பண்பாட்டின் சின்னம் மொழி

மொழி உலகெங்கும் உள்ள மனிதர்கள் தங்களுக்குள்ளும், பிற நாடு, மாநிலம், பகுதிகளில் வாழ்ந்து வருபவர்களோடும் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாக விளங்குகிறது.
பண்பாட்டின் சின்னம் மொழி

மொழி உலகெங்கும் உள்ள மனிதர்கள் தங்களுக்குள்ளும், பிற நாடு, மாநிலம், பகுதிகளில் வாழ்ந்து வருபவர்களோடும் தொடர்புகொள்ளக்கூடிய சாதனமாக விளங்குகிறது. உலகெங்கும் பல ஆயிரக்கணக்கிலான மொழிகள் பேசப்பட்டாலும் ஏதோ ஒரு மொழி பிறரோடு தொடர்புகொள்ள வசதியாக வழங்கி வருகிறது. இன்று வழக்கில் உள்ள பல்வேறு மொழிகளுள் நம் தமிழ்மொழி தனித்ததொரு பண்பாட்டு மொழியாகும்.

பொதுவாக நாகரிகம், பண்பாடு என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருவனபோலத் தோன்றினாலும், இரண்டு சொல்லிற்கும் வேறுபாடு உண்டு. நாகரிகம் என்பது புறத்தோற்றம், புறத்தோற்றத்தை வைத்து ஒரு பொருளை உயர்ந்தது என்று கூற இயலாது. பண்பாடு என்பது அகத்தோற்றம் ஆகும். அந்த வகையில் அகத்துள் அதாவது மொழியின் உள்ளே பல ஆயிரக்கணக்கான பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய மொழி தமிழ் ஆகும்.

உயர்தனிச் செம்மொழி என்பதற்கேற்ப இலக்கண - இலக்கிய வளமைகள் நிறைந்த நம் தமிழ், தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டக்கூடிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும், மணிமேகலை, சிலம்பு போன்ற ஐம்பெரும் காப்பியங்களையும், பல ஆயிரக்கணக்கான சிற்றிலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டு திகழும் பெருமை உடையது.

தமிழ்ப் பண்பாட்டின் அங்கமாகத் திகழ்பவை அறங்கள் ஆகும். அறம் 32 வகையினதாக சேந்தன் திவாகரம் குறிப்பிடுகின்றது. அவற்றுள் ஒன்றுதான் நாம் பார்க்கப்போகும் அறச்செயல் ஆகும். நம் தமிழ் மக்கள் மனிதர்கள் நலமோடும், வளமோடும் வாழ வழிகண்டவர்கள் ஆவர். அதோடு நில்லாமல் அஃறிணை உயிர்களையும் போற்றியவர்கள் என்பதைத் தமிழ் மொழி அழகாக எடுத்தியம்புகின்றது. கால்நடைச் செல்வங்களான மாடுகள் தங்களுக்கு தினவெடுக்கும்போது, தன்னுடைய தினவைப் போக்கிக்கொள்வதற்கு வசதியாக, பழந்தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களுக்கு அருகில் ஆதீண்டு குற்றி என்ற பெயரில் கல் நட்டு வைத்தனர். அச்செயலை தமிழ் மொழியில் அழகாகப் பதிவும் செய்து சென்றுள்ளனர்.

ஆதீண்டு குற்றி

தொல் பழங்காலத்தில் ஆடுகளும், மாடுகளும்தான் பெருஞ்செல்வமாகத் திகழ்ந்தது. இவற்றை மக்கள் விரும்பி வளர்த்து வந்தனர். முல்லை நிலத்தில் ஆடும், மாடும் மந்தைகளாக வளர்க்கப்பெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களால் மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தாலும், கொங்கு நாட்டில் காங்கேயம் பகுதியில் காணப்படும் மாடுகள் சிறந்த உயர்ந்த இனமாகக் கருதப்படுகின்றன. இத்தகு காங்கேய இன மாடுகள் சங்க காலத்திலேயே இருந்ததையும், கொங்கர்கள் அவற்றை வளர்த்து வந்ததையும் சங்க நூலான பதிற்றுப்பத்து

           கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்

          ஆகெழு கொங்கர் நா(டு) அகப் படுத்த (22:14–15)

           சேண்பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர்

          ஆபரந் தன்ன செல்வின்பல் (77:10–11)

என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆடுகளைப் புல்லினம் என்றும், எருமைகளைக் கோட்டினம் என்றும், பசுக்களைக் கோவினம், நல்லினம் என்றும் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. குடப்பால் கறக்கும் மாடுகளைக் “குடஞ்சுட்டு நல்லினம்” என்கிறது சங்க நூல்கள். மாடுகள் மேய்வதற்காகப் புல் நிலங்களை விட்டிருந்தனர். இதனை மணிமேகலை, “விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து” என்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழர்களின் வாழ்வியல் மரபாகப் போற்றப் பெற்றது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்பது வள்ளுவர் வாக்கு. அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் போற்றி வாழ்ந்தனர் நம் முன்னோர். அதனாலேயே முல்லைக்குத் தேரீந்த பாரியையும், மயிலுக்குப் போர்வை தந்த பேகனையும், கடையெழு வள்ளல்கள் வரிசையில் வைத்துப் போற்றி வருகின்றோம். செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்றும், ஏனைய உயிர்களான பறவைகள், விலங்குகளையும் போற்றி அவற்றின் உணர்வுகளையும் மதித்த பாங்கினைத் தமிழ் இலக்கியங்களில் காண முடிகின்றது. அஃறிணை உயிர்களின் உணர்வினை மதித்து அவற்றிற்காக நாட்டப்பட்டுள்ள தூண் போன்ற கல்லிற்கு சங்க இலக்கியத்தில் ஆதீண்டு குற்றி என்று பெயர் வழங்கப்பெற்றது.

மனிதர்கள் தங்கள் உடலில் அரிப்பு ஏற்படும்பொழுது கையால் சொறிந்து கொள்கின்றார்கள். ஆடு, மாடுகளுக்குத் தினவு ஏற்படும்போது அவை நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தம் தினவைப் போக்கிக்கொள்ள முற்படும். மாடுகள் அடிக்கடி உராய்வதால் நல்ல நிலையில் உள்ள மரங்கள் அழிந்துபோகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்கும் விதமாகவும், அவ்வுயிர்களின் உணர்வினை மதிக்கும் விதமாகவும் தொல் பழங்காலந்தொட்டு ஆடு மாடுகள் தங்கள் தினவைப் போக்க பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும், மரக்கட்டைகளையும் நட்டுள்ளனர். இவை பெரும்பாலும் நீர்நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர்நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு தினவு ஏற்படுகின்றது. தினவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன. இதற்காக நடப்படும் கற்களை ஆதீண்டு குற்றி, மாதீண்டு குற்றி என்று இலக்கியங்கள் கூறுவதைப் பார்ப்போம்.

சேந்தன் திவாகரத்தில் தத்துவம், அலங்காரம், தேவர் போன்ற பல்பொருள் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி கூறும்பொழுது முப்பத்திரண்டு அறத்தின் பெயர்கள் சுட்டப்படுகின்றன. அவை,

           ஆதுலர்சாலை, ஓதுவார்க்குணவு, அறு

          சமயத்தோர்க்குணவு, பசுவுக்குவாயுறை,

          சிறைச்சோறு, தின்பண்டம், மகச்சோறு,

          மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால்,

          அறவைப் பிணஞ்சுடுதல், அறவைத்தூரியம்,

          வண்ணார், நாவிதர், வதுவை, பூணூல், நோய்,

          மருந்து, கண்ணாடி, காதோலை, கண்மருந்து,

          தலைக்கெண்ணெய், பெண்போகம், சுண்ணம், பிறர்துயர்

          காத்தல், தண்ணீர்ப்பந்தல், மடம், தடாகம்,

          கா, ஆவுரிஞ்சுநடுதறி, யேறு

          விடுத்தல், விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல்,

          இச்செயன் முப்பத்திரண்டறமென்ப

என்கிறது.

அவற்றுள் ஆவுரிஞ்சுநடுதறி அமைப்பது அறச்செயலாகப் போற்றப்படுகின்றது. தமிழ் – தமிழ் அகரமுதலி ஆதீண்டு குற்றிக்குப் பொருள் ஆவுரிஞ்சி, ஆவுரிஞ்சு தறி எனக்கொள்கின்றது. தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பெருஞ்சொல் அகராதித் தொகுதி இரண்டில் பசுக்கள் உராய்ந்து தம் அரிப்பை நீக்குவதற்கேற்ப நடப்படும் உயரமான கல்தூண் ஆதீண்டு குற்றி என்று விளக்கமளித்துள்ளது.

