படைத்து பாதுகாப்பவன் அல்லாஹ்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 30

வானையும் பூமியையும் படைத்த அல்லாஹ் பூமியில் வாழ்வதற்காக மனிதர்களைப் படைத்தான். ஆதம்நபி அன்னை ஹவ்வா தம்பதியிலிருந்து மனித இனம் உருவானது.
படைத்து பாதுகாப்பவன் அல்லாஹ்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 30

வானையும் பூமியையும் படைத்த அல்லாஹ் பூமியில் வாழ்வதற்காக மனிதர்களைப் படைத்தான். ஆதம்நபி அன்னை ஹவ்வா தம்பதியிலிருந்து மனித இனம் உருவானது. பூமியில் வாழ்வதற்காக மனிதனைப் படைத்தானா? மனிதன் வாழ்வதற்காக பூமியையும் பூமிக்கு மேல் முகடாக வானையும் படைத்தானா? வானமும் பூமியும் மனிதன் படைப்பதற்கு முன்னரே படைக்கப்பட்டவை. ஆயினும் வானமும் பூமியும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை என்று பகர்கிறது இகவாழ்வின் வழிகாட்டி குர்ஆனின் 40- 64 ஆவது வசனம், 'உங்களுக்காக அல்லாஹ் பூமியைத் தங்கும் இடமாகவும் வானை விதானமாகவும் உண்டாக்கி உள்ளான்'

படைத்த அல்லாஹ்தான் படைப்புகளைப் பாதுகாக்கிறான் என்பதை 34-21 ஆவது வசனம் உங்களின் இறைவனே எல்லாவற்றையும் பாதுகாப்பவன் என்று கூறுகிறது. அல்லாஹ் அகிலத்தையும் அகிலத்தில் உள்ள அனைத்தையும் பாதுகாக்கிறான். அனைத்தையும் கண்காணிக்கிறான். ஒன்றின் இருப்பைத் தக்க வைக்க மிக்க கண்காணிப்பும் பாதுகாப்பும் இன்றியமையாதவை. '12-64 ஆவது வசனம் பாதுகாப்பதில் மிக்க மேலானவன் அல்லாஹ். அருள்புரிபவர்களில் மிக்க மேலானவன் அல்லாஹ்வே' என்று அறிவிக்கிறது. அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து எதுவும் தப்ப முடியாது. வானங்களையும் பூமியையும் அவனே பாதுகாக்கிறான்.

யாகூப் நபியின் மகன்கள் அவர்களின் சகோதரன் புன்யாமினை மிஸ்ரு நாட்டிற்கு அழைத்துச் சென்று தானியம் வாங்கிவர அனுமதி கேட்டனர். அனுமதிக்க மறுத்த யாகூப் நபி அல்லாஹ் பாதுகாவலனின் மேன்மையை குறிப்பிட்டதைக் கூறுகிறது இவ்வசனம்.

இவ்வசனத்தில் வரும் அல்ஹபீழ் என்னும் அரபி சொல் அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று. இச்சொல்லுக்குத் தாழ செய்பவனே என்று பொருள். இதை ஒவ்வொரு நாளும் ஓதுபவர்களுக்கு பகைவர்களால் எதிரிகளால் கொடிய மிருகங்களால் எத்தீங்கும் ஏற்படாது. எதிரிகளே தாழ்வர் வீழ்வர் என்ற விளக்கத்தை நிரூபிக்கும் நிகழ்ச்சியை நேரில் காண வேண்டும் என்ற பேரவா துன்னூனில் மிஸ்ரீ (ரஹ்) என்ற பெரியாரிடம் பெருகி கிடந்தது.

ஒருநாள் அந்த பெரியார் நீல நதியோரம் நடந்து சென்றார். நண்டுதெறுக்கால் (நட்டு வாய்க்காலி) செல்வதைப் பார்த்தார். அது நதி கரையின் ஓரத்தில் இருந்த தவளையின் முதுகில் ஏறி நதியைக் கடந்தது. பெரியார் துன்னூனில் மிஸ்ரியும் படகில் ஏறி நண்டுதெறுக்காலைத் தொடர்ந்தார். கரையை அடைந்தார். மறுகரையில் ஓர் இளைஞன் தூங்கினான். பெரிய பாம்பு ஒன்று அவனை நெருங்கியது. நண்டுதெறுக்கால் பாம்புடன் சண்டையிட்டது. இரண்டும் செத்தன. இளைஞன் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டான். இதுதான் அல்லாஹ்வின் பாதுகாப்பு.

