மனிதகுல இன்னல்களுக்கு எதிரான புரட்சியாளர் ரோசா லக்ஸம்பர்க்

ரோசா லக்ஸம்பர்க்...பெண் விடுதலையைத் தாண்டி ஒட்டுமொத்த மனிதகுல விடியலை வலியுறுத்தி செயல்பட்டு மடிந்த ஒரு சோசியலிஸ்ட்.
ரோசா லக்ஸம்பர்க்
ரோசா லக்ஸம்பர்க்

வரலாற்றின் நெடுகிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டு வந்ததின் விளைவாக சோவியத் ரஷியாவில் நிகழ்ந்த சோசலிச அரசு மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் சர்வதேச மகளிர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு நாம் கொண்டாடும் சர்வதேச மகளிர் நாள் என்பதை உண்மையில் உழைக்கும் பெண்கள் நாள் என அழைப்பதே சிறந்ததாக இருக்கும்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 1908ஆம் ஆண்டு முறையான வேலை நேரம், சரியான கூலி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எழுந்த பெண்களின் பேரணிக்கு இதில் முக்கியப் பங்குள்ளதையும் புறந்தள்ள முடியாது. இவற்றுக்கு மத்தியில் இன்றைய நாளில் பெண் தலைவர்கள், ஆளுமைகள் நினைவுகூரப்பட்டாலும் அனைத்து மகளிருக்குமான விடுதலையாக இந்த நாள் இன்னும் மாறாமல் இருப்பதற்கான காரணத்தை ஆராய வேண்டியுள்ளது. 

பெண்களுக்காக ஆண்கள், பெண்களின் வெற்றிக்கு காரணமான ஆண்கள் என மறைமுகமாக பெண்களின் சாதனைகளின் மீது ஆண்களின் சாயம் தெளிக்கப்படுவதும், அவற்றின் மூலம் பெண்களின் பங்களிப்பை மட்டுப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இவற்றுக்கு மத்தியில் ஒடுக்கப்படும் அனைத்து  மனிதர்களுக்குமான பொன்னுலகக் கனவுகளை சுமந்து, அதனில் நின்று போராடி உயிர் நீத்த மாபெரும் பெண் ஆளுமையை இந்த நாளில் நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும். 

இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் நடந்த 1919ஆம் ஆண்டானது உலகம் முழுவதும் உள்ள சோசலிஸ்டுகளுக்கும், குறிப்பாக ஜெர்மன் சோசலிஸ்டுகளுக்கும் மறக்க முடியாததாக மாறக் காரணமானவர் ஒரு பெண்மணி...புரட்சியாளர்...

1919ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் பெர்லினில் உள்ள கால்வாயில் கடுமையான தாக்குதலுக்குள்ளான ஒரு பெண்ணின் சடலம் மிதந்து ஒதுங்கியது. உயிரைப் பறித்து அடக்க நினைத்த மனிதர்களின் பேராசைகளைப் புறந்தள்ளி இன்றுவரை தன்னுடைய எழுத்துக்களின் மூலமும், செயல்பாடுகளின் மூலமும் வாழ்ந்து வருகிறார் கால்வாயில் மிதந்து ஒதுங்கிய அந்தப் பெண்மணி. யார் அவர்?

2019ஆம் ஆண்டு ஜெர்மனி வீதிகளில் சோசலிசத்தை வலியுறுத்தியும், முதலாளித்துவ வன்முறைகளுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தியபடியும் முழக்கங்களை உரத்து எழுப்பிச் சென்ற மக்கள் நினைவுகூர்ந்தது ரோசா லக்ஸம்பர்க்கை. எந்தப் பெண்மணி தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்டாரோ அதே பெண்மணி 100 ஆண்டுகள் கழித்து அதேநாளில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பதாகைகளில் இடம்பெற்றிருந்தார்.

ரோசா லக்ஸம்பர்க்... பெண் விடுதலையைத் தாண்டி ஒட்டுமொத்த மனிதகுல விடியலை வலியுறுத்தி செயல்பட்டு மடிந்த ஒரு சோசியலிஸ்ட்.

ஜெர்மானிய மார்க்சியவாதியாக அறியப்பட்ட ரோசா லக்ஸம்பர்க் மார்ச் 5, 1871 ஆம் ஆண்டு போலந்தின் சாமொஸ்க்கில் பிறந்தார். ரஷியக் கட்டுப்பாட்டில் போலந்து இருந்தபோது ஜார் மன்னனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட தந்தையை பார்த்து வளர்ந்த ரோசா, இளம்வயதிலேயே போராட்ட குணங்களுடன் அடையாளம் காணப்பட்டார்.