            சீவகசிந்தாமணியின்,

           பூத்த கோங்கு போற்பொன் சுமந்துளா

          ராய்த்தியர் நலக்கா செறூணனான்

          கோத்த நித்திலக் கோதை மார்பினான்

எனும் செய்யுளுக்கு உ.வே.சா. எழுதியுள்ள விசேடக்குறிப்பில், கோங்க மலர்கள் பொன்னிறமுடையவை, ஆதீண்டு குற்றி தினவைப் போக்கிக்கொள்ளுதற் பொருட்டுப் பசுக்கள் உரசிக் கொள்ளுதற்கு நாட்டப்பட்டுள்ள கட்டை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆய்த்தியர் நலஞ்சேர்தற்கு ஆதீண்டு குற்றியை ஒப்பானாகிய நந்தகோனுடைய அந்நிலையிலே வாய்த்த நிமித்திகன் “நிரைக்குள்ளே புகுந்து காரி அழித்ததாகலால், இன்று நீர் நிரையைக் காவல் இகழாதொழிமினெனச்” சொன்னான். அதுகேட்டுப் புதுமணவாளப் பிள்ளைகளும் “மொய்ம்புடனே காத்தற்கு ஏகினார்” என்று நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.

            பத்துப்பாட்டு நூலுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில்,

           சதுக்கமுந் சந்தியும் புதுப்பூங் கடம்பும்

          மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்

          மாண் தலைக்கொடியொடு மண்ணி யமைவர (225–227)

இதன் பொருள் கூறுமிடத்து கந்துடை நிலையினும் – ஆதீண்டு குற்றியையுடைய இடத்திலும் என்கின்றது. இதனையே தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) கந்து எனும் சொல் ஆதீண்டு குற்றியைக் குறிப்பதாகச் சொல்கிறது. தொல்காப்பியர் காலத்திலேயே இவ்வகை ஆதீண்டு குற்றிகள் வழக்கில் இருந்துள்ளதை உரையாசிரியர்களின் உரைக் குறிப்பால் அறிய முடிகின்றது. ஒன்றொழி பொதுச்சொல் பற்றிக் கூறும் தொல்காப்பியம் 49ஆம் (சொல்) சூத்திரத்திற்குப் பொருள்கூறும் சேனாவரையர் பல பொருட்குப் பொதுவாகிய சொல்லைப் பற்றிக் கூறும்பொழுது ஆதீண்டு குற்றியினை மேற்கோள் காட்டுகின்றார். ஆதீண்டு குற்றி பசுக்கள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்தாலும், பிற விலங்குகளும் உராய்ந்துகொள்ளப் பயன்பட்டது என்கிறார். கல்லாடனார் தம் தொல்காப்பிய, சொல் விருத்தி உரையில் தலைமை பற்றியும் சிறுபான்மை பற்றியும் வரும் சொல்லுக்கு இதனை மேற்கோள் காட்டுகின்றார்.

            சேனாவரையரின் உரைக்கு வலு சேர்ப்பதுபோல் ஆதீண்டு குற்றியில் பிற விலங்குகளும் உரசிக்கொண்டன என்பதைச் சங்க இலக்கியக் குறிப்புகளால் அறிய முடிகின்றது.

           குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்

          கல்லா மந்தி கடுவனோடு உகளும் (ஐங்.நூறு. 277:1–2)

விலங்குகள் உராய்வதற்கென்றே நடப்பட்டிருந்த கல் மாதீண்டு துறுகல் என்ற பெயரில் அழைக்கப்பட்டது தெரிய வருகின்றது.

ஆவுரிஞ்சு என்னும் சொல்லாட்சி திருக்குற்றாலத் தலபுராணம், திருக்குற்றாலத் தலமகிமைச் சருக்கத்தில்,

           ஆதுலர் சாலை சோலை யாவினவா யுறை கண்ணாடி

          ஓதுவார்க் குணவு தண்ணீ ருறுபந்தர் மடந்த டாகங்

          கோதிலா வுரிஞ்சி சுண்ணங் கொலையுயிர் விடுத்த லேறு

          மாதலைக் கெண்ணெய் கண்ணோய் மருந்துநன் மகப்பால்சோறு (37)

என்கிறது. இதன் பொருளாக அந்நூலின் அரும்பத உரையில் ஆவுரிஞ்சி – பசுக்கள் உரோஞ்சுகிற தறி எனக் குறிப்பிட்டுள்ளது. இதே நூலினுள் மந்தைக்கல் என்ற பொருளிலும் சுட்டப்படுகின்றது.

