Enable Javscript for better performance
தமிழுக்கும் அமுதென்று பேர்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  முகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்

  தமிழுக்கும் அமுதென்று பேர்!

  By   |   Published On : 29th April 2022 12:58 PM  |   Last Updated : 29th April 2022 01:33 PM  |  அ+அ அ-  |  

  bharathidasan1

  'தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்' என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’. பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

  தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் பாரதிதாசன். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாகித்ய அகாதெமி விருது’ பெற்ற பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பல.  

  பிறப்பு: பாவேந்தர் பாரதிதாசன், புதுவையில், 1891 - ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி (புதன்) இரவு 10.15 மணிக்கு புதுவையில் வணிகராக இருந்த கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

  கல்வி: பாரதிதாசன், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.

  இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

  பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுபடுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார்.

  1908 ஆண்டில் புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார்.

  ஆசிரியர் பணி: 1909 - கல்வி அதிகாரி உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றார். மிகச்சிறிய வயதிலேயே தமிழ்ப் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார். அப்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்ந்தார். 

  1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டு காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

  இல்லற வாழ்க்கை: பாரதிதாசன், தமிழாசிரியராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920 ஆம் ஆண்டில் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டில் தலைமகள் சரசுவதி பிறந்தார். இவருக்குப் பிறகு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928 ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

  1922 ஆம் ஆண்டு கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதி வந்தார்.

  பாரதியார் சந்திப்பு: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருந்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற, பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

  புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் 'கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன்' என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

  நண்பனின் திருமண நிகழ்வினபோது பாரதியாரை நேரில் சந்தித்த பாரதிதாசன், பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

  தொழில் வாழ்க்கை: பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்து அவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

  அந்த நேரத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954 ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

  1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தார். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தந்தார். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவினார். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தந்தார். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்டது (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.

  தந்தை மறைவு: 23.1.1916 ஆம் ஆண்டு கனகசபை முதலியார் இயற்கை எய்தினார்.

  நாளிதழ் ஆசிரியர் பணி: 1930 டிசம்பர் 10ல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.

  படைப்புகள்:  எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.

  அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

  ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

  இறப்பு: எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மறுநாள் புதுவைக் கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  விருதுகள்: பாரதிதாசனுக்கு பெரியார், 'புரட்சி கவிஞர்' என்ற பட்டமும், 1946 ஜூலை 29 இல் அண்ணா, 'புரட்சிக்கவி" என்ற பட்டமும் ரூ.25,000 வழங்கியும்  கௌரவித்தனர். 

  பாரதிதாசன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு அவரது மரணத்திற்குப் பின், 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.

  இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினால் 1990ல் பொது உடைமையாக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

  1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

  1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெற்றது. 

  1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95 ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

  1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

  பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:

  புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

  போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

  தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த

  தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

  பாரதிதாசனின் படைப்புகள்:

  பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)

  • பாண்டியன் பரிசு (காப்பியம்)

  • எதிர்பாராத முத்தம் (காப்பியம்)

  • குறிஞ்சித்திட்டு (காப்பியம்)

  • குடும்ப விளக்கு (கவிதை நூல்)

  • இருண்ட வீடு (கவிதை நூல்)

  • அழகின் சிரிப்பு (கவிதை நூல்)

  • தமிழ் இயக்கம் (கவிதை நூல்)

  • இசையமுது (கவிதை நூல்)

  • அகத்தியன் விட்ட புதுக்கரடி

  • பாரதிதாசன் பதிப்பகம் அமைதி

  • செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)

  • பாரதசக்தி நிலையம் (1944)

  • இசையமுதம் (இரண்டாம் பாகம்)

  • பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)

  • குடியரசுப் பதிப்பகம் (1939)

  • இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்

  • பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?

  • குயில் (1948) எதிர்பாராத முத்தம்

  • வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)

  • எது பழிப்பு

  • குயில் (1948) கடவுளைக் கண்டீர்!

  • குயில் (1948)

  • கண்ணகி புரட்சிக் காப்பியம்

  • அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு

  • காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)

  • கற்புக் காப்பியம்

  • குயில் (1960)

  • காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)

  • காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)

  • காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)

  • குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)

  • குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)

  • குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)

  • குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)

  • முல்லைப் பதிப்பகம் (1944)

  • குடும்ப விளக்கு (முதியோர் காதல்)

  • பாரதிதாசன் பதிப்பகம் (1950)

  • குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)

  • குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்

  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)

  • சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)

  • தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)

  • தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு

  • திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்

  • தேனருவி இசைப் பாடல்கள்

  • பாரதிதாசன் பதிப்பகம் (1955)

  • நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)

  • நீலவண்ணன் புறப்பாடு

  • பாண்டியன் பரிசு

  • முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி

  • பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)

  • பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)

  • பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)

  • குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)

  • பாரதிதாசன் பதிப்பகம் (1952)

  • பாரதிதாசன் நாடகங்கள்

  • பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்

  • முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)

  • பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)

  • புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)

  • பெண்கள் விடுதலை

  • பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)

  • மணிமேகலை வெண்பா

  • அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது

  • முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)

  • கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,

  • உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)

  • வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)

  • தமிழுக்கு அமுதென்று பேர்

  • வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது

  • புகழ் மலர்கள் நாள் மலர்கள்

  • தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

  [ஏப்ரல் 29 - பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்]


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp