மானாமதுரையில் தொழிலாளர்களாக வேலைசெய்து வருமானம் ஈட்டி சாதிக்கும் பெண்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செங்கல்சூளை, செங்கல் காளவாசல், மண்பாண்ட பொருள் உற்பத்தி தொழிலில்  ஈடுபட்டு, ஏராளமான பெண்கள், வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர். 
மானாமதுரையில் குலாலர் தெருவில்  உள்ள தொழில் கூடத்தில் சூளையில் வேக வைத்த மண்பாண்டப் பொருள்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்
மானாமதுரையில் குலாலர் தெருவில் உள்ள தொழில் கூடத்தில் சூளையில் வேக வைத்த மண்பாண்டப் பொருள்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்

இன்று மகளிர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது, பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செங்கல்சூளை, செங்கல் காளவாசல், மண்பாண்ட பொருள் உற்பத்தி தொழிலில்  ஈடுபட்டு, ஏராளமான பெண்கள், வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர். 

மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானத்திற்கு தேவையான செங்கல், சித்துக்கள் ஆகியவற்றின் தயாரிப்பு அதிகமாக நடக்கிறது. மேலும் மண்பாண்ட பொருள்கள் உற்பத்திக்கு பெயர் போன மானாமதுரையில் சீசனுக்கு தகுந்தவாறு பல பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த தொழில்களில் ஆண்கள் அதிகமாக ஈடுபடுவதை விட பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். 

மானாமதுரையில் சித்துக்கல் தயாரிக்கும் காளவாசலில் வேலை செய்யும் பெண்கள்
மானாமதுரையில் சித்துக்கல் தயாரிக்கும் காளவாசலில் வேலை செய்யும் பெண்கள்

மானாமதுரை பகுதியில் கல்குறிச்சி, ஆலங்குளம், சங்கமங்கலம், தீயனூர், உள்ளிட்ட பல கிராமங்களில் செங்கல் சூளைகள்,காளவாசல்கள் செயல்படுகின்றன. இங்கு  வேலைக்கு பெண்கள் அதிகமாக  ஈடுபடுத்தப்பட்டு இவர்கள் செங்கல், சித்துக்கல் போன்றவை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தப் பெண்கள் பல்வேறு மணல் வகைகளை ஒன்றாக பிசைந்து அதை காலால் மிதித்து கலவையாக்கி அச்சு மூலம் செங்கல் சித்துக்கல் தயாரித்து வெயிலில் காயவைத்து அதன் பின் சூளைகளில்  அடுக்கி நெருப்பு மூட்டி வேகவைத்து விற்பனைக்கு தயார்படுத்துகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் தினமும் கணிசமான தொகையை சம்பாதிக்கின்றனர். செங்கல்சூளை, காளவாசல் உரிமையாளர்கள் இந்தப் பணியில் ஆண்களை அதிகம் ஈடுபடுத்துவதை விட பெண்களை அதிகம் ஈடுபடுகின்றனர். மேலும் செங்கல் ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கொடுக்கும் உள்ளூர், வெளியூர் முகவரிகளுக்கு  லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செங்கல் லோடுகளை ஏற்றிச் சென்று இறக்கும் பணியையும் இங்கு பெண்களே செய்கின்றனர். இதற்காக இந்த பெண்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. 

சித்துக்கல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்
சித்துக்கல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்

இதுகுறித்து  பி.எஸ்.சி நர்சிங் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் மானாமதுரையில் சித்துக்கல் தயாரிக்கும் காளவாசலில் வேலை பார்க்கும் இலக்கியா கூறுகையில், பல ஆண்டுகளாக செங்கல் காளவாசல், சித்துக்கல் உற்பத்தி செய்யும் இடங்களில் வேலை பார்த்து வருகிறோம். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கட்டட வேலை உள்ளிட்ட பிற வேலைகளுக்குச் சென்றாலும் நாங்கள் இந்த வேளையில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறோம். இதற்காக எங்களுக்கு உழைப்பிற்கேற்ற சம்பளம் வழங்கப்படுகிறது. நாங்கள் ஈட்டும் வருவாய் குடும்பத்தின் கடன்களை அடைக்கவும் குடும்பம் நடத்தவும் உதவிகரமாக உள்ளது. ஆனால் எங்களது குழந்தைகளை  நாங்கள் செய்யும் இந்த வேலையில் ஈடுபடுத்தாமல் அவர்களை படிக்க வைத்து வருகிறோம். இதற்காக நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை செலவழிக்கிறோம் என பெருமையுடன் கூறினார். 

இதேபோல்  மானாமதுரையில் குலாலர் தெரு பகுதியில் சீசனுக்கு தகுந்தவாறு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தியில் பெண்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மண்பாண்ட பொருள் தயாரிப்பு வேலை செய்கின்றனர். தாங்கள் உற்பத்தி செய்யும் மண்பாண்ட பொருள்களை இவர்கள் நேரடியாகவும் இங்குள்ள மண்பாண்ட கூட்டுறவு சங்கம் மூலமும்  விற்பனை செய்கின்றனர். பல பெண்கள் மண்பாண்ட பொருள்கள் தயாரிக்கும் தொழில் செய்பவர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். மண்பாண்ட நேரடி தொழில் மூலமும் இத்தொழில் சார்ந்த பணியில் தினச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பதன் மூலமும் இந்த பெண்களுக்கு  போதுமான வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் மானாமதுரை குலாலர் தெருவில் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பில் உள்ள  பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அதன்மூலம் வங்கியில் கடன் பெற்று அதை முறையாக திரும்ப செலுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர். 

தற்போது செங்கல், சித்துக்கல் மற்றும் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பதற்கு தேவையான கரம்பை, சவுடு  மற்றும் ஆற்று மணல் கிடைப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளதால் இந்த மண் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக அரசு இந்த கட்டுப்பாடுகளை நீக்கி மேற்கண்ட மணல் வகைகளை தாராளமாக கிடைக்கச் செய்தால் மேற்கண்ட தொழில்கள் சிறந்து விளங்கி அதில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டி வாழ்க்கைத் தரம் மேலும் உயர உதவியாக இருக்கும் என மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com