எரியும் இலங்கை: ஈழத்தமிழர்களுக்குச் செய்ய வேண்டியவை; நேரடி ரிப்போர்ட் - 30

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: ஈழத்தமிழர்களுக்குச் செய்ய வேண்டியவை; நேரடி ரிப்போர்ட் - 30

இறுதியாக இலங்கை பயணத்தின் போது நான் பார்த்ததும் அறிந்ததும் சிலவற்றை சொல்லியுள்ளேன்.

இரண்டாவது பதிப்பாக ஈழத்தமிழர் பிரச்னை  தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் என்னுடைய மறுபதிப்பு நூல்கள் வர இருக்கின்றது. அதில் விரிவாக ஈழத்தமிழர்கள் பிரச்சனை பற்றி சொல்லி இருக்கிறேன்.

இனி இலங்கையில் என்னவென்று பார்த்தால்; ஒருபக்கம் பொருளாதார சிக்கல்களில் மக்கள் அங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அம்மக்கள் மேம்பட வேண்டும், மீண்டுவர வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை. அதேநேரம் ஈழத் தமிழர்கள் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடியதற்கான நோக்கத்தையும், அவர்களுடைய தேவையையும் நாம் மறந்து விடக்கூடாது. மலையகத் தமிழர்களும் சிக்கலில் தான் உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண்டி உயர்குல சிங்கள வம்சாவளியான மிலிந்த மொரகொட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள். ஸ்ரீமாவோ குடும்பம் சீனாவுடன் மிகவும் ஐக்கியமாகவும் நெருக்கமாகவும் இருந்தார்கள் என்பதே நிதர்சனம்.

அன்றைய காலத்தில் சீனா ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவை அழைத்து மிகப்பெரியதொரு வரவேற்பை செய்திருந்தார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும். ஆகையால் சிங்கள கொய்கம உயர்குலத்தைச் சார்ந்த கண்டி சிங்களவர்கள் மதரீதியாக இன்றும் பௌத்த நாடாக (வெளிப்படையாக இல்லாவிடினும் ) சீனாவுடன் மிகவும் ஐக்கியமாக இருப்பர்.

தமது தேவைகளை காலத்துக்கு காலம் நிறைவேற்றிக் கொள்ள இந்தியாவை பயன்படுத்தி வந்தார்கள் என்பதே கடந்த காலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகள்.

பிரித்தானிய காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாறிய ஒருவராக இவரது குடும்பம் காணப்படுகின்றது . தேவை ஏற்படுகின்றபோது நிறம் மாறுகின்ற பச்சோந்திகள் போன்றவர்களால் மட்டுமே காலத்திற்கு காலம் மதம் மாறவும் தமது கொள்கைகளை மாற்றி பயணிக்கவும் முடியும் .

இந்தியா பாரம்பரிய பண்பாட்டு தொன்மங்களுடன் கூடியவாறு பல்வேறு மொழிகளையும் மதங்களையும் சாதியங்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் பார்க்க மிகவும் பழமையான நாடாகவும் உலக நாடுகளுக்கு பண்பாட்டினை கற்றுக்கொடுத்த நாடாகவும் உள்ளது .

அதேபோல இலங்கையில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் வடக்கு கிழக்கு வரலாற்று தாயக பிரதேசங்களை கொண்டு வாழ்ந்து வருகின்றவர்களாக இருப்பதுடன் நீண்டதொரு பாரம்பரிய பண்பாட்டு மக்களாகவும் இன்றைய உலகில் வாழ்கின்ற மொழிகளின் ஆதிமொழிகளில் ஒன்றான தமிழ்மொழியை தமது தாய்மொழியாக கொண்டு வாழ்ந்துவருகின்ற மக்கள் கூட்டமாகவும் உள்ளார்கள்.

இந்தியாவின் பண்பாட்டு விழுமியங்களுக்குள் இந்தியாவின் வரலாற்று பாரம்பரியத்தை புரிந்துகொள்ள கூடியவர்களாக காலத்திற்கு காலம் அரிதாரம் பூசும் மிலிந்த மொரகொட போன்றவர்களால் இணைந்து இந்திய தேசியநலன் கோட்பாட்டு வட்டத்திற்குள் அல்லது பௌத்தமத பண்பாட்டு வட்டத்திற்குள் பொருந்திக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.

