இந்தக் கொடி எப்படி உருவானது?

நாட்டின் தேசிய கொடியை உருவாக்கிய பிங்காலி வெங்கையாவின் கதை...
பிங்காலி வெங்கையா
பிங்காலி வெங்கையா

நாட்டு மக்களின் வீடுகளில் இன்று பறந்து கொண்டிருக்கக் கூடிய மூவர்ணக் கொடி உருவாக்க பெரும் பாடுபட்டவர்தான் பிங்காலி வெங்கையா.

75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றும் "ஹர்கர் திரங்கா" பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டது. ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றவும், சமூக ஊடகங்களின் முகப்பு படமாக தேசியக் கொடியை மாற்றவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறாக தேசப்பற்றை பறைசாற்றும் நமது கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையாவை இந்நாளில் நாடு நினைவுகூர்வது அவசியம்.

சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர், எழுத்தாளர், மொழியியலாளர் எனப் பன்முகம் கொண்ட பிங்காலி வெங்கையா ஆகஸ்ட் 2, 1878-இல் ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டிணத்தில் பிறந்தார். ஜப்பான் மொழியை சரளமாக பேசக் கூடியவர் என்பதால் ஜப்பான் வெங்கையா என்றும் அழைக்கப்பட்டார்.

ஆயுதப்படைகளால் ஈர்க்கப்பட்ட பிங்காலி, தனது 19ஆவது வயதில் பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தில் சேர்ந்து போயர் போரில் கலந்து கொள்வதற்காக தென் ஆப்ரிக்கா சென்றார். அங்குதான் தேசிய கொடி உருவாக காரணமாக இருந்த இரண்டு இந்தியர்கள் முதல்முறையாக சந்தித்துக் கொண்டனர். ஒருவர் பிங்காலி வெங்கையா; மற்றொருவர் மகாத்மா காந்தி.

தொடர்ந்து, கொல்கத்தாவில் 1906ஆம் ஆண்டு தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட பிங்காலி, காங்கிரஸ் கூட்டங்களில் பிரிட்டிஷ் கொடி ஏற்றுவதைக் கண்டு மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இந்த சம்பவம்தான் இந்திய நாட்டிற்காகத் தனியொரு கொடியை வடிவமைக்க பிங்காலியை தூண்டியது.

இதையடுத்து, இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகியவை ஒத்துப்போகும் வகையில், 30 வெவ்வேறு கொடிகளின் வரைவுகளை பிங்காலி வடிவமைத்து ‘இந்திய தேசியக் கொடி’ என்ற புத்தகத்தை 1916-இல் வெளியிட்டார்.

பின்னர், விஜயவாடாவில் 1921ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படி, இந்தியாவிற்கான கொடி வரைவை தயாரித்த பிங்காலி, அனைத்து தலைவர்கள் முன்னிலையிலும் காட்டி விளக்கினார்.

இந்த சம்பவம் குறித்தும், பிங்காலி வெங்கையா பற்றியும் யங் இந்தியா நாளிதழில் ‘நமது தேசியக் கொடி’ என்ற தலைப்பில் காந்தி எழுதிய கட்டுரையில் கூறியதாவது:

“தேசிய கொடிக்காக நாம் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டங்களில், இந்திய தேசியக் கொடிக்கு ஒப்புதல் வாங்குவதற்காக பிங்காலி கடுமையாகப் போராடியதை நான் பாராட்டுகிறேன். நான் விஜயவாடா சென்றபோது, சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலான இரு வண்ணக் கொடியை கதர் ராட்டையுடன் வடிவமைக்கக் கூறினேன். அடுத்த மூன்றே மணிநேரத்தில் தேசிய கொடியை வடிவமைத்துக் கொடுத்தார் பிங்காலி. பின்னர், உண்மை மற்றும் அகிம்சை குறிக்கும் விதமாக வெள்ளை நிறத்தைச் சேர்த்தோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அன்று முதல் காங்கிரஸின் அனைத்துக் கூட்டங்களிலும் பிரிட்டிஷ் கொடிக்கு பதிலாக பிங்காலி வடிவமைத்த மூவர்ணக் கொடியே ஏற்றப்பட்டது.

ஜூலை 22, 1947-இல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில், காவி, வெள்ளை, பச்சை நிற மூவர்ணக் கொடிக்கு நடுவே கதர் ராட்டை கொண்ட கொடி வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இதே கொடிதான், கதர் ராட்டைக்கு பதிலாக அசோகச் சக்கரத்தை மாற்றி நாட்டின் அதிகாரப்பூர்வ கொடியாக ஆகஸ்ட் 15, 1947 முதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் என்ற போதிலும், தனது நற்பெயரையும், புகழையும் பணமாக்கிக் கொள்ளாமல், இறுதிவரை எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். வெங்கய்யாவின் மகன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டபோதும், பணத்திற்காக யாரிடமும் நிற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இவர் 1963ஆம் ஆண்டில் உயிரிழந்த நிலையில், 2009இல் மத்திய அரசின் சார்பில் பிங்காலிக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 2014இல் விஜயவாடாவில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு பிங்காலி பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், பிங்காலியை கெளரவிக்கும் விதமாக அவரது 146ஆவது பிறந்த நாளான ஆகஸ்ட் 2ஆம் தேதி, மத்திய அரசின் "ஹர்கர் திரங்கா" பிரசார நிகழ்வில், அவரது குடும்பத்தினர் கெளரவப்படுத்தப்பட்டனர். இதே நிகழ்வில், பிங்காலி வடிவமைத்து நூற்றாண்டை கடந்திருக்கும் முதல் இந்திய கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்து குண்டூரில் வசிக்கும் பிங்காலியின் பேரன் ஜிவிஎன் நரசிம்மம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு எனது தாத்தாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

இவ்வளவு ஆண்டுகளாகக் பிங்காலி வெங்கையா வடிவமைத்த நாட்டின் கொடியைக் கொண்டாடிவரும் மக்கள், இனி அவரையும் கொண்டாடட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com