விருந்தும் தமிழரும்

மாலையில் இல்ல வாயிலில் நின்று அறிவிப்பு செய்து கதவடைக்கும் அரிய செயல் தமிழர் பண்பாட்டின் உச்சத்தையும் அவர்களின் விருந்தோம்பல் வாழ்க்கையின் தன்மையையும் விளக்குகிறது. 
விருந்தும் தமிழரும்

பழந்தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் பண்பு தலைச்சிறந்தப் பண்பாக விளங்கியது. ஔவையார் இதைத்தான் ‘மருந்தே ஆயினும் விருந்தோடுண்’ என்று விருந்தின் மேன்மையை உரக்கச் சொல்லியிருப்பார். பழந்தமிழரின் அகப்புற நூல்களும் விருந்தோம்பல் குறித்து அதிகம் பேசுகின்றன. இலக்கண நூலான தொல்காப்பியமும் ‘விருந்தே தானும் புகுவது புனைந்த யாப்பின் மேற்றே’ என்கிறது (தொல் 231). விருந்தினர் என்பவர்கள் நாம் இன்று கூறுவதுபோல் நமது உறவினர்களையல்ல, விருந்தினர் என்பவர் முன்பின் அறிமுகமில்லாதவர்கள். விருந்தோம்பல் என்பது இல்லம் தேடிவரும் புதியவர்களை இனிய முகத்துடன் வரவேற்று இன்ப மொழிக்கூறி உபசரித்து உணவளிக்கும் உயரியப்பண்பாடாகும். இந்நிகழ்வை,

அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின்

மெல்லியல் குறுமகள் (நற் 142: 9-11) கூறுகிறது.

இதுபோன்றே சிறு பிராயத்து விளையாட்டிலும்கூட விருந்தோம்பல் பண்பு இழையோடியதையும் அறிய முடிகிறது. அதாவது வண்டல் இழைத்து விளையாடுகிறாள் தலைவி. அவளிடம் தலைவன், நானும் உனது இல்லில் தங்கி விருந்துண்டு என் வழி நடை வருத்தத்தைப் போக்கிக்கொள்ளவா? என்கிறான்

தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்

சிற்றில் இழைத்தும் ,சிறு சோறு குவை இயும்,

வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது

இருந்தனமாக,எய்த வந்து,

தடமென் பணைத்தோள் மட நல்லீரே!

எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்

மெல் இலை பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்

கல்லென் சிறு குடித் தங்கின் மற்று எவனோ ? (அகம்-110-6 13)

இப்படி விளையாட்டிலும் கலந்திருந்த விருந்தோம்பல் சிறப்பை அறிந்திடும் வேளையில், விழா நடைபெறும் நாள்களில் பெரிய பானைகளில் உணவு தயாரிக்கப்பட்டு உறவினர்களுக்காகவும் புதிதாக விழாவைப் பார்க்கவரும் விருந்தினர்களுக்காகவும் தலைவன், தலைவி இருவரும் காத்திருந்திருக்கின்றனர்.

அப்பொழுது பைநிணம் கலந்த நெய்ச் சோற்றை விருந்தாகத் தந்திருக்கின்றனர். அவ்வுணவை அளித்தபின் எஞ்சிய உணவையே தலைவி விரும்பி உண்டிருக்கிறாள். இதோடு உணவு வேண்டி வரும் விருந்தினர்கள் எந்தவிதத் தடையுமில்லாமல் சென்று உணவருந்திவர வாயில் கதவைத் திறந்தே வைத்திருந்த வளமனைகள் இருந்துள்ளன. (குறிஞ்சி 201-208)

‘சாறு அயர்ந்தன்ன மிடா அச்சொன்றி

வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப

மலரத் திறந்த வாயில் பலருணப்

பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்

வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு

விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை

நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு

அறம் புணை ஆகத் தேற்றிப் பிறங்கு மலை’

இப்படி  பழந்தமிழர் வாழ்வில் விருந்தோம்பல் ஒரு அங்கமாகக் கலந்திருந்ததை பல்வேறு நிலைககளில் அறியும் சூழலில், தமிழரின் பண்பாட்டை மேலும் உயர்த்திப்பிடிக்கும் ஒரு அழகோவியக் காட்சியை குறுந்தொகை (118) பாடல் அறிமுகப்படுத்துகின்றது. அதிலும் முழுக்க முழுக்க கடல்சார் தொழில் நடைபெற்ற நெய்தல் திணையில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பைத் தருகின்றது.

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய

நன்னென வந்த நார் இல் மாலை

பலர்புகு வாயில் அடைப் பக் கடவுநர்,

வருவீர் உளரோ? எனவும்

வாரார் தோழி நம் காதலரே ( குறு -118)

தலைவி தோழியிடம் சொல்வதாகவே அமைகிறது இப்பாடல். பறவைகளும் விலங்குகளும் தனிமைத் துயருடன் தங்கும்படி  நள் என்னும் ஓசையுடன் அன்பில்லாத மாலைக் காலம் வந்தது. அம்மாலைக் காலத்தில், விருந்தினர் பலரும் புகுகின்ற வீட்டின் வாயிலை அடைக்கக் கருதி, வினாவுகின்றவர் வீட்டினில் புகுவதற்கு உரியீராய் யாரும் உள்ளீரா என்கின்றனர். அப்படி அழைக்கும் மாலைச் சூழலிலும் நம்பால் காதலையுடையத் தலைவன் வரவில்லை என்கிறாள். 

தன் காதல் வருத்ததைப் போக்குவதற்கு மாலைப்பொழுதாகியும் தலைவன் வரவில்லை என்ற கருத்துக்குள், மாலையில் வீடடைக்கும் இல்லங்களில் வாயிலை அடைப்பதற்கு முன்பாக விருந்துன்பதற்காக வெளியில் யாரேனும் இருக்கிறார்களா என்று அறிவித்துப் பார்த்து விட்டு வாயிலை அடைக்கும் வளமனைகள் இருந்தன என்பதை அறிய முடிகிறது. இன்று சொந்த உறவுகளையே விருந்தென்று அழைக்கும் சூழலும் அவர்களையும் மன வேறுபாடு காரணமாக விலகும் போக்கு நிறைந்து, பெற்ற தாய் தந்தையரையே உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் தவிக்கவிடும் பொதுச் சமூகச் சூழலில் வீட்டில் தலைவனுக்காகக் காத்திருந்த தலைவியின் தேடல் உணர்வின் வாயிலாக அன்றைய சமூகத்தில் இல்ல வாயிலில் நின்று விருந்திற்காக அறிவிப்பு செய்து கதவடைக்கும் அரிய செயல் தமிழர் பண்பாட்டின் உச்சத்தை விளக்குவதோடு அவர்களின் விருந்தோம்பல் வாழ்க்கையின் பொதுத்தன்மையை அறிந்துகொள்ளவும் வழிசெய்கிறது. 

[கட்டுரையாளர் - உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி(த), தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com