ஆட்சியாளர்களுக்காகவா, மக்களுக்காகவா? மாறுமா காவல்துறை?

காவல் துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.
ஆட்சியாளர்களுக்காகவா, மக்களுக்காகவா? மாறுமா காவல்துறை?


காவல் துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

கடந்த ஆட்சியில் சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல் அண்மையில் சென்னை விக்னேஷ் காவல் நிலைய மரணம் தொடங்கி அடிக்கடி நிகழும் காவல் மரணங்கள் காவல் துறை சீர்திருத்தங்களின் உடனடித் தேவையை பேசுபொருளாக்கி உள்ளன.

‘காவல் துறை புகார் ஆணையம்’ குறித்த ஓர் வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை கைதிகளை இரக்கமில்லாமல் உயிரிழக்கும் வரை தாக்குவது காவல் துறையின் பேதலித்த மனநிலையையே காட்டுகிறது என கண்டனம் தெரிவித்திருந்தது.

அந்த வழக்கு திங்கள்கிழமை (ஜுன் 20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மனுதாரரின் வாதம் என்னவென்றால், 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு காவல் துறை (சீர்திருத்த) சட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட அளவிலான “காவல் துறை புகார் ஆணையங்கனின்” அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் 2006-ஆம் ஆண்டு உத்தரவுக்கு முரணானவை என்பதாகும்.

காவல்துறை சீர்திருத்தம் குறித்த 2006-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், காவலில் ஏற்படும் கைதிகளின் கொலைகள், மரணங்கள், பாலியல் வல்லுறவு, தாக்கி காயங்களை ஏற்படுத்துவது மற்றும் பிற அத்துமீறல்களை விசாரிக்க மாநில அளவில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலும், மாவட்ட அளவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலும் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், 2013-ஆம் ஆண்டின் தமிழக சட்டமோ, இந்த ஆணையங்கள் முறையே உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்க வழிவகை செய்தது. இத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டாலும், அவை செயல்படுவது பொதுமக்களுக்கு தெரியும் வகையில் இதுவரை எந்த ஏற்பாடும் இல்லை என்பது வேதனை. தற்போது நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஆணையங்களை நியமிக்க அரசு அஞ்சுகிறதா? எனவும் நீதிபதிகள் கேட்டிருந்தனர். 

உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், புகார் ஆணையம் அமைப்பது குறித்த 2013-ஆம் ஆண்டின் சட்டப்பிரிவுகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அவற்றை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜுன் 20) நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த விசாரணையின் போதாவது, தமிழ்நாடு அரசு, நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்ட காவல் துறை புகார் ஆணையங்களை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப் போகிறதா என்பது தெரியவில்லை.

தமிழ்நாடு காவல் துறை சீர்திருத்த சட்டத்தில், புகார் ஆணையங்களின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, வேறு பிரச்னைகளும் உள்ளன.

தற்போதைய சட்டப் பிரிவின் படி, பாதிக்கப்பட்ட நபர் அல்லது உறவினர், காவல்துறையினர் குறித்த புகார் அளிப்பதன்றால் அது நோட்டரி பப்ளிக் (நன்னடத்தை அலுவலரால்) சான்றொப்பமிட்ட வாக்குமூலம் வடிவில் இருக்க வேண்டும். மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே, புகார் ஆணையம் அதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். இந்த நடைமுறைகள், புகார் அளிக்க முன்வருபவரை ஊக்கமிழக்கச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, புகார் ஆணையங்களின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டு சட்டத்திலோ, பரிந்துரையின் மீது அரசு நடவடிக்கை எடுப்பது கட்டாயமாக்கப்படவில்லை. இவ்வாறு செய்யப்படாவிட்டால், புகார் ஆணையங்களால் பயனேதும் விளையப்போவதில்லை. 

இந்த பின்னணியில், காவல் துறை சீர்திருத்தங்கள் குறித்து, ஒரு மைல்கல்லாக விளங்கும் செப்டம்பர் 22, 2006 தீர்ப்பின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வது நமக்கு உதவும். 
  
