சக மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டித்தேர்வுக்கு வழிகாட்டும் அரசு ஊழியர்!

பார்வையை இழந்ததால் இவர்களுடைய வாழ்க்கை திசை மாறி போகவில்லை. மாறாக, திசை மாற்றம் ஆனவர்களின் வாழ்க்கையை நேர்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அருள்மாதவன்
அருள்மாதவன்

மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், அதைவிடவும் அவர்களின் பெற்றோர்கள் அனுபவிக்கிற வேதனையையும் பார்க்கும்போது கனத்த இதயத்துடனேயே கடந்து செல்ல வேண்டியுள்ளது.

வளர்ந்து வரும் அறிவியல் யுகத்திலும், உலக அளவில் மிகப்பெரிய  தொகையில் செய்யப்படும்  ஆராய்ச்சிகளும்கூட மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதை இன்னமும் தடுக்க  முடியவில்லை. அவ்வப்போது, ஆரோக்கிய குழந்தைப்பேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் எதிர்பார்த்த பலன்கள் இன்னமும் கிடைக்காமல், மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை உருவாகிக் கொண்டே இருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் பெண்களாக இருந்தால், அவர்களுக்கே உரிய இயற்கை இடர்பாடுகள், உடலியல் சார்ந்த நிகழ்வுகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

பிறவியிலேயே கண் பார்வையற்றவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள்  என்றால், பிறந்து வளரும்போது இடையில் ஏற்பட்ட விபத்துகளால் கண்  பார்வை இழந்தவர்களாக மாறிப் போன - பெற்று இழந்தவர்களின் வாழ்க்கை இன்னமும் கொடுமையானது.

பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த காலத்தில் தாங்கள் ரசித்தவற்றை மீண்டும் தன் மனக்கண்களால் மட்டுமே அவர்களால் காண முடியும். ஆனாலும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதோடு, தங்களைப் போன்ற குறைபாடுடையவர்களைத் கைதூக்கி விடும் வகையில் பலரும் தென்பட்டுக் கொண்டுதான் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது ஆலத்தம்பாடி பொன்னிறை. பச்சை வயல்கள் சூழ்ந்த இந்த கிராமத்தில் வேளாண் தொழிலே பிரதானம். அங்கு இசை பாரம்பரியம் கொண்ட பக்கிரிசாமி - தர்மவள்ளி தம்பதிக்கு மூன்று மகள்களுக்குப் பின் பிறந்தவர் அருள்மாதவன் (43). சிறிது காலம் வேளாண்மையும் பின் வணிகமும் செய்து விட்டுத் தவுல் கலைஞராக ஆனார் பக்கிரிசாமி.

அருள் மாதவன் 8 வயது சிறுவனாக இருந்தபோது, ஒரு தீபாவளி நாளில் வெடிக்காத வெடிகளின் மருந்துகளை எல்லாம் ஒரு தாளில் கொட்டி தீ வைத்தபோது, மருந்து வெடித்துச் சிதறியது. அப்போது அருள்மாதவனின் பார்வை பாதிக்கப்பட்டது. 8 வயதில் விழித்திரையில் ஏற்பட்ட பாதிப்பு சிறிது சிறிதாகக் கூடுதலாகி 5 ஆண்டுகளில், 13 வயதில், முற்றிலுமாகப் பார்க்கும் திறனை இழந்தார். எட்டாம் வகுப்போடு அருள்மாதவனின் கல்விக்கனவும் முற்றுப்பெற்றது.

அதன் பிறகு இருளே அவருடைய உலகமானது. என்றாலும் படிக்க வேண்டும் என்ற வேட்கையை அவரால் நிறுத்த முடியவில்லை. மேல்படிப்புக்கான வழிமுறைகளை ஆராய்ந்துகொண்டே இருந்தார். தனது நண்பர்கள் உதவியுடன் ஒரு நண்பன், ஒரு பாடம், ஒரு தலைப்பு என தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பாடமாக மனப்பாடம் செய்து வெற்றிகரமாக 8 ஆம் வகுப்பைத் தனது 20 ஆவது வயதில் அதாவது 2010 இல் நிறைவு செய்தார்.

