'காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்வேன்'

இரண்டு கால்கள் செயலிழந்தாலும் உலக பாரா  அதலெடிக்ஸ், காமன்வெல்த்  போட்டிகளில் தங்கம் வெல்வேன் எனத்  தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் கம்பத்தைச் சேர்ந்த மனோஜ் குமார். 
மனோஜ் குமார்
மனோஜ் குமார்

இரண்டு கால்கள் செயலிழந்தாலும், உலக பாரா அதலெடிக்ஸ், காமன்வெல்த்  போட்டிகளில் தங்கம் வெல்வேன் எனத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார், வீல்சேர் ரேஸிங்கில் பல தங்கங்களை வென்றுள்ள கம்பத்தைச் சேர்ந்த மனோஜ் குமார். 

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சபாபதி - ஜெயா தம்பதியினரின் மகன் மனோஜ் குமார் (22). இவர் சிறு வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், இரண்டு கால்களும் செயலிழந்தன. உடல் குறைப்பட்டாலும் மனம் குறைப்படாமல் பள்ளிப்படிப்புகளை உள்ளூரிலேயே படித்து வந்தார்.

நண்பர்கள் மூலம் கோயம்புத்தூருக்கு சென்ற மனோஜ் குமாருக்கு வேலை எளிதில் கிடைக்கவில்லை. அங்கு அனுராக் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் தங்கி இருந்து மாவட்ட பாரா விளையாட்டுப் போட்டியில் 2015 -  16ல் பங்கேற்று முதல் போட்டியிலேயே வீல் சேர் ரேஸில் முதல் பரிசு பெற்றார்.

அதைத் தொடர்ந்து வீல் சேர் போட்டியிலேயே ஆர்வம் காட்டத் தொடங்கி, தினமும் பயிற்சி பெற கோவை நேரு ஸ்டேடியத்திற்குச் சென்றார். 

சொமேட்டோ உணவு விநியோகப் பிரிவில் வேலை பார்த்து, உணவு மற்றும் இதர செலவுகளைச் சமாளித்து பயிற்சிகளைத் தொடர்ந்தார். 

சாதனைகள் 

2015- 16 ஆண்டில் கோயம்புத்தூரில் மாவட்ட அளவிலான போட்டியில் தங்கம் வென்றார்.

சென்னையில் நடைபெற்ற ஆர்சிஎம்டி, ஒய்எம்சிஏ கல்லூரி பாராலிம்பிக் தடகளப் போட்டி 2016, வீல்சேர் ரேஸிங்கில் 2 தங்கப் பதக்கங்கள் பெற்றார்.

2017ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய பாரா அதெலெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள், ஹரியாணாவில் நடைபெற்ற போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள்,

2021 கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான 16 ஆவது பாரா அதெலெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வீல்சேர் ரேஸிங்கில் 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.

2021ல் இந்திய அளவிலான 3-வது தேசிய பாரா அதெலெட்டிக் சாம்பியன் ஷிப் வீல்சேர் ரேஸிங்கில் 3 தங்கப் பதக்கங்கள், 2022 சென்னையில் கடந்த மார்ச் மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 17 ஆவது மாநில அளவிலான பாரா அதெலெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.

சாதனைகள் பற்றி மனோஜ் குமார் கூறும்போது, 'மாற்றுத் திறனாளி சகோதரர்களுக்கு சாதிக்க நிறைய உள்ளது, மனம் தளர வேண்டாம், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும். 

நன்கொடையாளர்கள் மூலம் அட்வான்ஸ்டு ரேஸிங் ஸ்போர்ட்ஸ் வீல் சேர் ரூபாய் 6 லட்சம் வரை மதிப்பாகும், மாதம் 15 ஆயிரம் ரூபாய் கிடைத்தால் போதும்.  சிறப்பான பயிற்சி பெற்று ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் மற்றும் டியூஎன்ஐஎஸ் உலக பாரா அதெலெட்டிக் போட்டிகளில் வெல்வேன்' என்றார் தன்னம்பிக்கையுடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com