மனிதனைப் புனிதனாக்கும் பெருநாள்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 24

‘பக்ரீத்’ எனும் ‘ஈதுல் அள்கா’ தியாகத் திருநாளாகவும் ‘ஹஜ்’ பெருநாளாகவும் அமைந்துள்ளது. முஸ்லிம் பெருமக்கள், இந்நாளை தியாகம், சமத்துவம், சகோதரத்துவ உணர்வூட்டும் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.
மனிதனைப் புனிதனாக்கும் பெருநாள்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 24

‘பக்ரீத்’ எனும் ‘ஈதுல் அள்கா’ தியாகத் திருநாளாகவும் ‘ஹஜ்’ பெருநாளாகவும் அமைந்துள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினரான முஸ்லிம் பெருமக்கள், இந்நாளை தியாகம், சமத்துவம், சகோதரத்துவ உணர்வூட்டும் பெருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ‘ஏப்ரஹாம்’ எனப்படும் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒர் இறைத் தத்துவத்தை உலகில் நிலைநாட்டிய மனிதப் புனிதர். “இறைவன் ஒருவனே; இறைவனால் படைக்கபபட்டவைகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும் வணங்குதற்குரியன அல்ல. அவற்றையெல்லாம் படைத்த மூல முதலாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்” என்ற கொள்கையை உலகில் நிலைநாட்ட ஓயாது உழைத்த உத்தமர்.

முதுமையின் எல்லைக்கோட்டை எட்டியபோது இறையருளால் பெற்ற தம் புதல்வனை இறைவனுக்குப் பலியிடுவதுபோல் கண்ட தொடர் கனவை இறை விருப்பம் எனக் கொண்டு அதைத் தம் மகனிடம் கூறி, அவர் சம்மதத்தோடு, மைந்தரின் இன்னுயிரை இறைவனுக்குக் காணிக்கையாக்க முனைந்த தியாகச் செயலை நினைவு கூறும் தியாகத் திருநாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமை இந்நாளில்தான் ஹாஜிகளால் நிறைவேற்றப்படுகிறது. ‘ஹஜ்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘சந்திக்க நாடுவது’ என்பது பொருளாகும். வசதி படைத்தவர்கட்கு மட்டுமே ஹஜ் கட்டாயக் கடமையாகும். ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜி, மக்காவிலுள்ள ‘கஃபா’ இறையில்லத்தை நாடிச் செல்கிறார். கஃபா இறையில்லமே தவிர இறைவனல்ல. சதுரவடிவான இக் கட்டடத்தை வலம் வரலாமே தவிர, வணங்கக்கூடாது. இறையடியார்கள் ஆண்டுக்கொருமுறை ஹஜ் செய்ய வேண்டும் என இப்ராஹீம் (அலை) ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு விடுத்த அழைப்பை ஏற்று இன்றும் முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி வருகின்றனர். ‘கஃபா’ என்ற சொல்லுக்கு வட்ட வடிவானது என்று பொருள். சதுரமானது என்ற பொருளும் உண்டு. வட்ட வடிவான நிலப்பரப்பில் சதுர வடிவாக அமைந்த கட்டடமே ‘கஃபா’; 40 அடி நீளமும், 50 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட வெற்றுக் கட்டடமாகும். இதனுள் சென்று இறைவணக்கம் புரியக்கூடாது என்பது விதியாகும். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை ‘கஃபா’ இருக்கும் திக்கு நோக்கியே தொழுகின்றனர். கஃபாவில் தொழுகின்றபோது திசைக்கட்டுப்பாடு ஏதுமின்றி, எத்திக்கில் இருந்தும் தொழலாம்.

‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றச் செல்லும் ஹாஜிகள் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கப்பால், தங்கள் வெற்றுடம்பில் தைக்கப்படாத ஒரு துண்டை இடுப்பில் உடுத்திக் கொண்டு மற்றொரு துண்டை போர்த்திக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற முற்படுகிறார்கள். இது ‘எஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. இறந்தவரின் சடலத்தின் மீது இத்தகு துணியே போர்த்தப்படுகிறது. இறைவனை அடைய அனைத்தையும் துறக்கத் துணியும் செயலையே இது நினைவூட்டுவதாயுள்ளது. ஹஜ்ஜின் போது கஃபா, இறையில்லத்தில் இறைவணக்கத்திற்காகக் குழுமியுள்ள இலட்சக்கணக்கான ஹாஜிகள் தங்கள் நாடு, மொழி, இன, நிற, கலாச்சார வேறுபாடுகளையெல்லாம் மறந்தவர்களாக, நாம் அனைவரும் ஆதாம் (அலை) வழிவந்த சகோதரர்களே; அனைவரும் சமமானவர்களே என்ற உணர்வோடு சமத்துவத்தை - சகோதரத்துவத்தைச் செயல் வடிவில் நிலை நாட்டுகின்றனர்.

மீண்டும் அதே எஹ்ராம் உடையில் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் நண்பகலுக்குப் பின் மக்காவுக்கு அருகிலுள்ள ‘அரஃபா’ பெரு வெளியில் குழுமுகின்றனர். இங்குதான் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகிறது. இறுதித் தீர்ப்பு நாளின்போது ‘மஹ்ஷர்’ மைதானத்தில் மனித குலம் மீண்டும் உயிர்த்து எழுப்பப்படுவதை நினைவு கூர்வதாக இந்நிகழ்வு அமைகிறது.

அது மட்டுமல்ல, ஹாஜிகள் ஒரு பகல் மட்டும் தங்குவதற்காக அமைக்கப்படும் கூடாரங்கள் அன்று மாலையே அகற்றப்படுகின்றன. இஃது இறைவனால் அளிக்கப்பட்ட மனித வாழ்வு எனும் கூடாரம் எந்நேரமும் இறைவனால் பிரிக்கப்படலாம். தங்கள் உடலிலிருந்து உயிர் பிரிக்கப்படலாம் என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துவதாயுள்ளது. மறுநாள் மினா எனுமிடத்தில் சைத்தானைக் கல்லால் எறியும் நிகழ்வு நிறைவேற்றப்படுகிறது. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் இறைவிருப்பத்தை நிறைவேற்ற முனைந்த இப்ராஹிம் (அலை) அவர்களைத் தடுக்க முயன்ற சைத்தானை அவர் கல்லால் அடித்து விரட்டிய செயலை நினைவுகூரும் வகையில் இச் செயல் ஹாஜிகளால் ஏழு கற்கள் எறிந்து நிறைவேற்றப்படுகிறது. இஃது ஒரு குறியீட்டுச் செயலாகும். சைத்தானிய செயல், புறத்தில் மட்டுமல்லாது அகத்திலும் உண்டாகும் ஏழுவித தீயுணர்வுகளை மனத்திலிருந்து அகற்ற முயலும் முயற்சியின் குறியீடாகவே இச்செயல் அமைந்து உள்ளது.

மினாவில் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ‘குர்பானி’ கொடுப்பதுடன் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகிறது. ஹஜ்ஜின் போது, ஒவ்வொரு ஹாஜியும் தான் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவச் செயல்களை மன்னிக்க இறைவனிடம் மன்றாடுகிறார். இனி, தவறே செய்யாத தவ வாழ்வு மேற்கொள்ள உறுதியேற்கிறார். இதன் மூலம் ஒரு புதுவாழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறார். இதைப் பற்றி பெருமானார் (சல்) அவர்கள்,

“எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து தீய சொல் பேசாமலும், தீய செயல் செய்யாமலும் திரும்புவாரோ அவர் தன் தாயின் வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவமற்றவராகத் திரும்புகிறார்” எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு ஹஜ் பெருநாளும் தியாகத் திருநாளுமான ‘ஈதுல் அள்கா’ மனிதனைப் புனிதனாக்கிப் புதுவாழ்வு தருவதோடு உலகில் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வழிகாட்டும் வாழ்வியல் நிகழ்வாக அமைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com