அந்த நேரத்தில் அருள்மாதவனுக்கு சென்னையைச் சேர்ந்த மனுவேல்ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பார்வையற்றவர்களுக்காகப் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் பகுதிகளை வினா, விடை வடிவத்தில்  மெமரி கார்டில் பதிவு செய்து, தமிழகமெங்கும் பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெறும் வகையில், தேவைப்படும் நபர்களுக்கு இலவசமாக அனுப்பிவைப்பது மனுவேல்ராஜின் வழக்கம்.

அந்த மெமரிகார்டு பாடங்களின் உதவியால் 2012 இல் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றார். அதே முறையில் 2014-இல் 12 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி அடைந்தார். இதனிடையே, 10 ஆம் வகுப்பு முடித்த நிலையில் திருவாரூர் அரசு இசைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படிப்பை முடித்து, நாகசுர வித்வான் பட்டம் பெற்றார். பின்னர் மேல்நிலைத் தேர்ச்சிக்குப் பிறகு திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 2014 இல் இளங்கலை வரலாறு பாடத்தில் சேர்ந்தார்.

இந்த நேரத்தில் 2014-இல் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய நான்காம் நிலை ஊழியர்களுக்கான தேர்வில் பங்கேற்று அதிலும் வெற்றி பெற்றார்.  2016 இல் ஆதிச்சபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராகப் பணியேற்றார். பின்னர் ஆதிச்சபுரத்திலிருந்து பொன்னிறை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பணி மாற்றம் பெற்றார்.

இதனிடையே பாதியில் நிறுத்தியிருந்த இளங்கலை வரலாறு பாடத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழி கல்வித் திட்டத்தில் சேர்ந்து நிறைவு செய்தார். பின்னர் 2020-இல் முதுகலை வரலாறு நிறைவு செய்தார். 2022-இல் இசை நுண்கலை அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் மூத்த சகோதரி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். தாய் தர்மவள்ளி, புற்றுநோயால் உயிரிழந்திருந்தார். பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் தனது வாழ்க்கையை நம்பிக்கையுடன் நகர்த்தி வருகிறார். ஒருநாள் அவசரகால ஊர்தி ஓட்டுநர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில், என் அக்கா மகனும் உங்களைப் போலவே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அப்போது, அருள்மாதவனின் எண்ணத்தில் பார்வையற்றவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

உடனே, அசோக்பாலா என்னும் அந்த இளைஞரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கென 'கனவு நிஜமாகும்' என்ற வாட்ஸ்ஆப் குழு ஒன்றைத் தொடங்கினார். அதன் மூலம் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் பார்வையற்ற மாணவர்களுக்கு தினசரி பத்து வினாக்களை அலைபேசி வழியாக இருவரும் பதிவேற்றம் செய்யத் தொடங்கினர்.

இதைக் கேள்விப்பட்ட மாற்றுத்திறனாளியான விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் மணிக்குமார் என பலர் இணையத் தொடங்கினர். அந்த வகையில், தற்போது சுமார் 200 பார்வையற்ற மாணவர்களுக்கு தினசரி பாடங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பாடங்களை அனுப்புவதோடு நிறுத்திவிடாமல், வாரத்துக்கு ஒரு முறை தேர்வு நடத்தி, தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை அரசுத் தேர்வுக்கு சிறந்த முறையில் தயார்படுத்துகின்றனர்.

பார்வையை இழந்ததால் இவர்களுடைய வாழ்க்கை திசை மாறிப் போகவில்லை. மாறாக, திசை மாற்றம் ஆனவர்களின் வாழ்க்கையை நேர்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் கண்களுக்கு உலகம் இருளாகத் தெரியலாம். ஆனால், இருள் நிறைந்த மனிதர்களுக்கு இவர்கள் விளக்காக இருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com