொடர்ந்து சென்று வெட்டும் வாள், கல் உமிழ் கவண்கள், பாவை உருவிலான பொறிகள், செந்திப்பொறிகள், செந்தழல் கொப்புளிக்க, கொல்லன் காய்ச்சிய இருப்புக் குண்டுகள், கொக்குப் பொறி, கூகைப் பொறி, உருக்கிய செப்பு  உருக்கிய இரும்பு, கொதிக்கும் எண்ணெய் இவைகளை வாரி இறைக்கும். பொறிகள், அம்பு, வேல், கற்களைத் தாமே ஏவும் பொறிகள், பன்றிப் பொறி, பாம்புப் பொறி, தானே இயங்கும் தேர்ப் படை,  பல பொறிகளை பற்றி இப்பாடல் நமக்கு விளக்கிறது.

சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கள் சொல்லும் பல காட்சிகள் இன்று வரலாற்று ஆதாரங்களாக கல்வெட்டுகள் மூலமாகவும் அகழ்வாய்வுகள் மூலமாகவும் உண்மை என வெளிப்பட்டு வருகின்றன.

போர் விதிகள்:
போருக்கு இலக்கணம் கூறும் புறநானூற்றுப பாக்களில் விதிகள் சொல்லப்பட்டுள்ளன.

“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும் பிணியுடையீரும், பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர் பெறாஅதீரும்,
எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை”

                                              (புறநானூறு:9)
என்று பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய புறநானூறு 9ஆம் பாட்டினால் அக்காலப் போர்களில் எவ்வாறு அறப்போர் என்பதற்கான  விளக்கம், பசுக்களைக் கொல்லக் கூடாது, அந்தணரை கொல்லக் கூடாது, புதல்வரைப் பெறாதவரைக் கொல்லக்கூடாது என்ற விதி இருப்பதைப்போல இவ்வாறு அந்தணர் ஒழுக்கங்களே புறநானூற்றில் விதிகளாகச் சொல்லப்படுகின்றன. பெண்களைக் கொன்றுவிட்டால் சந்ததி அற்றுப் போய்விடும், பிறகு போரிடுவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதால் பெண்கள் போரில் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

வரலாறு போற்றும் தமிழ் வீர மன்னர்கள் வீரத்தில் சிகரம் தொட்டவர்கள் என்பதை சங்க இலக்கியம் வழியில் நாம் அறிகிறோம். வெற்றி என்னும் போதையை ரசிக்கவே பல போர் நடந்து இருப்பதையும் நம் தமிழ் இலக்கிய நூல்களால் வழியாக அறிய முடிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com