மிலிந்த மொரகொடாவின் தந்தை அன்றைய காலத்தில் அமெரிக்காவுடன் (1976-1982) நெருங்கிய உறவை கொண்ட ஒருவராகவே காணப்படுகின்றார் அமெரிக்காவின் விருப்பிற்குரியவர்களாக இருந்துகொண்டு காலத்திற்கு காலம் மாறுகின்ற வம்சாவளி பாரம்பரியத்தில் வந்த ஒருவரால் எப்படி நீதியாக ஒருவராக செயற்படமுடியும் என்பது கேள்விக்குறியே.

ஏற்கனவே இவரை பற்றிய நிதிமோசடி குற்றச்சாட்டுகள் உள்ளபோதும் இலங்கையில் இவருக்கு இருந்த அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி வெளியேறி இன்று ஒரு பதவியில் அமர்ந்துகொண்டு உள்ளார். இன்றைய இந்திய மத்திய அரசு மிகவும் நீதியானதும் சுத்தமான நபர்களை தன்னகத்தே கொண்டு வெளிப்படையான முறையில் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காத மேன்மையான நபர்களையே உயர்மட்டத்தில் பதவியமர்த்தியுள்ளபோது மிலிந்த மொரகொட போன்ற சந்தேகத்திற்குரிய நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகின்ற ஒருவரை சமமேடையில் அமர்த்தி பேசுவது இந்தியாவின் தூய்மையான தோற்றத்திற்கு ஏற்புடையாகாது என்பதே நிதர்சனம்.

மிலிந்த மொரகொட போன்ற நபர்கள் இந்தியாவிற்கும் இந்திய தேசியபாதுகாப்பிற்கும் ஈழத்தமிழர்களின் நலனையும் மனதில் நிறுத்தி செயற்படுவாரா என்ற சந்தேகமே. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை காலத்திற்கு காலம் மாற்றமடையாத ஆணித்தரமாக தமது மொழியை இருக்க பற்றியவர்களாக தமது பூர்வீக நிலத்தை பாதுகாக்க தமக்குள்ள மக்களின் எண்ணிக்கையில் அதிகளவான மக்களை இனவழிப்பிற்கு யுத்தத்திற்குள் சிக்கிய மக்களாக உள்ளார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு திட்டமிட்டு ஈழத்தமிழ் மக்களை இனவழிப்பிற்கு உட்படுத்தியபோதும் இன்றுவரை தமது கொள்கையுடன் உறுதியாக நிற்கின்ற மக்களுடன் இந்தியா இணைந்து பயணிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஈழத்தமிழர்களின் நியாயமான தியாகத்தை புரிந்துகொள்ளவும் முயற்சியெடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் மீதான தனது கரிசனையை வெளிப்படுத்த இந்தமாதம் நிகழ்விருக்கின்ற மனிதஉரிமைகள் சபையின் கூட்டத்தில் நடுநிலைமை வகிக்காமல் இலங்கையின் மீதான எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக தமது வாக்கினை செலுத்த இந்தியா முன்வர வேண்டும்.

ஈழத்தமிழர்கள் பொறுத்தவரை கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் வருமாறு;

 _ ஈழத்தில் இன அழிப்பு, இனப்படுகொலை குறித்து சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அந்த விசாரணைக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். இது ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ளது.

 _ சுயநிர்ணய உரிமை ஒரு தேசிய இனம் அழிக்கப்படும் போது அந்த இனம் உரிமை பெற உரிமை உண்டு. அதன்பொருட்டு ஈழத் தமிழர்களின் மத்தியில் அவர்களின் அரசியல் தீர்வுக்கு விருப்பம் என்ன என்பதை அறிய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அந்தப் பொது வாக்கெடுப்பு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், அயலக பொறி முறையில் நடத்தப்பட வேண்டும். இலங்கை அரசிடம் அந்த பொறுப்பை வழங்கக்கூடாது.

