திறமையை வெளிப்படுத்தக் குறையொன்றும் தடையில்லை!

சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நினைத்துவிட்டால் சாதித்து விடலாம் என்கிறார் ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாகி ஸ்வர்ணலதா.
ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாகி ஸ்வர்ணலதா
ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாகி ஸ்வர்ணலதா


கோவை: ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமையை வெளிப்படுத்த உடல் ஊனம் ஒருபோதும் தடையாக இருக்காது என்கிறார் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாகி ஸ்வர்ணலதா.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஆடி கார் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் தலைமை அதிகாரியாக பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் கோவையைச் சேர்ந்த ஜெ. ஸ்வர்ணலதா.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு தனது 29 வயதில் திடீரென ஏற்பட்ட காய்ச்சல் ஏற்பட்டு வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. காய்ச்சல் எதிரொலியாக மல்டிபில் ஸ்கிளிராசிஸ் என்ற நோயால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் உடல் கொஞ்சம், கொஞ்சமாக முடங்கி சக்கர நாற்காலியில் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கால்கள் முடங்கியதால் தானும் முழுவதுமாக முடங்கிட வேண்டியதில்லை என்று தன்னம்பிக்கையோடு பல்வேறு தளங்களில் பரிணமித்து வருகிறார். மேலும் முன்பைவிட தற்போது கூடுதலாகப் பணியாற்றி வருகிறார். நினைத்ததை சாதிக்க உடல் ஊனம் எப்போதும் தடையாக இருக்காது என்பதை மாற்றுத்திறனாளிகளுக்கு உணர்த்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். 

2010 ஆம் ஆண்டு கோவை வந்த ஸ்வர்ணலதா, தனது கணவர் மருத்துவர் குருபிரசாத் உதவியுடன் ஸ்வர்கா என்ற அறக்கட்டளையை கோவை புலியகுளத்தில் ஏற்படுத்தினார். தன்னைப் போல் மத்திய நரம்பு மண்டலம் மற்றும் நரம்புகள் தொடர்பான பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். உடல் இயக்கமே பாதிக்கப்பட்டாலும் மற்றவர்களைப் போல் தாங்களும் பல்வேறு விஷயங்களைச் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு விதைத்து வருகிறார்.

தனது அறக்கட்டளை மூலம் சௌக்யா என்ற சிகிச்சை மையத்தை ஏற்படுத்தி மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இயன்முறை பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இம்மையத்தில் 400 பேர் இயன்முறைப் பயிற்சி பெற்று வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் தன் பேச்சு மூலம் அனைவருக்குள்ளும் தன்னம்பிக்கையை விதைத்து தன்னம்பிக்கைப் பேச்சாளராக மிளிர்கிறார். பல உலக நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசித் தன்னம்பிக்கை பேச்சாளராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் பயணம் மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக வாகனம் வடிவமைத்து சாரதி என்ற பெயரில் வாடகைக்கு இயக்கி வருகின்றனர். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களைப் போல் எளிதாக நினைத்த இடத்திற்கு செல்ல முடியும். சாரதி வாகனம் மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தனது அறக்கட்டளை மூலம் கோவை ரயில் நிலையம், 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் நடைமேடை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்காக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் சமூக மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார் ஸ்வர்கா அறக்கட்டளை நிர்வாகி ஜெ. ஸ்வர்ணலதா. குறை என்பது மனதில்தான் உள்ளது. உடல் குறை தன் முயற்சிக்கு எப்போதும் தடையாக இருக்காது என்பதை நிரூபித்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் உடல் பாதிப்பால் முடங்காமல் உள்ளத் துணிவால் சாதிக்க வேண்டும் என்று அழுத்தமாகத் தெரிவிக்கிறார். 

தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்த உடல் குறை  ஒரு தடையாக இருக்காது என்பதை நிரூபிக்கும் வகையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மிசஸ் இந்தியா சவுத் பியூட்டி கான்டஸ்ட் போட்டியில் சராசரி போட்டியாளர்களுடன் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் தன் செயல்பாட்டிற்காக 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக, ஸ்வர்ணலதா கூறியதாவது: வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. அதுபோல்தான் என் வாழ்க்கையும் ஒருநாள் முடங்கியது. ஆரம்பத்தில் எல்லாரையும் போல் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டேன். ஆனால், நம்மைப்போல் முடங்கியுள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடிவு செய்து பயணித்து வருகிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆற்றல் இருக்கிறது. இதனை வெளிப்படுத்த உடல் ஊனம் தடையாக இருக்கக்கூடாது என்பதை உணர்ந்து செயல்படத் துவங்கினேன். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கணவரின் உதவியோடு ஸ்வர்கா அறக்கட்டளையை உருவாக்கினேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக தனியார் வாடகை காரில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தன்னுடைய சக்கர நாற்காலியை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது மாற்றுத்திறனாளிகள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக வடிவமைத்ததுதான் சாரதி வாகனம். இந்த வாகனத்தில் மாற்றுத்திறனாளிகள் தன் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முடியும். தவிர கழிப்பறை, படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் உடலில் பல்வேறு வலிகள் இருக்கும். ஆனால் இலக்கை வைத்துகொண்டு பயணிப்பதால் பயணத்தில் வலிகள் தெரியாமல் போகிறது. எனவே, நமக்குள் இருக்கும் பாதிப்பைப் பற்றி கவலைப்படாமல் குறிக்கோளை வைத்துக்கொண்டு பயணிக்கும்போது பாதிப்பு இருப்பதை மறந்து சிறப்பாக பயணிக்கலாம். இந்த உழைப்பு உங்களை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். எனவே சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் ஊனம் ஒரு தடையல்ல என்பதை நினைத்தால் சாதித்து விடலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com