திறன்மிக்க தலைமுறையை உருவாக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை!

சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயலிழந்த ராசிபுரம் நல்லாசிரியை செல்வகுமாரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளி ஆசிரியராக அர்ப்பணிப்புடன் சேவை புரிந்து வருகிறார். 
மாணவர்களுடன் ஆசிரியை செல்வகுமாரி.
மாணவர்களுடன் ஆசிரியை செல்வகுமாரி.

சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் ராசிபுரம் நல்லாசிரியை செல்வகுமாரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளி ஆசிரியராக அர்ப்பணிப்புடன் சேவை புரிந்து வருகிறார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி என்பவர் மனைவி மு.செல்வகுமாரி. இவர் ராசிபுரம் செம்மலைத்தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் ஆசிரியராக உள்ளார். 2017-ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட இவர் இரு கால்களும் செயல் இழந்தவர். இதனால் நாள்தோறும் வாடகை ஆட்டோவில் பள்ளிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

கால்கள் தான் செயல் இழந்ததே தவிர, இவரது சிந்தனை, செயல் அதிக உத்வேகத்துடன் செயல்படுகிறது என்றே சொல்லலாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். இவர், 3-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை பயிலும் சாதாரண ஏழை, நடுத்தர குடும்பத்து மாணவர்களுக்கு கல்வி போதிப்பதை வாழ்நாள் வரமாக கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். பாடத்திட்டத்துடன் பல்வேறு கூடுதல் திறன்களையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து கற்பித்து வருவது பெற்றோர்களிடம் மட்டுமின்றி, பலரது வரவேற்பினையும் பெற்றுள்ளது.  

தன்னிடம் உள்ள கவித்திறன், பாட்டு பாடும் திறன், ஒவியத்திறன், கலைப்பொருட்கள் வடிவப்பை, கூடை முடைதல் போன்ற திறன்களை தனது மாணவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து கூடுதல் தகுதியை வளர்த்து வருகிறார். இதன் மூலம் வகுப்பறையில் இவர் கற்பித்த கவிதையாகட்டும், பாடலாகட்டும் அனைத்து மாணவர்களும் ஒருமித்த குரலில் வெளிப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர்.

இதனையும் தாண்டி ஆசிரியரை மு. செல்வகுமாரி எழுதிய கவிதை வரிகள் மட்டுமின்றி, பாரதியார் பாட்டு, நாமக்கல் கவி்ஞர் பாடல்கள் என உணர்ச்சி பூர்வமான பாடல் வரிகளையும் ஒருமித்த குரலில் பாடி அசத்துகின்றனர் இவரது மாணவர்கள்.

மேலும் ஜவாஹர்லால் நேரு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபிரசாத், வ.உ.சி.,போன்ற தலைவர்கள் குறித்தும் ஆழமான புரிதலுடன் இருக்கும் வகையில் இவர்களது மாணவர்களுக்கு சமுதாயப் பற்றை விதைத்து கற்பித்து வருகிறார்.  இவரது வகுப்பில் உள்ள 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் 100-க்கும் மேற்பட்ட  திருக்குறள் வரிகளை மட்டுமின்றி அதற்கான பொருளையும் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது மட்டுமின்றி, நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் நட்சத்திர ஆசிரியர் விருது, கவிதைத் தொகுப்புக்கு உலக பண்பாட்டு சங்கம் சார்பில் கவிக்கதிர் விருது, செண்பகராமன் விருது, கலங்கரை விளக்கம் போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லாரிசிரியர் மு. செல்வகுமார் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. பள்ளிக்  குழந்தைகளையே தன் பிள்ளைகளாகக் கருதி ஊக்கப்படுத்திக் கற்றல் பணி செய்து வருகிறார். இதனால்தான் மு.செல்வகுமாரி, பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி ஆகிய இருவரும் கரோனா காலகட்டத்தில் வகுப்பு மாணவர்கள் சுமார் 50 பேருக்கு நிவாரணமாக தலா ரூ.1000 தங்களது சொந்த பணத்தில் வழங்கினர். இதுபோன்ற இவரின் பணிகளால் பிற பெற்றோர்களுக்கும், அரசுப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுத்தியுள்ளது எனலாம். போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவரும், இவரது கணவர் வெங்கடாஜலபதியும் போலியோ ஒழிப்புப் பணியை முதன்மையாகக் கொண்டு செயலாற்றி வரும் ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பில் இணைந்து போலியோ ஒழிப்புப் பணிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். 

அரசுப் பள்ளியில் மாணவர்கள் குன்றின் மேல் இட்ட விளக்குபோல் தனித்திறனுடன் ஜொலிக்க வேண்டும் என்பது எனது பணியின் நோக்கம் என பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் நல்லாரிசிரியர் மு.செல்வகுமாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com