 _ முள்ளிவாய்க்கால் இறுதி போரின் போது கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

 _ ஈழப்போர் முள்ளிவாய்க்காலில் நடந்த போது காணாமல் போனவர்களின் தகவல்களை ஆராய்ந்து, கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும்.

 _ போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கை ராணுவம் வடக்கு கிழக்கு மாநிலங்களில் இலங்கை ராணுவம் தேவையில்லாமல் இருக்கின்றது. இந்தப் பொருளாதார சிக்கல் நிலையிலும் ராணுவத்திற்கு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் ராணுவத்தை அங்கிருந்து உடனே திரும்பப் பெற வேண்டும். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஈழத்தமிழர்கள் பீதிக்கு உட்பட்டு உள்ளார்கள்.

 _ இந்திய அமைதிப்படை சென்றபோதும், பின் முள்ளிவாய்க்கால் போரின் போதும் கணவர்களை இழந்து விதவைகளாக இருப்பவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை தீட்டி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 _ இந்திய அரசு வழங்கிய நிதியிலிருந்து மறுவாழ்வு திட்டம், வீடுகள், பள்ளிக்கூடம், விவசாயிகளுக்கு டிராக்டர் போன்று பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதா என இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

 _  ஈழத்தமிழர்களின் விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்கள ராணுவம் அபகரித்துக் கொண்டிருக்கிறது. அதைத் திரும்பப் பெற்று ஈழத்தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

 _ சைவமும், தமிழும் வளர்ந்த இடம் ஈழம். அங்கே இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு புத்த விகார்கள் திடீரென்று எழுப்பப்படுகின்றன. அது தடுக்கப்படவேண்டும். திருக்கோணமலை மற்றும் மன்னாரிலும் உள்ள ஈஸ்வர ஆலயத்தில் ஆக்கிரமிப்புகளும், சைவத்துக்கு புறம்பான நடவடிக்கைகளும் உள்ளன. அது தடுக்கப்பட வேண்டும்.

 _  வடக்கு கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களை காலனிபடுத்துவது அறவே தடுக்க வேண்டும்.

 _ முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த நந்திக் கடலும், முள்ளிவாய்க்கால் பகுதிகளிலும் அமைதிச் சின்னங்களாக பராமரிக்கப்பட வேண்டும்.

 _  தமிழக மீனவர் பிரச்சனை, கச்ச தீவு, மற்றும் தமிழக - இலங்கை மீனவர்கள் சிக்கல்கள் உள்ளன. இந்து மகா சமுத்திர பிரச்சனைகள், சீனா ஆதிக்கம் என்பதையும் முக்கியமாக தீர்க்க பட வேண்டும்.

தமிழகத்திலிருந்து கச்சதீவு, இலங்கைக்குள் வந்ததல்ல. இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளி மலையக தமிழர், தமிழகத்துக்குள் நாடு கடத்தப்பட்டதுதான் சோகம்.

இந்திய வட எல்லையில் பாகிஸ்தான், சீன முரண்பாடுகள் யுத்தம்வரை போயின. ஆகவே தென் எல்லையை நட்பாக வைத்துக்கொள்ள வேண்டிய பூகோள தேவை இந்திய அரசுக்கு இருந்தது. அதை சூழ்ச்சியாக பயன்படுத்தியவர், இலங்கையின் அன்றைய பிரதமர் சிறிமாவோதான்.

1974ல் சிறிமா-இந்திரா உடன்படிக்கையின்படி, கச்சதீவு இலங்கை கடல் எல்லைக்குள் இடம்பெற இணங்கி இந்தியா, இலங்கையை மகிழ்ச்சி படுத்தி, அதன் பூகோள தேவையை நிறைவேற்றியது.

இதற்கு 10 வருடங்கள் முன், இதே இலங்கை பிரதமர் சிறிமா, 1964ல் இந்திய பிரதமர் சாஸ்திரியை ராஜதந்திரமாக கையாண்டு, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாட்டிற்காக உழைத்து, ஓடாய் தேய்ந்து போன, மலையக மக்களை நாடு கடத்தினார்.

