தஞ்சையும் சித்திரையும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தொடக்க காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் பெரிய கோயில் திருத்தேரோட்டம் (கோப்புப் படம்)
தஞ்சாவூர் பெரிய கோயில் திருத்தேரோட்டம் (கோப்புப் படம்)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் தொடக்க காலம் முதல் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. இதுபற்றிய குறிப்புகள் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.  

இக்கோயிலில் உள்ள ராஜராஜன் திருவாயில் என்ற இரண்டாவது ராஜகோபுரத்து வாசலின் இருபுறமும் ராஜராஜனின் 4 கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன. இவை இந்தக் கோயிலின் திருவிழாக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

இவற்றில் முதல் கல்வெட்டில் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் ஆடியருளுந் திருமஞ்சன நீரிலும், தட்சிணமேருவிடங்கர் ஆடியருளுந்திருமஞ்சன நீரிலும் இடும் இலாமிச்சம் (வேர்), பெருஞ் செண்பகமொட்டு, ஏலவரிசி ஆகியவற்றுக்காக வைத்த முதலீடான காசு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கல்வெட்டில் திருவிழாக் குறித்துப் பறையறைவு செய்வதற்காக கடியர்க்கு இட்ட நிவந்தம் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் கல்வெட்டு இக்கோயிலில் ஆண்டுதோறும் நிகழ்ந்த 34 நாள்களுக்குரிய திருவிழாக்கள் பற்றியும், அவ்விழாக்களுக்குச் செய்ய வேண்டியவை குறித்தும் விரிவாகக் கூறுகிறது.

நான்காம் கல்வெட்டு ஈசனார் திருமேனி வீதி உலா செல்லும் திருநாள்களாகத் திருச்சதய நாள் பன்னிரண்டும், கார்த்திகைத் திருநாள் ஒன்றும், மற்றொரு திருநாள் ஒன்றும், கொடியேற்ற வலஞ்செய்யும் நாள் எழுந்தருளும் திருவிழா ஒன்றும், ஆட்டைத் திருவிழா எழுந்தருளும் நாள் ஒன்பதும் என திருவிழா எழுந்தருளும் நாள் 24 எனக் கூறுகிறது.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்


இந்தக் கோயிலில் முன்பு சித்திரைப் பெருவிழா 20 நாள்கள் நடைபெறும் பெருந்திருவிழாவாக இருந்து வந்த நிலையில், காலப்போக்கில் 18 நாள்களாகச் சுருங்கிவிட்டது. என்றாலும், இவ்விழா வெகு விமரிசையாகவே கொண்டாடப்பட்டன.

காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் நின்றுபோன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்க மன்னர்கள், அவர்களைத் தொடர்ந்து மராத்திய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. அப்போது, சித்திரைப் பெருவிழா மிகப் பிரம்மாண்டமான முறையில் 18 நாள்கள் நடத்தப்பட்டன. இந்த விழாவின் 15 திருநாளன்று தேரோட்டமும் நடைபெற்றுள்ளது.  

இந்தத் தேரோட்டம் பற்றிய குறிப்புகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. என்றாலும், மராத்தியர் ஆட்சி கால மோடி ஆவணக் குறிப்புகள் சில மட்டுமே கிடைக்கின்றன. இதன் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

பெருவுடையார் கோயிலுக்கு மன்னர் இரண்டாம் சரபோஜி 5 பெரிய தேர்களை உருவாக்கித் தந்தது மட்டுமல்லாமல், 4 ராஜ வீதிகளில் தேர் முட்டிகளையும் அமைத்தார்.

தஞ்சாவூரில் கி.பி. 1776 ஆம் ஆண்டில் 20,200 பேர் இழுத்து, தேர் உலா வந்தததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி. 1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேரை இழுப்பதற்காகப் பல வட்டங்களிலிருந்து (தாலுகா) 27,394 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.  

தஞ்சை கோயில்
தஞ்சை கோயில்


இதில், திருவையாறு வட்டத்தில் 1,900 பேரும், பாபநாசம் வட்டத்தில் 2,800 பேரும்), கும்பகோணம் வட்டத்தில் 3,494 பேரும், மயிலாடுதுறை (மாயவரம்) வட்டத்தில் 3,484 பேரும், திருவாரூர் வட்டத்தில் 2,920 பேரும், மன்னார்குடி வட்டத்தில் 4,200 பேரும், கீழ்வேளூர் வட்டத்தில் 4,500 பேரும், நன்னிலம் வட்டத்தில் 3,200 பேரும் எனத் தேருக்காக 26,494 பேரும், வாகனங்களைத் தூக்குவதற்காகத் திருவையாறிலிருந்து 900 பேரும் என மொத்தம் 27,394 பேரும் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், இவர்களுக்கு ஊதியமாக கொடுத்து பயன்படுத்தப்பட்டதையும் மோடி ஆவணக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  

1801 ஆம் ஆண்டில் தேரின் சக்கரங்களைப் புதுப்பிப்பதற்காக 500 சக்கரங்கள் (அக்கால ரூபாய் மதிப்பு முறை) செலவிடப்பட்டதாகவும், 1801, 1811 ஆம் ஆண்டுகளில் குறிப்புடைய ஆவணங்கள், அவ்வாண்டுகளில் தேர்த் திருவிழா நிகழ்த்த 30,150 சக்கரங்கள் செலவிடப்பட்டதாகவும் மோடி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தச் சான்றுகள் மூலம் தஞ்சாவூரில் சித்திரைத் திருவிழாவும், திருத்தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்று வந்தது தெரிய வருகிறது.

காலப்போக்கில் இந்தத் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராத்தியர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்று போனது. இதனால், இடைப்பட்ட காலத்தில் சித்திரைத் திருவிழா களையிழந்து காணப்பட்டது.  

இந்நிலையில், இந்தத் திருக்கோயிலின் திருத்தேர் இல்லாத குறையைப் போக்குவதற்காகத் தமிழக அரசுப் புதிய தேரை உருவாக்க 2013 ஆம் ஆண்டில் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு திருத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இத்தேரை உருவாக்குவதற்குத் இந்து சமய அறநிலையத் துறையின் தேர் திருப்பணி நிதியிலிருந்து ரூ. 17 லட்சமும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிதியிலிருந்து ரூ. 20 லட்சமும் என மொத்தம் ரூ. 37 லட்சம் செலவிடப்பட்டது. 

ராஜராஜன் திருவாயில்
ராஜராஜன் திருவாயில்

தஞ்சாவூரில் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2015 ஆண்டு ஏப். 29-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதன் மூலம், இவ்விழாவும் புத்துயிர் பெற்றது. தொடர்ந்து ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் 15 ஆம் நாளன்று திருத்தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேரை வடம் பிடிப்பதற்காக லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இதனால், தஞ்சாவூரில் இப்போது தேரோட்ட விழா பெருந்திருவிழாவாக மாறிவிட்டது.

கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் கரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.13) நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com