உ(லக)தாரண சதுரங்க ஆசிரியை!

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் 2,140 பேருக்கு சதுரங்க வகுப்பு எடுத்து உலக சாதனை படைத்துள்ளார் மாற்றுத்திறனாளி ஆசிரியை ஜெனிதா ஆண்டோ. 
ஆசிரியை ஜெனிதா ஆண்டோ. 
ஆசிரியை ஜெனிதா ஆண்டோ. 

 

பொன்மலைப்பட்டியின் பொன்மகள், சீராப்பள்ளியின் தங்க மங்கை, உலக அளவில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்ற சதுரங்க வீராங்கனை, ஆசிய பாரா ஒலிம்பிக் சதுரங்கப் போட்டியின் சாம்பியன், திருச்சி பொலிவுறு நகரத் திட்ட விளம்பரத் தூதர் என பல்வேறு அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் உலகின் உதாரணம் என்பது ஜெனிதா ஆண்டோவின் கூடுதல் சிறப்பு (தற்போது, உலக சதுரங்க விளையாட்டு ஆசிரியராக உள்ளார்).

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் 2,140 பேருக்கு சதுரங்க வகுப்பு எடுத்து ஏசியன் ரெகார்ட்ஸ் அகாதெமி, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாதெமி, தமிழியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் இடம்பிடித்துள்ளார். 

திருச்சி பொன்மலைப்பட்டியை பூர்வீமாகக் கொண்டவர் ஜெனிதா ஆண்டோ. இவரது தந்தை காணிக்கை இருதயராஜ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எல்லா குழந்தைகளுக்கும் அவர்களது தந்தையே ஹீரோ. ஜெனிதா ஆண்டோவுக்கான ஹீரோவும் அவரது தந்தைதான். ஹீரோவாக மட்டுமின்றி ஜெனிதாவை தாங்கும் நாற்காலியாகவே வாழ்நாள் முழுவதும் மாறிப்போனார்.

தனது மூன்று வயதில் போலியோ எனும் இளம்பிள்ளை பாதிப்புக்குள்ளானார் ஜெனிதா. இதன் காரணமாகக் கால்களின் செயல்பாட்டை இழந்து சக்கர நாற்காலியே வாழ்க்கை என்றானது. இருப்பினும், இவரது எண்ணச் சக்கரங்கள் எட்டாத உயரத்துக்குச் சென்றன.

எட்டாம் வகுப்பு வரை சக மாணவர்களுடன் பள்ளிக்குச் சென்றவர், தனது தந்தையின் பாரத்தைக் குறைக்கும் வகையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கத் தொடங்கினார். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை தனித்தேர்வராக எழுதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டமும் பெற்றார்.

சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை என்றாலும் ஒருபுறம் சுயமாகவே நின்று கல்வியில் பட்டம் பெற்றார். மறுபுறம் சதுரங்க விளையாட்டிலும் அதீத ஆர்வம் கொண்டார். வீட்டில் தந்தையுடன் பொழுதுபோக்கிற்காக சதுரங்கம் விளையாடியவர், தொடர்ந்து தனது தந்தையையே முதல் ஆசானாகக் கொண்டு சதுரங்கம் கற்றார். கற்றுக் கொண்ட வித்தையை தனது 9 ஆவது வயதில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் அரங்கேற்றினார். ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பாகுபாடின்றி அனைவருக்குமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். கலந்துகொண்ட முதல் போட்டியில் தங்கம் வென்றவருக்கு உலகளாவிய போட்டியிலும் தொடர்ச்சியாக தங்கம் பெறும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

திருச்சியில் உள்ள கேம்பியன் பள்ளியில்தான் இவர், தனது முதல் தங்கத்தை (1995இல்) வென்றார். இதே கேம்பியன் பள்ளியில்தான் இப்போது (2022)  மேலும் ஓர் உலக சாதனை படைத்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44 ஆவது உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னெடுப்பாக திருச்சியில் நடைபெற்ற மாபெரும் சதுரங்கப் போட்டியில் ஆசிரியராக பங்கேற்றார். கேம்பியன் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி உலக சாதனைக்காக இந்தப் போட்டி நடைபெற்றது. இதில், ஒரே இடத்தில் கூடிய 2,140 மாணவர், மாணவிகளுக்கு சதுரங்க வகுப்புகளை எடுத்து உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'சமூகத்துடன் மட்டுமல்லாது குடும்பத்து உறுப்பினர்களிடமும் ஒன்றிணைந்து போகமுடியாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளுக்குச் சவால்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக, சில காலங்களுக்கு நல்ல முறையில் செயல்பாடுடன் இருந்துவிட்டு திடீரென ஏற்படும் விபத்துகளால் உடல் உறுப்புகள் செயலிழந்து போகும் மாற்றுத்திறனாளிகள் பழையபடி சகஜமான நிலைக்கு வரமுடியாமல் மிகவும் மனதுடைந்து போகின்றனர்.

