யார் செய்த பாவம்?
By ததாகத் | Published On : 29th January 2022 04:35 PM | Last Updated : 29th January 2022 10:21 PM | அ+அ அ- |

துயரச் சுமை!
மதுரையில் வயதான தாயும் தந்தையுமே தங்கள் ஒரே மகனை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம், வெறுமனே ஒரு கிரைம் செய்தியாக நாளிதழ்களில் அனைவரையும் கடந்துசென்றிருக்கிறது.
அரசு அல்லது காவல்துறையைப் பொருத்தவரை தாயையும் தந்தையையும் கைது செய்ததுடன் பணி முடிந்துவிட்டது. இனி நீதிமன்றத்தின் பாடு, குற்றம் சாட்டப்பட்டோரின், அவர்களுடைய குடும்பத்தினரின் பாடு, வழக்கறிஞர்கள் பாடு.
ஆனால், உண்மையில் இந்தக் கொலையையும் அதை மறைப்பதற்காக வயதான அந்தப் பெற்றோர் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகளும் கொலைக்கான பின்னணியும் யோசிக்க யோசிக்க பெருந்துயரம்தான் நேரிடுகிறது.
மதுரையில் ஆரப்பாளையம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் பழங்கள் விற்கும் முருகேசன் (72), அவருடைய மனைவி கிருஷ்ணவேணி (65).
இவர்களின் மகன்தான் மணிமாறன் (45), மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. மணமான இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். குடிப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்த இவரை விட்டு மனைவியும் குழந்தைகளும் பிரிந்துசென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. சரி, இப்படிப்பட்ட நபர்களுடன் யாரால்தான் வாழ முடியும்?
பெற்ற கடனுக்காக மணிமாறனுக்குத் தாயும் தந்தையும் சோறு போட்டு வந்திருக்கின்றனர். வேலையே இல்லாவிட்டாலும் மணிமாறனைப் போன்றவர்களுக்கு மட்டும் எங்கிருந்தோ குடிக்க மட்டும் காசு கிடைத்துவிடும் அதிசயம் எல்லா காலத்திலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவரும் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதும் தகராறு செய்வதுமாகக் காலம் கழிந்திருக்கிறது.
இதேபோலதான், சம்பவத்தன்று இரவிலும் வீடு திரும்பிய மணிமாறன், தாயுடன் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்திருக்கிறார், வேறு என்னவாக இருக்கப் போகிறது, சோறு வேகவில்லை, குழம்பு சரியில்லை என்றிருக்குமாயிருக்கும். எரிச்சலுற்ற தந்தையோ மகனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மணிமாறன் தொடர்ந்து சண்டையை வளர்க்க ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட ஒரு கட்டையால் மகனைத் தலையில் தந்தை அடித்ததாகக் கூறப்படுகிறது.
யாருடைய கெட்ட நேரமோ மயங்கிவிழுந்த மணிமாறன், சிறிது நேரத்தில் இறந்தும்விட்டார். அவர் இறந்தது தெரிந்ததும் என்ன பாடுபட்டிருக்கும் பெற்றோரின் மனம்? ஒரே மகன், பெற்று வளர்த்த மகன், மனைவி, மக்கள் என்றெல்லாம் வாழ்ந்த மகன், போதையில் அழிந்த மகன்... கண்ணெதிரே பிணமாகக் கிடந்தால்... அதுவும் தகராறில் சாதாரணமாக அடிக்கப் போய்...
துஷ்ட மகனே என்றாலும் சட்டத்தின்படி கொலைதானே. இதற்காக யாரிடம் சென்று என்ன உதவி கேட்க முடியும்? அந்த இரவில் நிலைகுலைந்த வயதான அந்தத் தம்பதிகள், அவர்களால் யோசிக்க முடிந்த அளவில், எப்படியாவது பிணத்தை எரித்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைத்துவிட்டார்கள் போல.
மகனுடைய உடலை ஒரு சாக்கில் கட்டி, சைக்கிளில் பின்புற கேரியரில் வைத்து, மனைவியும் பிடித்துக்கொண்டுவர, இருவருமாக அருகேயுள்ள வைகையாற்றங் கரைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே சடலத்தைப் போட்டு பெட்ரோலை ஊற்றி எரித்ததாகக் கூறப்படுகிறது.