இலக்கியங்களில் மட்டுமல்ல, கல்வெட்டுகளிலும் ஆதீண்டு குற்றி அமைக்கப்பட்டிருந்ததற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு களின் காலம் கி.பி. 13 அல்லது 14ஆம் நூற்றாண்டு ஆகும். இதில் தன்மத்தறி என்றே ஆதீண்டு குற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மத்திற்காக நடப்பட்டுள்ள கல் என்பதாகும். இதனை நிறுவியவர்களின் பெயர்களும் கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரம் வட்டம், காட்டுநாயக்கன்பட்டி எனும் ஊரில் உள்ள கல்வெட்டு

  1. ஸ்வஸ்திஸ்ரீ புவன
  2. உடையான்னா
  3. ன ஆவணதியா
  4. கி பே(ரை)யன் தன்ம
  5. தறி

இதே வட்டம் ஒருமாக்குளம் என்னும் ஊரில்,

  1. கண்ணன்
  2. தேவனான க
  3. காஞ்சிபுரங்
  4. கொண்ட
  5. பாண்டிய
  6. தேவன் த
  7. ன்மத் தறி

என்று வெட்டப்பட்டுள்ளது.

மேலும், கோவில்பட்டி வட்டம், கடம்பூர் அக்கிரகாரம் மற்றும் கடம்பூர் பறம்புக்கோட்டை பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள்,

  1. க(ண்ண)ன்
  2. மாதனா
  3. ன வத்
  4. தராயன்
  5. தன்ம்ம
  6. தறி

எனவும்,

  1. ஸ்வஸ்திஸ்ரீ நா
  2. தன் சங்(க)ன்னா
  3. ந களத்திருக்
  4. கைப் பல்லவ
  5. தரையன் தன்
  6. மத் தறி

என்றும் சுட்டுகின்றன. காஞ்சிபுரங் கொண்ட பாண்டியன் என்பது முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியனைக் (கி.பி. 1250–84) குறிக்கும்.

பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டி எனும் ஊரில் கி.பி. 1789 ஆம் ஆண்டில் நடப்பட்டுள்ள கல்வெட்டு கூறும் செய்தி, மாடுரசுக்கல் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதனை அமைத்தவர்கள் அவ்வூரில் வாழ்ந்த நாச்சிமுத்துக் கவுண்டர் – குப்பம்மாள் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஆதீண்டு குற்றி எனக் குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் மாடுரசுக்கல் என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. மாடு மேய்ப்பவர்கள் ஓரிரு முறை இக்கல்லில் மாட்டின் முதுகை உரசி பழக்கிவிட்டால்போதும், அதன்பிறகு மாடுகள் தங்களுக்குத் தினவெடுக்கும்பொழுது பழக்கம் காரணமாக தானாகவே இக்கல்லில் உரசிக்கொள்ளும். சென்னை, தருமபுரி, சேலம், தஞ்சாவூர் மாவட்டங்களில் இதுபோன்ற ஆதீண்டு குற்றிகள் இருந்தன. கோவை மாவட்டத்தில் இக்கல்லினை ஆ ஓஞ்சிக்கல்லு, ஆ உருஞ்சிக்கல்லு என்று அழைக்கின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மாடுகள், யானைகள் போன்ற விலங்கினங்களுக்குத் தாகம் தீர்க்க தண்ணீர் குட்டைகள் ஏற்படுத்தியிருந்தமை போன்று, மாடுகள் தங்கள் உடல் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கல் நட்டுள்ள நம் முன்னோர்களின் மாண்பு போற்றுதலுக்கு உரியதன்றோ.

ஒரு மொழியின் சிறப்பு என்பது பல்லுயிர் போற்றுவதேயாகும். அவ்வாறு அனைத்து உயிர்களையும் பண்பாட்டு நிலையில் நின்று போற்றிய, தமிழ் பண்பாட்டின் சின்னமாகத் திகழ்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com