வானமும் பூமியும் அவற்றின் வரையறுத்த எல்லைகளில் வாகாய் செயல்பட வைப்பவன் அல்லாஹ் என்று அறிவிக்கிறது 35-41 ஆவது வசனம். இவ்விரண்டையும் பாதுகாப்பதில் இறைவனுக்கு எவ்வித சிரமமும் சிக்கலும் இல்லை. துல்லியமாக சோர்வின்றி கண்காணிக்கிறான். இப்பணி இறைவனுக்கு எளிது என்று இயம்புகிறது இப்னு கதீர் என்னும் குர்ஆன் விளக்க நூல். வானம் பூமியைப் பாதுகாக்கும் ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. பூமியில் அவனின் படைப்புகளையும் அவற்றின் வாழ்வு ஆதாரங்களையும் செயல்பாடுகளையும் செம்மையாக பாதுகாக்கிறான்.

அல்லாஹ் அடியார்களை அடக்கி ஆளுகிறான். மனிதர்களுக்குப் பாதுகாப்பையும் ஏற்படுத்துகிறான். மரணம் வரையிலும் மனிதர்களைப் பாதுகாக்கிறான் என்று பகர்கிறது 6-61 அவது வசனம். மரணத்திற்குப்பின் மறுமையிலும் இம்மையில் செய்த நற்செயல்களின் பயனால் நல்வாழ்வைப் பெறுவதும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் தான் உள்ளது. இம்மை மறுமை இரண்டிலும் இறைவனின் பாதுகாப்பு இன்றியமையாதது.

மனிதனுக்கு முன்னும் பின்னும் தொடர்வோர் அல்லாஹ்வின் கட்டளைப்படி மனிதனைப் பாதுகாக்கின்றனர் என்று எடுத்துரைக்கிறது 13- 11 ஆவது வசனம். அல்லாஹ்வின் ஆணைகளை ஏற்று வானவர்கள் மனிதனைப் பாதுகாக்கிறார்கள் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் எழில் மொழியை அறிவிக்கிறார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- ஜாமி உல் உலூம் வல்ஹகம். இந்நபி மொழி இவ்வசனத்திற்குரிய விளக்கமாக அமைகிறது.

ஒவ்வொர் ஆன்மாவும் அதன்மீது பாதுகாக்கக் கூடியவர் இல்லாமல் இல்லை என்று இயம்புகிறது 86- 4 ஆவது வசனம். இந்த வசனம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவன் விரிந்த பூமியில் பரந்து வாழும் ஒவ்வொருவரையும் அல்லாஹ் பாதுகாப்பதைப் பகர்கிறது. இறை விசுவாசிகளுக்கு அல்லாஹ் உதவியாளன் என்ற 47-11 ஆவது வசனம் ஏக இறைவனை ஏற்றவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் எந்நிலையிலும் பாதுகாப்பதைப் பகர்கிறது.

அல்லாஹ்வின் அரவணைப்பையும் பாதுகாப்பையும் பெற அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நற்செயல்கள் புரிய வேண்டும். வணக்க வழிபாடுகளை இணக்கமாக செய்ய வேண்டும். இறைவனின் நெருக்கத்தைப் பெறும் முறைகளை நிறைவாக குறையின்றி நிறைவேற்ற வேண்டும். செவியையும் பார்வையையும் பாதுகாப்பது, நாவடக்கம் பேணுவது, நல்லதையே எண்ணுவது அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்று தரும். அல்லாஹ்வின் பாதுகாப்பு பெற்றவரை வழி கெடுக்கும் சைத்தான் எளிதில் அணுக முடியாது.

தீங்கு தீண்டாது பாங்குற பண்போடு செயலாற்றி அங்கிங்கெணாது யாங்கனும் பரவியுள்ள படைத்தவனின் பாதுகாப்பைப் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com