தொழில்முறைக் கொலையாளிகளா அவர்கள், இவற்றையெல்லாம் தடயமில்லாமல் செய்ய? அரைகுறையாக எரிந்துகிடந்த உடலைக் காலையில் பார்த்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். பிறகென்ன, வழக்கமான புலனாய்வுகள், விசாரணைகள்...
விசாரணையில்தான் மேற்கண்ட விவரங்கள் எல்லாம் காவல்துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. இரவு 2 மணிவாக்கில் மகனுடைய சடலத்தை கேரியரில் வைத்துத் தாயும் தந்தையும் சைக்கிளை உருட்டிச் செல்வதைப் போல சிசிடிவி கேமரா பதிவும் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நிச்சயம் இவர்கள் கிரிமினல்கள் அல்லர், கிரிமினலாக யோசித்திருக்கவும் வாய்ப்பு இல்லை.
காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பெற்ற மகனைக் கொன்றதாகத் தந்தை 72 வயது முருகேசனையும் தாய் 65 வயது கிருஷ்ணவேணியையும் கைது செய்திருக்கின்றனர்.
இனி வழக்கமான நடைமுறைகள் தொடரும். சட்டம் என்ன சொல்லுமோ, சட்டப்படி என்னென்ன நடைபெறுமோ? வயதான காலத்திலும் ஒழுங்காகப் பழம் விற்று பிழைத்துக்கொண்டிருந்த தந்தை, தாயின் எதிர்காலம், அல்ல, நிகழ்காலம் என்னவாகுமோ? அந்த இரவில் குடித்துவிட்டுத் தகராறு செய்த அவ்வளவு பெரிய மகனையும் அவர்களால் வேறு என்னதான் செய்திருக்க முடியும்?
அவர்கள் அடித்தது குற்றமா, போதையிலிருந்த மகன், அந்த அடியிலேயே செத்துப்போனது குற்றமா, செத்துப்போன மகனை என்ன செய்வதெனத் தெரியாமல் வயதான காலத்தில் விழித்துக் கொண்டிருந்தது குற்றமா? நேராகக் காவல்நிலையத்தில் போய் சொல்லிவிடலாம் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனது குற்றமா? கூட்டமாகக் கொள்ளிவைத்து எரிக்க வேண்டிய ஒரே மகனின் சடலம், பெட்ரோல் ஊற்றியும் எரியாமல் போனது குற்றமா?
இப்படியொரு நபரைக் கணவராகப் பெற்றது மனைவி செய்த பாவமா? இப்படியொருவருக்குப் பிள்ளைகளாகப் பிறந்தது மக்களின் பாவமா? இப்படியொரு மகனைப் பெற்றெடுத்து, ஊட்டி வளர்த்து, ஆளாக்கியும் உருப்படாமல்போன நிலையில் சாவுக்கும் காரணமாக நேர்ந்தது அந்தத் தாயும் தந்தையும் செய்த பாவமா?
'ஒருவர் எரித்துக்கொலை, பெற்றோர் கைது' என்பதுடன் இந்தச் செய்தி முடிந்துவிட்டது. ஆனால், இன்னமும் சமுதாயத்தில் ஏராளமான மணிமாறன்கள் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள், அவர்களுடைய பெற்றோர்களும் மனைவிகளும் பிள்ளைகளும் அவர்களைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் இதேபோல இன்னொரு செய்தி வரலாம். அப்போதும் வழக்கமான கைது, வழக்கு வகையறாக்கள்தான். ஆனால் மணிமாறன்கள் உருவாகாமல் எப்போது தடுக்கப்படுவார்கள்?
பொங்கல் விழாவின் மூன்று நாள்களில் மட்டும் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை ரூ.675.19 கோடி, அதிகளவாக மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.144.74 கோடி!
யார் செய்த பாவம்? யாருக்கு சாபம்?
[இதே நாளின் இன்னொரு செய்தி: சென்னை ஓட்டேரியில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற பிரதீப் என்கிற நபரை சுத்தியால் மனைவி அடித்ததில் செத்துப்போய்விட்டார். மனைவியைக் கைது செய்திருக்கிறது காவல்துறை].