திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் முத்திரை பதிக்கும் வடமாநிலப் பெண் தொழிலாளர்கள்

திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தித் தொழிலிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்கள்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்கள்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தித் தொழிலிலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் ஏறக்குறைய 60 சதவீதம் திருப்பூரில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஏற்றுமதி மூலமாக ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடியும், உள்நாட்டு வர்த்தகம் மூலமாக ரூ.35 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.68 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலில் நேரடியாக 6 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள்

இந்தத் தொழிலில் தமிழகம் மட்டுமின்றி பிகார், ஒடிஸா, மேற்குவங்கம், ராஜஸ்தான், அசாம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களைத் சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் வடமாநிலத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த தொழில்களில் சிறியதும், பெரியதுமாக 20 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. நிட்டிங், டையிங், எம்பிராய்டிங், காம்பேக்டிங், கட்டிங்,  ஸ்டிச்சிங், அயனிங், பேக்கிங் என்ற பல பிரிவுகளைக் கொண்டது.

வடமாநில பெண் தொழிலாளர்கள் வருகை

திருப்பூர் பின்னலாடை உற்பத்தித் தொழிலுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வடமாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். இந்தத் தொழிலாளர்களுக்கு அவர்களது மாநிலங்களிலேயே சமர்த் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக 3 மாதங்கள் வரையில் இலவசமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பிறகு தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் உதவியுடன் திருப்பூருக்கு வந்து பின்னலாடை நிறுவனங்களில் பணியில் சேருகின்றனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம்.

ஏற்றுமதி நிறுவனங்களில் தங்குமிடம் இலவசம்

அதிலும் பெரும்பாலும் ஏற்றுமதியைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில்தான் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் இலவசமாக தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படுவதுடன், மூன்று வேளை உணவுக்கும் சேர்த்து மாதம் ரூ.1000 முதல் ரூ.1,500 வரையிலேயே ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனர். மேலும், அவர்கள் தங்குமிடத்தில் முழுப்பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், வர விடுமுறை நாள்களில் நிறுவனங்கள் சார்பிலேயே வாகனங்களில் சென்று அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிவரவும் சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றன.
 
மாதம் ரூ.12 ஆயிரம் வரையில் ஊதியம்

திருப்பூருக்கு போதிய அனுபவம் இல்லாமல் வரும் பெண் தொழிலாளர்கள் முதலில் உதவியாளர்களாக (செக்கிங், கைமடி) பணியில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு ஷிப்ட்டில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் பணியாற்றினால் ரூ.220 முதல் ரூ.280 வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. சில நாள்களில் 2 ஷிப்ட் கூட பணி வழங்கப்படும். மேலும் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் என 6 நாள்களுக்கு பணியாற்றினால் ரூ.2,500 வரையில் ஊதியம் பெறலாம். அதே வேளையில், கைமடியில் இருந்து தொழில் நுணுக்கங்களைக் கற்று டெய்லராகப் பணியில் சேர்ந்தால் ஷிப்ட் ஒன்றுக்கு ரூ.350 முதல் ரூ.420 வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதிலும், அனுபவம் அதிகரிக்கும்போதும், வேறு நிறுவனங்களுக்கு  இடம் பெயரும் போதும் கூடுதலாக ஊதியத்தைப் பெறலாம். மேலும், ஒரே நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணியாற்றும்போது ஷிப்ட்டுக்கு 10 ரூபாய் சேர்த்து வழங்கப்படுகிறது.

பணியில் முழு சுதந்திரம்

திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முழு அளவில் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் பணியில் செய்யும் சிறு தவறுகளைக்கூட சூப்பர்வைசர்கள் நிலையிலேயே சரி செய்து கொள்கின்றனர். அதே வேளையில், உடல் நிலை சரியில்லாமல் போனால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது பயணப்படிகள் வழங்குவது, தீபாவளி பண்டிக்கைக்கு கூடுதல் போனஸ் தொகை வழங்குவது போன்ற பல்வேறு சலுகைகளும் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகிறது. 

இதன் மூலமாக பெற்றோர்கள், குடும்பத்தினரைப் பிரிந்து பல கிலோ மீட்டர் தொலைவில் பணியாற்றி வந்தாலும் எங்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது என்கின்றனர் இங்கு பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள்.

பெரிய நகரமாக உருவெடுக்க தொழிலாளர்களே காரணம்

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: இந்தியா முழுவதிலும் உள்ள வேலைதேடும் நபர்கள் சங்கமிக்கும் தலமாகவே திருப்பூர் விளங்குகிறது. நம் நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொழிலாக ஆடை உற்பத்தித்துறை திகழ்ந்து வருகிறது. 

திருப்பூர் மாநகரமானது முழுக்க முழுக்க வெளிமாநிலத் தொழிலாளர்களே அதிக அளவில் குடிபெயர்ந்து பின்னலாடை உற்பத்தித்துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நகரில் ஆரம்ப காலகட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர்களே வசிக்கக்கூடிய நிலையில் இருந்து தற்போது 20 லட்சம் பேர் வசிக்கும் பெருநகரமாக மாறியுள்ளதற்கு தொழிலாளர்களே காரணம். இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தும் ஆணோ, பெண்ணோ திருப்பூர் வந்தால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்தத் தொழில் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தொழிலுக்கு பல்வேறு காலகடங்களில் பல இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை முறியடித்து மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழிலில் ஈடுபடுவதுதான் மிகவும் முக்கியமான காரணமாகும். இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆரம்ப காலகட்டங்களில் உதவியாளர்களாக (ஹெல்பர்) பணியைத் தொடங்கி டெய்லர், சூப்பர்வைசர், மேலாளர், உரிமையாளர் என்ற பல்வேறு நிலைகளுக்குச் செல்கின்றனர். திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு தற்போது பெண்களும் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் முன்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெளிமாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். திருப்பூர் பின்னலாடைத் துறையைக் குறித்து நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு இங்கு வந்து பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்கள்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்கள்.

இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் அவர்களது தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்கமுடியவில்லை என்றாலும் கூட அடிப்படை வசதிகளான குடியிருப்புகள், குறைந்த விலையில் 3 வேளையும் உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கிறது. மேலும், இங்கு இனமோ, மதமோ, ஜாதியோ எந்தவிதமான பாகுபாடும் பணியாற்றும் நிறுவனங்களில் இல்லை என்பதால் இங்கு பணிபுரிய தொழிலாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 

இதற்கு எடுக்காட்டாக வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ஒவ்வொரு ரயில்களிலும் 200 முதல் 300 தொழிலாளர்கள் வந்து கொண்டிருப்பதை ரயில் நிலையத்துக்குச் சென்றால் நாம் காணலாம். திருப்பூருக்கு பிழைப்புத் தேடி வரும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது என்றார்.

ஆகவே, சர்வதேச மகளிர் தினத்தில் (மார்ச் 8) திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் வடமாநிலப் பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com