மறப்பது மனித இயல்பு: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 25

இறைவன் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கடமையைக் கவினுற ஆற்றுவோரும் மறப்பது, மறந்து கடமையில் பிறழ்வது, தவறுவது, தவறிழைப்பது மனித இயல்பு என்பதை முதல் மனிதன் ஆதி நபி மனித குலத்தின் தந்தை ஆதம் நபி
மறப்பது மனித இயல்பு: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 25

இறைவன் கட்டளைக்குக் கட்டுப்பட்டு கடமையைக் கவினுற ஆற்றுவோரும் மறப்பது, மறந்து கடமையில் பிறழ்வது, தவறுவது, தவறிழைப்பது மனித இயல்பு என்பதை முதல் மனிதன் ஆதி நபி மனித குலத்தின் தந்தை ஆதம் நபி வாழ்விலேயே ஆரம்பித்து வைத்தான் அல்லாஹ்.
2-35-ஆவது இறைமறை வசனம் "ஆதமே! நீங்கள் உங்கள் மனைவியுடன் இச்சோலையில் வாழுங்கள். நீங்கள் இருவரும் இங்கு விரும்பும் இடத்தில் விரும்புவதை உண்ணுங்கள். ஆனால், இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் தீங்கிழைத்தவர் ஆவீர்கள்' என்று எச்சரித்ததாக கூறுகிறது.

சொர்க்கத்தில் இருந்த அந்த மரம், ஆதம் நபிக்குச் சோதனை. இறைவன், கட்டுப்பட்டு நடக்க ஏவிய ஆதம் நபியை அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்தான். அந்த ஒரு மரத்தில் மட்டும் எதையும் சாப்பிட வேண்டாம் என்று தடை விதித்தான் என்று விளக்குகிறது தப்ஸீர் அர்ராஜி 451/3.

ஆனால், சாத்தான் அதனை ஆதம் நபிக்குக் கவர்ச்சியாக காட்டினான். அவர்களையும், அவர்களின் மனைவியையும் மனம் மாற்றினான். இதனை 7-20 ஆவது வசனம், அவர்கள் இருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மனத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக சாத்தான், அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து, அவர்களை நோக்கி நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணம் அற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே அன்றி உங்கள் இறைவன் இந்த மரத்தை உங்களுக்குத் தடுக்கவில்லை என்று கூறி, நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன் என்று அவ்விருவரிடமும் சத்தியம் செய்தான் என்று கூறுகிறது.

ஆதம் நபி மறந்து விட்டதாக மாமறை குர் ஆனின் 20-115 ஆவது வசனம், இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், அவர் மறந்து விட்டார். ஆனால், அதற்கு மாறு செய்யும் எண்ணத்தை அவரிடம் நாம் காணவில்லை என்று எடுத்துரைக்கிறது. அல்லாஹ்வின் மீது ஆணையாக கண்டிப்பாக ஆதம் நபி அவர்கள் இறைவனுக்கு மாறு செய்வில்லை. மறதியால் தவறு செய்தார்கள் என்று ஹசன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நூல் - தப்ஸீர் அர்ராஜி 106 / 22.

பின், ஆதம் நபி செய்த தவறுக்கு வருந்தினார்கள். இறைவனுக்கு முன்னிலையில் தான் செய்த பாவத்தைத் தெரிந்து அல்லாஹ்விடம் பிழை பொறுக்க வேண்டினார்கள். அவனிடமே மீண்டு அவனையே நோக்கமாகக் கொண்டு பாவ மன்னிப்பு கேட்டதை 7-23 ஆவது வசனம், எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவோம் என்று கூறுகிறது.

20-12 ஆவது வசனம் அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களை மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினான் என்று செப்புகிறது. ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறும் வாய்ப்பு உடையவர்கள். தவறிழைத்தவர்களில் சிறந்தவர்கள் பாவ மன்னிப்பு கோருபவர்கள் என்று விளக்கம் அளிக்கிறது இப்னு மாஜா 4251.

இன்றைய உலகம் தடுமாறி தடுக்கி விழுந்து, இடுக்கண் இடையூறுகளுக்கு உள்ளாகி அல்லற்பட்டு அவதியுறும் அவலங்கள், ஏமாற்றம், எண்ணற்ற கோமாளித் தனங்கள், கோஷ்டி பூசல்கள், கவர்ச்சிகள், முயற்சிகளை முறியடிக்கும் முட்டுக் கட்டைகள், இட்டுக்கட்டி இழிவுப்படுத்தும் ஈனர்கள் நிறைந்தது. அற்ப ஆசைகளுக்கு ஆளாகி பொற்புடைய வாழ்வு புரையோடாமல் கவனமாக இருக்க வேண்டும். கவனம் பிசகி பிறழின் உடனே பாவ மன்னிப்புக் கேட்டு திருந்தி, இறைவன் பொருந்தும் வாழ்வு வாழ வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com