சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா! ஏற்றுமதியை மேம்படுத்த வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா! ஏற்றுமதியை மேம்படுத்த வாய்ப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்பட்சத்தில் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சேலம் மாவட்டம் ஜவுளித் தொழிலில் முக்கியப் பங்களித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான நிலத்தைத் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.அழகரசன், செயலர் தா.சசிகுமார் ஆகியோர் கூறியதாவது:

இந்தியாவில் பருத்தி நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், ஆயத்த ஆடைகள்,  துணி என பருத்தி நூலை மூலப்பொருளாகக் கொண்டுள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறிக் கூடங்கள் முடங்கியுள்ளன.

பருத்திப் பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. ஒரு காண்டி (355.54 கி.கி.) பஞ்சு விலை ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பஞ்சு கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு பருத்தி விவசாயிகள் விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்திருப்பது காரணமாகக் கூறப்படுகிறது.

பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலையும் கிலோவுக்கு ரூ. 150 வரை உயர்ந்துள்ளது. இதனிடையே, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்துள்ளதை வரவேற்கிறோம்.

வர்த்தகம் ஊக்குவிப்பு: தமிழகத்திலிருந்து ஓராண்டுக்கு 3,000 கோடி டாலர் ஜவுளி ஏற்றுமதி நடந்து கொண்டிருக்கிறது. இதனை 2030-க்குள் 10 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விரைவில் நிலம் ஒதுக்க வேண்டும். இதன்மூலம் சாயப்பட்டறைக் கழிவுநீர் வெளியேற்றம், அதுதொடர்பான சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். 

இந்திய துணி உற்பத்தி, தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு துணி உற்பத்தியாளர்கள் செய்து வருகின்றனர். 

இதில் சேலத்தில் தயாராகும் சாயமிடப்பட்ட நூலில் நெய்த துணி உலக அளவில் பிரசித்தி பெற்றது.

ஏற்றுமதி வசதி: வங்கதேசம், இலங்கை, வியத்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு 90 சதவீதம் ஏற்றுமதி செய்கிறோம். குறிப்பாக, வங்கதேசத்துக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடல்வழிப் போக்குவரத்தில் பொருள்களைக் கொண்டு செல்ல 30 நாள்கள் வரை ஆகிறது. 

இதற்கென இரண்டு சரக்கு கப்பல்களைத் தடையில்லாமல் இயக்கினால், ஏற்றுமதி செய்யப்படும் துணிகள் வங்கதேசத்துக்கு 10 நாள்களில் சென்றடையும். இது தொடர்பாக தமிழக அரசு, மத்திய கப்பல் சரக்கு போக்குவரத்துத் துறையுடன் பேசி தீர்வு காண வேண்டும்.

பஞ்சாப் - லூதியானா, குஜராத் - அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்து ரயிலில் துணி கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல, சென்னையில் இருந்து வங்கதேசத்துக்கு இணைப்பு ரயிலை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இதன்மூலமாகவும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நிலம் தேர்வு செய்து அரசிடம் முறையாக ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து, பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும்' என்றனர்.

சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் உள்ள ஏராளமான விசைத்தறிகள், கைத்தறிகள் மூலம் லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். ஜவுளித் தொழிலில் ஏற்றுமதியை மேம்படுத்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை சுமார் 198 ஏக்கரில் அமைக்க நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

நூல் வர்த்தக அமைப்பு தேவை

நிலையான நூல் விலையை உறுதிப்படுத்தவும், தட்டுப்பாடின்றி நூல் கிடைக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும். இதற்காக நூல் வர்த்தக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பருத்தி விவசாயிகளின் மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு இந்திய பருத்தி நிறுவனம் மூலம் பருத்தி சேமிக்கப்படுகிறது. அந்த நிறுவனம் பருத்தி வர்த்தகம், கொள்முதல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதேபோல, நூல் வர்த்தகத்துக்கும் தமிழ்நாடு நூல் வர்த்தக அமைப்பை உருவாக்கினால், நூல் விலையில் பெரிய மாற்றம் வராமல் தடுத்து, ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கும், துணி உற்பத்தியாளர்களுக்கும் உதவ முடியும் என்கின்றனர் தொழில் துறையினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com