தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்!

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர், அதே பாதிப்பில் உடல் உறுப்புகள் செயலிழந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மறு வாழ்வு பயிற்சி அளித்து வருகிறார்.
ராம்ஜி டிரஸ்ட் மறு வாழ்வு மையத்தில் பயிற்சி பெற்று வரும் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்.
ராம்ஜி டிரஸ்ட் மறு வாழ்வு மையத்தில் பயிற்சி பெற்று வரும் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர், அதே பாதிப்பின் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மறு வாழ்வுக்கான பயிற்சி அளித்து வருகிறார்.

வட புதுப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடபூபதி (56). சமூகவியல் முதுகலை பட்டதாரியான இவர்,  ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். கடந்த 2009-ல் சாலை விபத்தில் சிக்கி முதுகுத் தண்டுவடம் காயமடைந்த வெங்கடபூபதிக்கு, இடுப்புக்குக் கீழ் உடல் இயக்கம் தடைப்பட்டுவிட்டது.

புணேவில் உள்ள ராணுவ மறு வாழ்வு மையம், வேலூர் சிஎம்சி மறு வாழ்வு மையம், தென்காசி அமர் சேவா மையம் ஆகிய இடங்களில் மறு வாழ்வுப் பயிற்சி பெற்றார் வெங்கடபூபதி.

முன்னாள் ராணுவ வீரர் வெங்கடபூபதி
முன்னாள் ராணுவ வீரர் வெங்கடபூபதி

தாயாரின் ஆதரவில் இருந்து வரும் வெங்கடபூபதி, கடந்த 2012-ம் ஆண்டு, முதுகுத் தண்டு வடம் பாதித்து படுக்கை நோயாளியாக இருந்த 4 பேரைக் கண்டறிந்து, வடபுதுப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துவந்து தங்க வைத்து, அவர்களுக்கு மறு வாழ்வுப் பயிற்சி அளித்தார். அப்போது இவரிடம் பயிற்சி பெற்றவர் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த 8 வயது பள்ளி மாணவர் பார்த்தசாரதி. 

மறு வாழ்வுப் பயிற்சி பெற்ற பார்த்தசாரதி, பள்ளித் பொதுத் தேர்வுகளை தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்று, சென்னை சத்தியபாமா கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்றார். சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து விளையாடியுள்ளார். தற்போது அமெரிக்காவில் 4 ஆண்டு கால இயன்முறை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார்.

கைலாசபட்டியில் ராம்ஜி டிரஸ்ட் என்ற பெயரில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மறு வாழ்வு பயிற்சி மையம் நடத்தி வரும் வெங்கடபூபதி பேசுகையில், 'சாலை விபத்துகளின்போது பெரும்பாலும் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்படுவதில்லை. உயரமான இடத்திலிருந்தும், வாகனம் மற்றும் கால் சறுக்கியும் கீழே விழுபவர்கள் சிலருக்கு முதுகுத் தண்டுவடத்தில் காயம் ஏற்படுகிறது. 

இயன்முறை பயிற்சி பெறும் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்
இயன்முறை பயிற்சி பெறும் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்

முதுகுத் தண்டுவட காயத்தால், காயம் ஏற்பட்ட பகுதிக்கு கீழ் உள்ள உடல் பாகங்கள் முழுமையாகச் செயலிழக்கும். மூளையுடன் தொடர்பு துண்டிக்கப்படும். இயற்கை உபாதைகள் வெளியேறுவது தெரியாது. படுக்கைப் புண் ஏற்படும்.  இல்லற வாழ்க்கை பாதிக்கும். பாதிக்கப்பட்டவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவர். முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாகக் குணமடைவதற்கு மருத்துவ ஆய்வு நடைபெற்று வருகிறது. 

இதிலிருந்து மீள்வதற்கு மறு வாழ்வுப் பயிற்சி அவசியம். செயலிழந்த உடல் உறுப்புகளைத் தவிர ஏனைய உடல் உறுப்புகளை வலுவாக வைத்திருக்க வேண்டும். இயற்கை உபாதைகளைத் தாமாக வெளியேற்றிக் கொள்வதற்கும், படுக்கைப் புண் ஏற்படாமல் இருப்பதற்கும் பயிற்சி பெற வேண்டும். அடிப்படை பயிற்சிக்குப் பின்னர், வாழ்வியல் மேம்பாட்டுப் பயிற்சி பெறலாம்.

எனக்கு பள்ளிப் பருவம் முதல் விளையாட்டு, தேசிய மாணவர் படை மீது ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம்தான் என்னை ராணுவப் பணிக்கு அழைத்துச் சென்றது. 41 வயதில் விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நான், 4 ஆண்டுகளில் இயல்பு வாழ்கையை எதிர்கொள்ளத் தயாரானேன். என் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி, கூடைப் பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளையும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறேன்.

ராம்ஜி டிரஸ்ட் மறு வாழ்வு பயிற்சி மையத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 120 பேர் மறு வாழ்வு பயிற்சி பெற்றுள்ளனர். இங்கு 4 முதல் 6 மாத காலம் அடிப்படை பயிற்சியுடன், இயன்முறை பயிற்சி, யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி மற்றும் சிறு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை. செயலிழந்த உடல் உறுப்புகளுக்கு மாற்றாக செயற்கை உறுப்புகள் பொருத்த முடியாது. உரிய பயிற்சி மூலம் மறு வாழ்வு  பெற்று, இயல்பு வாழ்க்கைக்குச் செல்லலாம். இதற்கு அவர்களது குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்தில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக 2,800 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் மறு வாழ்வு பயிற்சி மையம் தொடங்க வேண்டும் என்றார். வெங்கடபூபதியின் தொடர்பு எண்: 78713 67699.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com