சீர்திருத்தங்களின் தேவை:

பொதுமக்கள் அளிக்கும் நியாயமான புகார்களைப் பதிய மறுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது தொடங்கி, ஆளுங்கட்சிகளின் கைப்பாவையாக மாறுவது, போலி `மோதல் சாவுகள்’, காவல் நிலைய பாலியல் வல்லுறவு உள்ளிட்ட அப்பட்டமான, கொடூரமான மனித உரிமைகள் மீறல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் காவல் துறை மீது இருந்து வருகிறது.

1861ஆம் ஆண்டு காவல் துறை சட்டம், காலனியாதிக்க அடக்கமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இச் சட்டம் விடுதலை பெற்ற இந்தியாவின், ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலைமைகளை மாற்றும் நோக்கில், ஜனதா கட்சி ஆட்சிக்காலத்தில் 1977ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது தேசிய காவல் ஆணையம் (National Police commission). இது எட்டு அறிக்கைகளை சமர்ப்பித்தது.

சுதந்திர இந்தியாவில், பிரிட்டிஷ் காலனியாதிக்க அடக்குமுறை நடைமுறைகளை கைவிடுவது தொடங்கி அடிநிலைக் காவலர்களின் பணிநிலை, ஊதிய விகிதம், தேர்வு, காவலர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் பரிந்துரைகளை வழங்கியது அந்த ஆணையம். 

தேசிய காவல் ஆணையத்தின் பரிந்துரைகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகள், சட்டக் கமிஷன், ரிபைரோ கமிட்டி, பத்மநாபய்யா கமிட்டி, குற்றவியல் நீதி அமைப்பு பரிந்துரைகள் குறித்த மாலிமத் கமிட்டி ஆகியவற்றை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் செப். 2006ல் தனது தீர்ப்பில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கிடையில், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான சோலி சோராப்ஜி தலைமையிலான குழு மாதிரி போலீஸ் சட்டத்தை வடிவமைத்து மாநில அரசுகளுக்கு சுற்றுக்குவிட்டது. இவற்றை ஆராய்ந்து மாநில அரசுகள் காலனியாதிக்க போலீஸ் சட்டத்துக்கு பதில் மாற்று சட்டத்தை இயற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தன.

அந்த வகையில் தமிழ்நாடு அரசும், காவல் துறை (சீர்திருத்த) சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், இந்த சட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்  அடிப்படை நோக்கை நீர்த்துப் போகும் வகையில் அமைந்தன.
 
உச்ச நீதிமன்றத்தின் முதல் வழிகாட்டு நெறிமுறை- மாநில பாதுகாப்பு ஆணையம் அமைப்பது- காவல்துறை நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமையவும், மாநில அரசின் சட்டவிரோத நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல், நாட்டின் அரசியல் சட்ட விழுமியங்களின் அடிப்படையில் காவல் துறை செயல்படுவதை உறுதி செய்ய சட்டப்பூர்வ மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இந்த கண்காணிப்பு அமைப்பு முதல்வர் அல்லது காவல் துறை அமைச்சர் தலைமையில் காவல் துறை இயக்குநரை செயலராகக் கொண்டு செயல்பட வேண்டும். அரசின் கட்டுப்பாடின்றி காவல்துறை சுயேச்சையாக செயல்படும் வகையில் இந்த ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் அரசைக் கட்டுப்படுத்துவதாக அமைய வேண்டும். பரந்த கொள்கைகளை உருவாக்குவது, காவல்துறையின் செயல்பாட்டை திறனாய்வு செய்வது, காவல் துறை குறித்து, சட்டப்பேரவையின் பரிசீலனைக்கு அறிக்கைகள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும். இந்த ஆணையத்தின் உறுப்பினர்களை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரிபைரோ கமிட்டி, சோராப்ஜி கமிட்டி ஆகியை அளித்துள்ள மாதிரிகளிலிருந்து எதையாவது ஒன்றை பின்பற்றி நியமிக்கலாம். மூன்று குழுக்களின் பரிந்துரைகளிலும் பொதுவாக இடம் பெற்றிருக்கும் சில அம்சங்கள்- முதல்வர் அல்லது காவல் துறை அமைச்சர் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமைச் செயலர், டி.ஜி.பி ஆகிய அலுவலர் சார் உறுப்பினர்கள், பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள், நேர்மை-திறமை கொண்ட சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோரை இந்த ஆணையம் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் - மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையின் உணர்வுக்கு எதிராக, இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவது கட்டாயமாக்கப்படவில்லை. 