இத்தகைய மனிதர்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்கும் அதற்கு ஏதாவது தீர்வுகளைக் கண்டடைவதற்கும்தான் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிம்மதி வேண்டிச் சாய்வதற்குத் தோள்களைத் தேடும் மாற்றுத்திறனாளிகள் அனைவருமே சாதிக்கப் பிறந்தவர்கள். 

சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு வழியில் இருக்கும் தடைக்கற்களை அகற்றிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவாக அளிக்க வேண்டும்.

சவால்கள் இல்லையெனில் எதிலும் ஈடுபாடு இருக்காது. அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடியைத் தவிர்க்க முடியாது. அந்த நெருக்கடியைச் சந்தித்து சவால்களை முறியடித்து வெற்றி பெறுவதே உண்மையான வெற்றியாகும். எனது, வாழ்வே அதற்கு சிறந்த உதாரணம். 3 வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டேன். ஆனால், 9 ஆவது வயதிலேயே சாதனை படிக்கட்டில் ஏறினேன். 

2007 ஆம் ஆண்டு உலக அளவில் நடைபெற்ற ஜூனியர்களுக்கான சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்தேன். இந்தப் போட்டியில் மாற்றத்திறனாளிகள் மட்டுமல்லாது, திறன் மிக்க அனைவரும் பங்கேற்றனர். ஆனால், நான் சாம்பியன் ஆனேன். இதேபோல,  ஐபிசிஏ (IPCA) எனப்படும் உலக மாற்றுத்திறனாளிகள் சதுரங்க விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்படும், உலக அளவிலான சதுரங்கப் போட்டியில் 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்றேன். ஒரு முறை வெண்கலம் வென்றேன். 6 ஆவது முறை தங்கமானது 2019 -இல் பெற்றேன். அதே ஆண்டில் நவம்பரில் நடைபெற்ற போட்டியில் உலக தனிநபர் சதுரங்கப்போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று சிறந்த பெண் வீரர் என்ற பெயரையும் பெற்றேன்.

இளம்பிள்ளை வாத பாதிப்பிலும், ஒருபோதும் ஒரே இடத்தில் தேங்கி நிற்கவில்லை. தந்தையின் துணையுடன் ஓடிக்கொண்டே இருந்தேன். ஆனால், கரோனா தொற்றுப் பரவல் என்பது உலகை மட்டுமல்ல, என்னையும் சற்று அசைத்துப் பார்த்தது. நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு என்பதால், விமானத்தில் உலகளாவிய பயணம் என்பது எனக்கு பெரிதும் சவாலாக இருந்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போட்டிகளுக்குச் செல்லவில்லை. கால்கள் முடங்கினாலும், கரோனா அச்சுறுத்தினாலும் எனது தேடுதலையும், ஆர்வத்தை மட்டுமே விட்டுத் தரவில்லை. அதற்கு வாய்ப்பாக வந்து சேர்ந்தது மாமல்லபுரம் ஒலிம்பியாட் நிகழ்வு. இதன் ஒருபகுதியாக திருச்சியில் ஒரே இடத்தில் 2,140 பேருக்கு சதுரங்கம் கற்றுத்தரும் வாய்ப்பை அளித்தது. இதற்காக பிரத்யேகமாக தயார் செய்து பல சதுரங்க சூட்சுமங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்தேன். இதுதான் என்னை ஆசிரியர் பணி நோக்கி உந்தித் தள்ளியது. விளையாடி சாதிப்பதைவிட, சாதிக்கும் விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் ஆசிரியராக மாறினேன். ஆன்லைன் வகுப்புகள் எனக்குக் கை கொடுத்தன. வீட்டிலிருந்தபடியே காணொலி வாயிலாக சதுரங்க வீரர், வீராங்கனைகளுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறேன். எனது தந்தைக்கு 79 வயதாகிவிட்டது. இன்னமும் எனது பாரத்தை அவருக்கு அளிக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தேன். இதுவும், மகிழ்ச்சிதான். பிறருக்கு உதவும் ஏணியாக என்றும் இருப்பேன் என்றார் ஜெனிதா. 

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com