தன்னுடைய 15 வயதிலேயே கம்யூனிஸ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ரோசா லக்ஸம்பர்க் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் முன்னெடுத்து நடத்திய பொது வேலை நிறுத்தப் போராட்டமொன்றினால் ஆத்திரமடைந்த அப்போதைய அரசு கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் 4 பேரை கொன்று அழித்தது. அதனைத் தொடர்ந்து கட்சி கலைக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தன்னை அரசியல் பணிகளில் இயக்கத்திலேயே வைத்துக் கொண்டார் ரோசா. கட்சித் தோழர்களை ரகசியமாக சந்தித்து கட்சியை மீட்டுருவாக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மாற்றுத்திறனாளியான ரோசாவின் எழுத்துகளும் பேச்சுகளும் ஜெர்மானிய தொழிலாளர்களிடையே புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்தன. தத்துவம், அரசியல், பொருளாதாரம் என தொடர்ச்சியான கற்றலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டு வலிமையான தலைவராக மாறினார் ரோசா லக்ஸம்பர்க். அரசியல் அழுத்தங்களால் 1889ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்ற  ரோசா சூரிச் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய உயர்கல்வியை முடித்தார். அங்கு லியோ ஜோகித்சேவை சந்தித்த ரோசா போலந்தில் தொழிலாளர்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை எதிர்த்து அரசியல் பத்திரிக்கை ஒன்றை நடத்தினார். அதில் முதலாளிகளால் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களையும், அவர்களின் உரிமைகளையும் வெளிச்சமிட்டுக் காட்டினார். 

தன்னுடைய இளம் வயதிலேயே நாடு அறியும் சோசலிஸ்ட்டாக தன்னை தயார்படுத்திக் கொண்டார் ரோசா லக்ஸம்பர்க். 1898ஆம் ஆண்டு ஜெர்மனியில் குடியேறிய ரோசா அங்கு சமூக ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசின் தொடர் அடக்குமுறைகளுக்கு எதிரான எழுத்துக்களை வெளிப்படுத்தி வந்த ரோசா ஜூனியசு எனும் புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். ஒருகட்டத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பின் சிறையிலடைக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய போர் குணத்தால் 6 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். நாளுக்குநாள் உடல் மோசமான நிலையை எட்டிக் கொண்டிருந்தது. அப்போதும் அவர் சக தோழரான கவுட்சிக்கு எழுதிய கடிதத்தில், “அனைத்தையும் துச்சமாகக் கருதுங்கள்...புரட்சி ஓங்கட்டும்” என முழங்கினார்.

கம்யூனிஸ்ட்டுகள் தீவிரவாதிகள், மனித அமைதிக்கு எதிரானவர்கள் என பொய்ப் பிரசாரங்கள் காலம்காலமாக எழுப்பப்பட்டு வரும் வேளையில் முதல் உலகப் போருக்கு எதிராக கடுமையாக தன்னுடைய வாதங்களை முன்வைத்தவராக இன்றும் அறியப்படுகிறார் ரோசா. முதலாளிகளின் இலாபத்திற்காக மக்கள் போர் எனும் பெயரில் பலியிடப்படுவதை ரோசா தீவிரமாக எதிர்த்தார்.

ரஷியாவில் நிலவிய அரசியல் சூழல் ஜெர்மனியையும் விட்டுவைக்கவில்லை. ரஷியத் தொழிலாளர்களின் போராட்டம் ஜெர்மனி தொழிலாளர்களின் மத்தியில் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. இதனால் அச்சமடைந்த அரசு முக்கியத் தலைவர்களை திட்டமிட்டு ரகசியமாகக் கொன்றது. ரோசா லக்ஸம்பர்க்கும் அரசினால் குறிவைக்கப்பட்டார். 1919ஆம் ஆண்டு கை, கால்கள் கட்டப்பட்டு பெர்லினில் உள்ள கால்வாயில் தூக்கி வீசப்பட்டார். பல மாதங்களாக அவரது உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

ரோசாவின் மரணம் ஜெர்மனி தொழிலாளர்களை வெகுவாக பாதித்தது. அவரின் ஜீரணிக்க முடியாத மரணம் இன்றைக்கும் தொழிலாளர்களை சோசலிசத்தை நோக்கி தயார்படுத்தும் எரிபொருளாக உள்ளது என்றால் மறுப்பதற்கில்லை.

சோசலிசத்தை நோக்கிய பயணத்திற்கு தொழிலாளர்களைத் தயார்படுத்துவதில் ரோசா லக்ஸம்பர்க்கின் எழுத்துக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக இடதுசாரிகள் கருதுகின்றனர். அவரின் எழுத்துகள் மாறிவரும் உலகைப் புரிந்துகொள்ள, அதனை அனைத்து மக்களுக்குமானதாக மாற்ற கை கொடுக்கும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com