அதற்கு 10 வருடங்கள் முன் 1954ல், பிரதமர்கள் நேரு - கொத்தலாவலை ஒப்பந்தத்தில் இப்படி இந்திய வம்சாவளி மக்களை "பலவந்தமாக" பெற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நேரு கூறி இருந்தார்.

ஆனால், பின் 1961-ல் நேருவின் அந்தக் கொள்கையை கைவிட்டு, பிரதமர் சாஸ்திரி காலத்தில், மலையக மக்கள், இந்தியாவுக்கு அனுப்பப்பட இணங்கி, இலங்கையை மகிழ்ச்சிபடுத்தி தமது பூகோள தேவையை சிறிமா நிறைவேற்றினார்.

இதனால் மலையகத்தில் இன்றைய இலங்கை நாடாளுமன்றத்தில் சுமார் 15 எம்பிக்களாக இருந்திருக்க வேண்டிய மலையக தமிழர் அரசியல் பலம் சுமார் 10 ஆக குறைந்து போனது. இலங்கையில் ஒட்டு மொத்த தமிழர் அரசியல் பலமும் குறைந்து போனது.

இப்படியான பல்வேறு கோரிக்கைகளை, ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன்களை கவனத்தில் கொண்டு இந்திய அரசு இதற்கான பணிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் இதற்கான அங்கீகாரத்தை சர்வதேச நாடுகளின் ஆதரவை ஏற்படுத்த வேண்டும்.

இந்தப் பிரச்னை குறித்து இரண்டு முறை டெசோ அமைப்பு அமைக்கபட்டபோது அதில் முக்கிய பங்காற்றதியதுடன் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டவற்றை தயாரித்தவன் என்கிற முறையில்  முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, முதல் டெசோ மாநாடு மதுரையில் நடந்த போதும், இரண்டாவது டெசோ மாநாடு சென்னையில் நடந்த போதும் பணியாற்றியதற்காக என்னைப் பாராட்டியதும் உண்டு.

இறுதியாக 2011, 2012-இல் இரண்டாவது டெசோ கூட்டங்கள் நடந்தபோது, சென்னையில் மாநாடு நடத்தி அந்த தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டு, அதனை மு.கருணாநிதி  படிப்பதற்காக ஆங்கிலத்தில் தயார் செய்து ஆதாரங்கள் மற்றும் தரவுகளை வழங்கியவன் என்ற முறையில் ஒரு சில கருத்துக்கள் சொல்லியாக வேண்டும்.

நாங்கள் தயாரித்த கடிதங்கள் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்  நியூயார்க்கில் உள்ள ஐ.நா மன்றத்திற்கும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆனையத்திற்கும் கொண்டு சென்றுள்ள நிகழ்வுகள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்ததுண்டு.

தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்ததினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் என்னுடைய மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் டெசோ அமைப்பின் கருத்துக்களை ஐ.நா. ஆண்டறிக்கையில் அதிகார பூர்வமாக வெளி வந்ததெல்லாம் நடந்த செய்திகள். 

அதேபோல நான் ஐ.நா மன்றத்திற்கு எடுத்துச்சென்ற மனுவை நான் நூல் வடிவில் கொண்டுவந்தேன் அதற்கு  மு.கருணாநிதி அணிந்துரை வழங்கினார்.

ஈழத்தமிழர்களின் பிரச்னையில் என்றும் ஒன்று போல என்னுடைய குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. 1979இல் இருந்து இன்று வரைக்கும் அந்தக் கருத்தில் மாற்றமில்லை. சில நேரங்களில் தலைமையின் கீழ் பணியில் இருப்பதால் என்னால் பேச முடியவில்லை. இருந்தாலும் தினமணி செய்தித்தாளில் அவ்வப்போது என்னுடைய கருத்துக்களை கட்டுரை வடிவில் இது குறித்து பகிர்ந்துள்ளேன். இப்படித்தான் தொடர்ந்து என்னுடைய பணிகள் இருக்கின்றன. 

இவையாவும் பதவியை நோக்கி அல்ல. இந்தப் பணிகளைத் தவிர வேறு என்ன அரசியல் பணிகள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com