சொத்து வரி முறைகேடுகளைத் தவிர்க்க...

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதில் ஏற்படும் முறைகேடுகளையும், வருவாய் இழப்பையும் தவிர்க்கும் வகையில் கட்டடங்களை ஜிபிஆர்எஸ் முறையில் அளவீடு செய்வதற்கு அரசு நடவடிக்கை
சொத்து வரி முறைகேடுகளைத் தவிர்க்க...


தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதில் ஏற்படும் முறைகேடுகளையும், வருவாய் இழப்பையும் தவிர்க்கும் வகையில் கட்டடங்களை ஜிபிஆர்எஸ் முறையில் அளவீடு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்கள், 600 முதல் 1,200 சதுரடி, 1,200 முதல் 1,800 சதுரடி, 1,800 சதுரடிக்கு மேல் என 4 வகைகளாகப் பிரித்து, முறையே 25, 50, 75 மற்றும் 100 சதவீதம் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் திமுக கூட்டணிக் கட்சிகளும் சொத்து வரி உயர்வை மறு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதிலும், மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே உயர்த்தப்படுவதாக மாநில அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள 1,200 சதுரடிக்கும் குறைவான குடியிருப்பு கட்டடங்கள், சென்னை பெரு நகர மாநகராட்சியின் பிற பகுதிகள், இதர 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மட்டும் 88 சதவீதம் உள்ளன. இதனால், இந்த சொத்து வரி உயர்த்தப்பட்டாலும் கூட பெரும்பாலான மக்களுக்கு பெரிய  அளவில் பாதிப்பு இருக்காது என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பின்னர் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. 2013- இல் உயர்த்தப்பட வேண்டிய வரி, 2018 -ஆம் ஆண்டிலும் உயர்த்தப்படவில்லை. இதனிடையே கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட கூடுதல் செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதான நிதி ஆதாரமான சொத்து வரியை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

குறைத்து மதிப்பீடு செய்ததால் பல கோடி ரூபாய் இழப்பு: அதே நேரத்தில் சொத்து வரியை நிர்ணயம் செய்வதில், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள வருவாய் பிரிவு அலுவலர்களின் தவறான வழிகாட்டுதலால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடியிருப்பு கட்டடங்களின் பரப்பளவைக் குறைத்து மதிப்பீடு செய்தும், அதன் மூலம் குறைவான வரி நிர்ணயம் செய்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 25 முதல் 40 சதவீத குடியிருப்பு கட்டடங்களின் பரப்பளவு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. அந்த முறைகேடுகள் சரி செய்யப்பட்டால், சொத்து வரியை அதிகரிக்க வேண்டிய அவசியமே ஏற்படாது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஏ, பி, சி, டி என 4 மண்டலங்களாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பல வணிகக் கட்டடங்களை சி மற்றும் டி பிரிவு என குறிப்பிட்டு குறைவாக வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆண்டொன்றுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாக இந்த முறைகேடு தொடர்ந்து நடைபெற்று வருவது, தணிக்கையில் பல முறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், தவறு செய்த அலுவலர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தவறுகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது வரியை மட்டும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசு, கட்டடங்களின் பரப்பளவை குறைவாக மதிப்பீடு செய்த உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பிரிவு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜிபிஆர்எஸ் மூலம் அளவீடு: குறிப்பிட்ட 4 மாநகராட்சிகளில் சொத்து வரி வருவாய் கடுமையாக சரிவடைந்ததை அடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கட்டடங்களை அளவீடு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அந்த நடைமுறையை சில வார்டுகளில் மட்டும் அமல்படுத்திவிட்டு தொடர்ந்து பின்பற்றாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் ரூ.10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட ஜிபிஆர்எஸ் அளவீடு தொடர்பான கருவிகள் பயன்பாடின்றி முடங்கியுள்ளன. 

ஜிபிஆர்எஸ் முறையில் துல்லியமாக அளவீடு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், எதிர்பார்ப்பை விட சொத்து வரி மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், இந்த ஆய்வினை வருவாய் பிரிவு அலுவலர்கள் மட்டுமன்றி பொறியாளர்கள் மூலமாகவும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஆய்வு நடத்தப்படும் பட்சத்தில், ஒரு கட்டடத்தின் அருகே இணைத்து கட்டப்படும் புதிய கட்டடங்களையும் வரி விதிப்புக்குள் கொண்டு வர முடியும் என உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 

ஒரே மாதிரியான வரி நிர்ணயம் தேவை

ஏ, பி, சி, டி என மண்டலங்களாகப் பிரித்து வரி நிர்ணயம் செய்யும் நடைமுறையினால், அலுவலர்களின் துணையுடன் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில், குடிசைப் பகுதி நீங்கலாக பிற பகுதிகள் முழுவதும் ஒரே மாதிரியான வரி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் அரசுக்கான வரி வருவாய்  அதிகரிப்பதோடு, அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் லாபம் ஈட்டுவதைத் தடுக்க முடியும்.

வணிக நிறுவனங்களின் பரப்பிலும்...

உள்ளாட்சி அமைப்புகள் மூலம், அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை சிறப்பு கட்டடங்கள் என வகைப்படுத்தப்பட்டு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த வணிக நிறுவன கட்டடங்களின் பரப்பளவை குறைத்தும், மண்டலங்களை மாற்றியும் குறைவான வரி செலுத்துவதற்கு உள்ளாட்சி அலுவலகங்களிலுள்ள வருவாய்ப் பிரிவு அலுவலர்களே வழி அமைத்துக் கொடுக்கின்றனர்.

வணிக நிறுவனங்களைப் பொருத்தவரை பெரும்பாலானவற்றுக்கு தரைத் தள பரப்பினை  (பிளிந்த் ஏரியா) முழுமையாக கணக்கீடு செய்யாமல், உட்புற சுவர்களுக்கு இடையே மட்டும் அளவீடு செய்தும், சமையல் கூடம், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளைத் தவிர்த்தும் வரி நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினர் நிறுவனங்களைச் சுற்றியுள்ள கடைகளுக்கும், பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களைச் சுற்றியுள்ள கடைகளுக்கும் வரி நிர்ணயம் செய்வதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.  குறிப்பாக, தரைத் தளத்திற்கு மட்டுமே அனுமதி பெற்றுக் கொண்டு, மேல் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தரைத் தளத்திற்கான சொத்து வரிகூட முழுமையாக செலுத்தப்படுவதில்லை.

குறைந்த பரப்பளவில் நெருக்கடிக்கு இடையே வாழும் ஒரு தரப்பினர் சொத்து வரியை முறையாக செலுத்தி வரும் நிலையில், அதிக பரப்பளவில் சகல வசதிகளுடன் வாழ்வோரும், வணிக நிறுவனங்களும் அலுவலர்களின் துணையுடன் வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இது நேர்மையாக வரி செலுத்துவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com