மேலும், ஆணைய உறுப்பினர்கள் நியமனம் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த எந்த ஒரு மாதிரியையும் பின்பற்றி அமையவில்லை. உள்துறை அமைச்சர் (தமிழ்நாட்டில் முதல்வரே உள்துறையை கவனிக்கிறார்) தலைமையிலான இந்தக் குழுவில் சுயேச்சை உறுப்பினர்களோ, ஓய்வுபெற்ற நீதிபதிகளோ உறுப்பினராக வழி இல்லை. எதிர்க்கட்சித் தலைவரும் ஓர் உறுப்பினர் என்றாலும், தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆணையக்கூட்டங்களில் பங்குபெறாத நிலையே தொடர்கிறது.

மேலும், தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி போலீஸ் வாரிய உறுப்பினராக இருக்க வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என மத்திய அரசு அனுப்பிய மாதிரி மசோதாவில் உள்ளன. தமிழக அரசின் சட்டத்தில் இந்த அம்சங்கள் இடம் பெறவில்லை.
  
டிஜிபி தேர்வும், குறைந்தபட்ச பணிக்காலமும்:

உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்-பணிக்காலம், பணியில் சிறந்து விளங்கியது, காவல் துறையின் பல பிரிவுகளில் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், முதுநிலையில் உள்ள மூன்று அதிகாரிகளின் பட்டியல் மத்திய தேர்வாணையத்தால் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அளிக்கப்படும். இப்பட்டியலிலிருந்து மாநில அரசு ஒருவரை டிஜிபியாக தேர்வு செய்யலாம். அவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து டி.ஜி.பி. பதவி வகிக்க வேண்டும். அனைத்திந்திய போலீஸ் சேவை விதிகளின்படி அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டாலோ, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலோ, ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவோ, அவர் பணிகளைச் செய்ய முடியாமல் போனாலோ மட்டும், மாநில பாதுகாப்பு ஆணையத்துடன் கலந்தாலோசித்து டிஜிபியை பணியிலிருந்து விடுவிக்கலாம். இல்லையெனில் அவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

இதே போன்று ஐ.ஜி. முதல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வரை குறைந்தபட்சம் ஓர் இடத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மேற்கண்டது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டும் அவர் இடமாறுதல் செய்யப்படவேண்டும்.

மாநில சட்டம்- காவல்துறைத் தலைவரின் ( டி.ஜி.பி) பதவிக்காலம் குறைந்தது இரு ஆண்டுகளாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு கூறிய மூன்று அதிகாரிகள் பட்டியல் என்பதற்கு பதில் ஐந்து அதிகாரிகள் பட்டியலில் இருந்து டி.ஜி.பியை தேர்வு செய்யலாம் என்கிறது. மேலும், “பிற நிர்வாக காரணங்களுக்காக (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே) விடுவிக்கப்படலாம்’ என்ற விதி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

தனித்தனியாக பிரிப்பது- காவல் துறையின் விசாரணைப் பிரிவையும், சட்டம்-ஒழுங்குப் பிரிவையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்ற ஆணைக்கு ஏற்ப, காவல்நிலைய அளவில் அந்தப் பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் மற்றொரு உத்தரவுப்ப படி நான்கு படிநிலைகளில் காவல் பணிநிலை வாரியங்கள் அமைக்க தமிழ்நாடு சட்டம் வழி செய்திருந்தாலும், அதன் அமைப்பு, உறுப்பினர்கள் விவரம் சட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் தாண்டி, காவல் துறையை மக்கள் காவல் துறையாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com